வினாதலும் விடுத்தலும்

1. அ) 'தமிங்கிலம்' என்ற சொல்லாட்சி சரியா? மேற்கோள் இடாமல் பயன்படுத்தலாமா?

ஆ) சாப்பாடு 'ஓக்காளிக்கிறது' என்ற சொல்லின் இலக்கண வடிவம் யாது? 'உவக்க அளித்தல்' என்ற சொல்லின் பேச்சுவழக்காக இருக்கும் என்பது என் கருத்து சரியா?

இ) 'ஒருக்களிச்சிப்படுத்தான்' என்ற தொடரில் 'ஒருக்களிச்சி' என்பது 'ஒரு கை அளித்துப்படுத்தான்' என்ற என் கருத்துச் சரியா? விளக்கவும்.
- அரங்க. இராமமூர்த்தி, காலாப்பட்டு.

அ) பிரமதேவன் (அப்படி ஒருவன் இருந்தால்) மக்களைப் படைக்கும் போது, தமிழன் தலையில் மட்டும் 'இவன் ஆங்கிலம் தான் நாகரித்தின் அடையாளம் என்று வெறிகொண்டு திரிவான்' என்று எழுதியிருப்பான் போலிருக்கிறது! ஒரு கல்லூரித் தமிழ்த்துறையில் தமிழில் ஆங்கிலத்தைக் கலக்காதீர்கள் என்று ஒரு மணிநேரம் பேசினேன். பேச்சு முடிந்தபின் தமிழ் மாணவன் ஒருவன் வந்து என்னிடம் "உங்கள் பேச்சு சூப்பரா இருந்தது சார்" என்றான்! படிக்காத நாட்டுப்புறத்து மக்கள் கூட இன்று "என்னடா முறைக்கிறே?" என்று கேட்பதை மறந்து "என்னாடா 'லுக்' உடறே?" என்கின்றனர். தமிழ்நாட்டில் தமிழும் ஆங்கிலமும் கலந்த ஒரு கலவை மொழி உருவாகிக்கொண்டிருக்கிறது. அதை உலகமுழுவதும் நம் தமிழர் தொலைக்காட்சிகள் பொறுப்பாகப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. அந்தப் புதிய மொழிக்குத்தான் தமிழ்ப்பற்றாளர்கள் 'தமிங்கிலம்' என்று பெயர் வைத்துள்ளார்கள். சிலர் 'தமிங்கிலீசு' என்கின்றனர். இதை விடத் 'தமிங்கிலம்' சரியான சொல்லாட்சிதான். பயன்படுத்தலாம்.

ஆ) உவக்க அளித்தல் என்பது மகிழ்வதற்காகக் கொடுத்தல் என்று பொருள்படும். ஓக்காளித்தல் என்பது உண்ணப்பிடிக்காத ஒரு பொருளை உண்ணவேண்டிவரும்போது குமட்டிக்கொண்டு வருதல். வெள்ளைப் பூண்டை மோந்தாலே எனக்கு ஓக்காளம் வரும் என்பார் சிலர். வாந்தி யெடுத்தல் என்ற பொருளிலும் ஓக்காளித்தலைப் பயன்படுத்துவர் வாந்தி அயற்சொல். ஓக்காளித்தல் என்பது இலக்கணமுடைய தமிழ்ச்சொல் தான். எனவே உவக்க அளித்தலின் மரூஉச் சொல் ஓக்காளித்தல் என்பது பொருந்தவில்லை.

இ) ஒருக்கணித்தல் - ஒருபக்கமாகச் சாய்தல். ஒருக்கணித்துப்படுத்தான் என்பது தான் ஒருக்களிச்சிப்படுத்தான் என்று பேசப்படுகிறது. ஒருக் கணித்தல், சிறக்கணித்தல், கடைக்கணித்தல் ஆகியவை நல்ல தமிழ்ச் சொற்களே. இவற்றை மரூஉச் சொற்களாகக் கருதத் தேவையில்லை. திரும்பிப்படுக்கும்போது தலையை ஒருகையில் வைத்தும் படுக்கலாம். தலையணையில் வைத்தும் படுக்கலாம்.

2. ஏழாம் வேற்றுமைத் தொகை வருமொழி வினையாயின் ஒற்று மிகாதென்பது விதி

'மாலை வாராராயினும்..... காலை காண்குவம்' - இது சிலப்பதிகாரம். ஆனால் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை நூலில் திருநாளைப் போவார் என்றுளதே எவ்வாறு? தெரிவிக்க வேண்டுகிறேன்.
- வேங்கடேசபாரதி.

