தமிழிசை - அன்றும் இன்றும்
முனைவர் இரா. திருமுருகன்
அயலார் ஆட்சியில் தழிழிசை

கி.பி. 3ஆம் நூற்றாண்டுவரையில் மிகச்சிறந்த நிலையிலிருந்த தமிழிசை. ஆரியர்களின் பண்பாட்டுப் படையயடுப்பாலும், களப்பிரர், பல்லவர், முகலாயர், தெலுங்கர், மராட்டியர், பிரஞ்சுக்காரர், ஆங்கிலேயர் முதலியோரின் அரசியற் படையெடுப்பாலும் அவர்களின் ஆட்சியினாலும், போற்றுவாரற்றுப் பொலிவிழந்து போயிற்று. வடநாட்டினரின் வல்லாண்மையால், மறைக்காடு, குடமூக்கு என்ற ஊர்ப்பெயர்கள் யாவும் வேதாரண்யம், கும்பகோணம் என வடமொழிமயமாக்கப்பட்டன. எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் காணலாம்.

தமிழ்ச்சொல்வடசொல்தமிழ்ச்சொல்வடசொல்
இசைஸங்கீதம் பண்ராகம்
இசையரங்குஸங்கீதக்கச்சேரி உருப்படிகீர்த்தனை
நரம்புஸ்வரம் ஒத்துஸ்ருதி
மண்டிலம்ஸ்தாயி புறநீர்மைபூபாளம்
வலிவுமண்டிலம் தாரஸ்தாயி முல்லைமோகனம்
மெலிவுமண்டிலம்மந்த்ரஸ்தாயி செந்துருத்திமத்யமாவதி
சமமண்டிலம்மத்யமஸ்தாயி தக்கேசிகாம்போஜி
குரல் ஸட்ஜம்பழம்பஞ்சுரம் சங்கராபரணம்
துத்தம்ரி­பம்கொல்லிநவரோஜ்
கைக்கிளைகாந்தாரம்செவ்வழி யதுகுலகாம்போஜி
உழைமத்யமம்படுமலைப்பாலைகல்யாணி
இளிபஞ்சமம் அந்தாளிக்குறிஞ்சிசாமா
விளரிதைவதம் முதனடைவிளம்ப காலம்
தாரம்நிஷாதம்வாரம்மத்யம காலம்
பண்ணுப்பெயர்த்தல்கிரகபேதம் செய்தல்கூடை துரிதகாலம்
தூக்குதாளம்திரள்அதிதுரிதகாலம்
தமிழிசை - இன்று

1. இசைத்துறையில் உள்ளவர்களே தமிழிசை வேறு, கர்நாடக ஸங்கீதம் வேறு என்று கருதுகின்றனர். இதற்குக் காரணம், இன்று இசையரங்கு, வானொலி, தொலைக்காட்சிகளில் பாடப்படும் செவ்விசை உருப்படிகள் பெரும்பாலும் தெலுங்கு மொழியில் இருப்பதே. தமிழில் தேவாரம் முதலிய வற்றைப்பாடும் ஓதுவார்கள் திருப்பதிகங்களைமட்டும் பாடுவதும், தெலுங்கு உருப்படிகளைப் பாடுவோர், இராக ஆலாபனம், நிரவல் ஆகியன பாடிச் சுரம் பாடுவது அந்தத் தோற்றத்தை உண்டாக்குகின்றன.

2. தமிழிசை இயக்கத்திற்கு இசைறிந்தோரின் ஆதரவு இல்லை : 18ஆம் நூற்றாண்டில் புதுச்சேரியில் துய்ப்ளேக்சு என்ற பிரஞ்சு ஆளுநர்க்கு எதிரில் ஓர் இசையரங்கு நடைபெற்றது. பாடகர் தெலுங்கு மொழி யிலேயே பாடினார். அதைக் கண்ட துய்ப்ளேக்சு, அருகில் இருந்த ஆனந்தரங்கப் பிள்ளையிடம், "ஏன் தமிழ் மக்கள் எதிரில் தெலுங்கிலேயே பாடுகிறார்கள்?" என்ற வியந்து கேட்டாராம். தமிழ்நாட்டில் தமிழிசைக்கு ஆதரவான முதற்குரல் இதுவாகத்தான் இருக்கவேண்டும்.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதியார் "தமிழ்நாட்டு இசையரங்குகளில் மக்களுக்குத் தெரியாத மொழிகளில் பாடிக்கொண்டிருந்தால் நம் சனங்கள் சங்கீத ஞானத்தை இழந்துபோகும்படி நேரிடும்" என்று எழுதித் தமிழிசை இயக்கத்திற்கு வித்திட்டார்.

1940 அளவில் அண்ணாமலை அரசர், சண்முகம் செட்டியார், இராசாசி, கல்கி முதலியோர் தமிழிசை இயக்கம் அமைத்து அரும்பணிகள் பலவற்றை ஆற்றிவந்தார்கள். தமிழில் பாடவேண்டும் என்று பரப்புரை செய்துவந்த அவர்களை எதிர்த்தோர், பின்வரும் மூன்று தடைகளை எழுப்பினார்கள் :

1. தமிழில் இசைப்பாடல்கள் இல்லை.

2. தமிழ்மொழி இசைக்கு ஏற்றதன்று

3. இசைக்கு மொழி இல்லை; அதனால் எந்த மொழியில் பாடினால் என்ன?

இத்தடைகளுக்குத் தமிழிசை இயக்கத்தார் தக்க விடைகளைத் தந்தனர். எனினும் யாரும் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. பார்ப்பனியத்தையும் பக்தியையும் எதிர்த்த பெரியாரும் தமிழிசை இயக்கத்திற்கு ஆதரவாக இல்லை. "நமக்கு வேண்டாத பசனைப் பாட்டுகள் தமிழில் இருந்தால் என்ன? தெலுங்கில் இருந்தால் என்ன?" இந்தியில் இருந்தால் என்ன? அல்லது சப்பான், செர்மனி மொழிகளில் இருந்தால்தான் என்ன?" என்று மக்களிடம் பேசினார். (பெரியார் பார்வை, ஏடு 14) இதனால் தமிழர்களிற் சிலர் தமிழன் கண்ட இசையைப் பார்ப்பனர்க்கும் பக்தி இயக்கத்துக்கும் சொந்தமான கலை என்று தவறாகக் கருதினார்கள். எனினும் அண்ணா, பாவேந்தர் முதலியோர் தமிழிசை இயக்கத்தை ஆதரித்தனர்.

(தொடரும்)