நீங்கள் சொல்வது போல் நாளைபோவார் என்று இயல்பாக வருவதே இலக்கணம் எனினும் சேக்கிழாரே திருநாளைப்போவார் என்று மிகுத்துத்தான் எழுதுகிறார் (பெரிபு. திருநாளைப். 34). வழக்கிலும் செய்யுளிலும் சிறுகீரை, சிறுகுடல், சிறுபொழுது, சிறுகாலை என்று சிறு என்ற சொல் முன் வலி மிகாது வரினும், சேக்கிழார் சிறுத்தொண்டர் என்ற பெயரை மிகுத்தே எழுதுகிறார் (பெரியபு. சிறுத்தொண்ட15) மக்கள் அடிக்கடி வழங்கும் சில உயர்திணைப் பெயர்கள் இலக்கணத்துக்கு அடங்காத வேறுபாடுகளை அடைவதுண்டு. இதைத் தொல்காப்பியரும் (தொகைமரபு 155), நன்னூலாரும் (159) கூறுகின்றனர்.

3. தனித்திறன், தளிர்த்திறன், தளிற்றிறன் இவற்றுள் எது சரியான சொல்லாட்சி? ஏன்?
- பாலசுப்பிரமணியன், மதுரை.

நீங்கள் குறிக்கும் தொடர்கள் எந்தப் பொருள்களில் வருகின்றன என்பது தெளிவாகவில்லை. பொருள் தெரிந்தால்தான் ஒரு தொடர்க்குச் சரியான வடிவத்தைக் கூறமுடியும். தளிர்க்கின்ற திறன் என்று வினைத் தொகைப் பொருளில் வந்தால் தளிர்திறன் எனல் வேண்டும், தனித்திறன் சரி. தளிரினது திறன் என்று வேற்றுமைப் பொருளில் வந்தால் தளிர்த்திறன் சரி. தளிற்றிறன் என்று ஒரு தொடர் இருக்க முடியாது.

4. 'எல்லோரும்' என்று எழுதுவது சரியா? அது எப்படி வந்தது? அது சரியாயின் எல்லோம் என்று எழுதலாமா?
- த. கருணைச்சாமி, தேனி.

எல்லாரும் என்ற சொல்லே எல்லோரும் என்று ஈற்றயலில் உள்ள ஆ-ஓவாகத் திரிந்தும் வரும். அது சரியனாதே. எல்லோரும் - பலர் பாற்படர்க்கை. எல்லோம் - தன்மைப்பன்மை. அது எல்லோமும் என்று உம்மை பெற்றேவரும். எல்லாநாமும் என்று இடையில் நம் முச்சாரியை பெற்றும் வழங்கும்.

5. அ. ஏகபாதம் என்றால் என்ன?

பிரம புரத்துறை பெம்மான் எம்மான்
பிரம புரத்துறை பெம்மான் எம்மான்
பிரம புரத்துறை பெம்மான் எம்மான்
பிரம புரத்துறை பெம்மான் எம்மான்

இப்பாடலின் பொருள் என்ன? (முதல்திருமுறை 127 வது திருபிரமபுரபதிகம் முதல்பாடல்)

ஆ. தொல்காப்பியம் கூறும் கொடிநிலை கந்தழி வள்ளி- இவற்றின் பொருள் என்ன?
- புலவர் பழனிவேல், தாகூர் நகர்.

அ) ஓர் அடியே நான்கு முறை மடங்கிவருவது தேவாரத்தில் ஏகபாதம் எனப்படுகிறது. ஏகம் -ஒன்று. பாதம் -அடி. இது அணியிலக்கணத்தில் நான்கடி மடக்கு எனப்படுகிறது. பொருள் செல்லும் போக்கில் இப்பாடலைப் பிரித்து எழுதினால் பின் கண்டவாறு வரும்.

1. பிரமம் புரத்துறை பெம்மான் எம்மான்

2. பிரமம் புரத்துறை பெம் மான் எம் ஆன்

3. பிரமம் புரத்துறை பெம் ஆன் எம்மான்

4. பிரமபுரத்து உறை பெம்மான் எம்மான்

ஒவ்வோரடிக்குமான மொழிப்புரை : (தி.வே. கோபாலையர் தரும் பழைய உரை)

1. ஞானாகாசமாகிய பராசக்தியான பரிபூரணத்தை மிகவும் வியந்து அந்தப் பராசக்திக்கு அதீதமாகிய சுகமே வடிவாய், முதல் நடு இறுதி காணாத பொருள் எந்தப் பெரியோன்?

2. வானத்தின் கண்ணே ஓடும் கங்கையைத் திருமுடியிலே வைத்தவன் என்னை நீங்கா நிலைமையை உடைய எமது உயிர்.

3. பிரம வடிவத்திலே எண்ணப்பட்ட என்னை முத்தியிலே விடுகைக்கு அமையாத இச்சை உடையனாய் வந்தவன் என்னை ஒத்த தன்மையன்.

4. பிரமபுரம் என்றும் திருப்பதியிலே உறையும் தலைவன் ஆனவன் என்னுடைய சுவாமி.

பிரமபுரம் - இன்று சீர்காழி என்று அழைக்கப்படும் காழி என்ற திருத்தலம்.

ஆ) போரில் வெற்றி பெற்ற அரசரையும் மறவர்களையும் புகழ்ந்து பாடும் பாடாண்திணையில் நீங்கள் கூறும் கொடிநிலை, கந்தழி, வள்ளி ஆகிய வாழ்த்து வகைகள் வருகின்றன. கொடிநிலை அரசனின் கொடியை இறைவாழ்த்துடன் (இறைவனது கொடியுடன் இயைத்துப்) பாடுதல். கந்தழி- பகைவர்க்குப்பற்றுக் கோடான அரணை அழிப்பதை இறைவாழ்த்துடன் சேர்த்துப்பாடுதல். வள்ளி - அரசனை வாழ்த்திப் பாடியாடும் வள்ளி என்னும் ஒருவகைக் கூத்து.

6. மண்+குடம் = மட்குடமாய் ஆகுமென்று புணரியல் இலக்கணம் கூறுகிறது. ஒரு பா அடியின் முதற்சீராய் வந்துள்ள 'மட்குடத்தில்' உள்ள எதுகை புணர்வதற்கு முன்பிருந்த டண்ணகர மெய்யா? புணர்ந்தபின் மாறியுள்ள டகர மெய்யா? எது? விளக்கவும். விகாரச் சொற்கள் விரவிவரப் பாவியற்றல் சிறப்புடைய தாகுமா? இச்சொற்றான் இப்படி விகாரமாக வந்துள்ளது என்று எப்படிக் கண்டுபிடிப்பது? விகாரச்சொல் பயன்படுத்தப் படுவது தொடை யழகிற்காகவா? பாவின் வனப்பிற்காகவா? பாவலர் தம் விருப்பத்திற்காகவா? விகாரச் சொற்களைப் பாவில் ஏன் பயன்படுத்த வேண்டும்?
- புலவர் வி. வில்வநாதன், வெங்காலூர்.

மட்குடம் அடிமுதலில் வந்தால் டகர மெய்தான் எதுகை; ணகர மெய்யாகாது. பாடல்கள் எப்போதும் சொற்கள் புணர்ந்த நிலையில்தான் படைக்கப்படல் வேண்டும். முன்னோர்கள் அப்படித்தான் படைத்தார்கள். படிப்போர் தாம் சொற்களைப் பிரித்துப்பொருள் உணரவேண்டும். இன்றைய படிப்பாளிகளிடையே அத்திறன் குறைந்துவிட்டதால், புரியவில்லை என்று புறக்கணிக்காமல் படிப்பதற்காக இன்று பழம்பாடல்கள் சொற் பிரித்து அச்சிடப்படுகின்றன. காட்டாக,

ஒற்றொற் றுணராமை யாள்க வுடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும் (589)

என்ற குறளிலுள்ள புணர் மொழிகள் பொருள் தெளிவுக்காக இன்று

ஒற்று ஒற்று உணராமை ஆள்க உடன்மூவர்
சொல் தொக்க தேறப் படும்

என்று சொற்பிரித்து அச்சிடப்படுகின்றன. இப்படிச் செய்வதால் அடிதோறும் முதற்சீரில் ஒலித்த ற்-ற் என்ற எதுகையின்பம் கெடுகிறது. 'ஒற்று ஒற்று' என்ற சீர் காய்ச்சீராக ஒலித்துக் காய்முன் நிரையாகி வெண்டளை பிழைக்கிறது. இத்தனை தீமையிருந்தும் இன்றைய தமிழறிஞர்கள் இதை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்.

இங்கன மின்றிப் பாட்டெழுதும்போதே எல்லாச் சொற்களையும் பிரித்துப் பெண் எடுத்தாள் - மண்குடத்தை என்று எழுதினால் புணர்த்துப்படிக்கும் போது, பெண்ணெடுத்தாள் - மட்குடத்தை என்றாகி, ண்-ட் என்று எதுகை ஒன்றாப் பிழை நேரும்.

'ஏழு உலகு எங்கு உண்டு என்றான்'

என்று சொற்களைப் புணராத நிலையில் எழுதினால் காணப்படும் 5 சீர்களும் புணர்த்து 'ஏழுலகெங் குண்டென்றான்' என்று இரண்டே சீராக ஒலிக்கும். எனவே எதுகையில் மட்டுமன்றிப் பாடல் முழுவதும் சொற்களைப் புணர்த்தெழுதுவதே முறை. படைத்தபிறகு தேவையானால் பிரித்தெழுதலாம்.

7. 16-07-2008 இதழில் புதுமனை புகுவிழா என்பதே சரி என்று இலக்கண விதியைச் சான்று காட்டி நிறுவியுள்ளீர். (பக். 21) சிலப்பதிகாரம் அடைக்கலக் காதை 129 ஆம் அடியில் 'மனைப்புகு மளவும்' என வலிமிக்கு வந்துள்ளமைக்கு அமைதி கூறுக.
- சொ. ஞானசம்பந்தன், புதுச்சேரி-8.

இரண்டாம் எழுத்து ஒன்றுவது எதுகை என்ற இலக்கணப்படி, 'சுற்றத்தால்' என்பதற்கும் 'பெற்றதால்' என்பதை எதுகையாகக் கொள்வதில் எந்தக்குறைபாடும் இல்லை. மேலும் இரண்டாம் எழுத்தோடு இதில் மூன்றாம் எழுத்தும் ஒன்றியே உள்ளது. எனினும் 'சுற்றத்தால்' என்பதோடு ஒலியால் முழுவதும் ஒத்ததாக எதுகைச் சொல் அமையவேண்டும் என்ற விருப்பத்தால் 'பெற்றதால்' என்பதைப் 'பெற்றத்தால்' என்று வேறுபடுத்தி,

சுற்றத்தால் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன் (குறள். 524)

என்று எழுதுகிறார் வள்ளுவர். இதே ஒலியின்பம் காரணமாக மணிவாசகரும், தெருட்டின், குருட்டின், இருட்டின் என்று எதுகைச் சொற்களின் ஒலியே அமைய வேண்டும் என்னும் விழைவால் 'வருடின்' (தடவிக்கொடுத்தல்) என்ற சொல்லை 'வருட்டின்' என்று வேறுபடுத்தி

வருட்டின் திகைக்கும் வசிக்கின் துளங்கும் மனமகிழ்ந்து
தெருட்டின் தெளியலள் செப்பும் வகையில்லை சீரருக்கன்
குருட்டின் புகச்செற்ற கோன்புலி யூர்குறு கார்மனம்போன்
றிருட்டின் புரிகுழ லாட்கெங்ங னேசொல்லி ஏகுவனே.
(திருக்கோவையார். 276)

என்று பாடுகின்றார். இவை அடியயதுகைகள்.

புணர்ச்சி இலக்கணப்படி 'மணமனை புக்கு' (அரங்கேற்று. 172) 'மனைபுக்கனளால்' (அடைக்கலக். 218) என்றெல்லாம் இயல்பாகப் பாடியுள்ள இளங்கோவடிகளே அதே காரணத்தால், அதே அடைக்கலக்காதை யிலேயே 129ஆம் அடியில் நீங்கள் குறிப்பிட்டவாறு 'உடைப்பெருஞ் செல்வர் மனைப்புகு மளவும்' என்று சீரெதுகை. இதனைத் 'தொடைநோக்கிய செய்யுள் விகாரம்' என்பர். செய்யுள்களில் சீர், தொடைகள் சிறப்பாக அமைவது நோக்கமாகப்புலவர்கள் மெல்லெழுத்தை வல்லெழுத்தாக்குதல், வல்லெழுத்தை மெல்லெழுத் தாக்குதல், குறிலை நெடிலாக்குதல், நெடிலைக் குறிலாக்குதல், இல்லாத எழுத்தை இடுதல், உள்ள எழுத்தை மறைத்தல் ஆகிய வேறுபாடுகளைச் செய்து கொள்வார்கள். இவற்றைச் செய்யுள் விகாரம் என்பர். (நன்.155) இவ்வேறுபாடுகள் எழுத்துச் சொல்லிலக்கணங்களுக்கு மாறுபட அமைவதுண்டு.