![]() |
வினாதலும் விடுத்தலும்
1. சென்ற இதழில், தனந்த என்ற சந்தத்தை, குறில்+குறில்+மெல்லொற்று+ வல்லுயிர்மெய்க்குறில் என்று விளக்கியுள்ளீர்கள். வண்ணப்பாடல் சந்தக் குழிப்பில் மெய்யெழுத்துகளில் வல்லினமெய்யா? மெல்லினமெய்யா? இடையின மெய்யா? என்று பார்ப்பது சந்த இலக்கண விதியாகும். ஆனால் உயிர்மெய் யெழுத்துகளில், வல்லுயிர்மெய்க்குறில். மெல்லுயிர்மெய்க்குறில் இடையுயிர் மெய்க்குறில் என்று பார்க்கவேண்டுமா? இதற்குரிய சந்த இலக்கணவிதி என்ன? வண்ணப்பாடல்களின் சந்தக்குழிப்பை விளக்கும்போது, வல்லுயிர் மெய்க்குறில் என்பதுபோல் குறிப்பது இன்றியமையாதது. அப்படி வரையறுத்துச் சொல்லாமல், உயிர்மெய் என்றுமட்டும் சொன்னால், தனந்த என்பதற்கு மணம்வ என்றோ, மணம்வீ என்றோ பிழையாக எழுதக்கூடும். வல்லுயிர்மெய் என்று மட்டும் சொன்னால். மணந்தா என்று சந்தம் மாறியும் எழுதக்கூடும். அதனால் வல்லுயிர்மெய்க்குறில் என்று கூறப்பட்டது. தண்டபாணி அடிகளும் அவ்வாறு தான் விளக்குகிறார். காட்டாக, தந்த என்ற சந்தத்துக்கு அவர்கூறும் இலக்கண நூற்பா வருமாறு: குறிலும், மெல்லினத்து ஒற்றும், வல்லினத்து 2. அ) இரட்டுறமொழிதல், சிலேடை-இரண்டும் ஒன்றே என்பது சரியா? விளக்க வேண்டுகிறேன். ஆ) தலையல்லால் கைம்மாறில்லேன் - என்ற தொடர் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? பொருளை விளக்கவேண்டுகிறேன். அ) ஒரு வடிவாக நின்ற தொடர் இரு பொருள் படுவதாகக் கூறுவதைத் தமிழில் இரட்டுறமொழிதல் என்பர். வடமொழியில் சிலேடை என்பர். இரண்டு பொருள் மட்டும் தருவதை இரட்டுற மொழிதல் என்றும், இரண்டுக்கு மேற்பட்ட பல பொருள்களைத் தருவதைச் சிலேடை என்றும் சிலர் வேறுபாடு காட்டுவர். ஒரு தொடர் இரு பொருளுக்குமேல் தருமாறு பாடுதல் பாவலர்களின் நோக்கமாக இருத்தல் இயல்பன்று, அதற்கு மூன்று நான்கு பொருள்கள் கூறுதல் அப்படிக் கூறுவோரின் திறனையே காட்டும். எனவே இது வடமொழிக்கு ஏற்றம் காட்டுவதற்கேயன்றி வேறன்றென்று விடுக்க. ஆ) இது நாலாயிரப் பனுவலில் ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி 5ஆம் திருமொழியின் 7ஆம் பாடலில் வருகிறது. (நன்றி: பாவலர்மணி சித்தன்)ஆண்டாள் குயிலினிடம் என் காதலனை இங்கே வரும்படி கூவ வல்லையாகில், அதற்கு நன்றியாக, என் தலையை உன் காலடியில் வைப்பதைத் தவிர நான் உனக்குச் செய்யும் கைம்மாறு வேறு இல்லை என்பது இதன் பொருள். 3. அ) சிலம்பில் காணப்பெறும் மயங்கிசைக் கொச்சகக்கலிப்பாவின் இலக்கணம் பாவலர் பண்ணையில் இடம் பெறவில்லை என்று தெரிகிறது. அதன் இலக்கணம் பற்றி விளக்க வேண்டுகிறேன். ஆ) நானூறு பழங்கள் வாங்கினேன் என்பது. நான் நூறு பழங்கள் வாங்கினேன் என்றும் பொருள் தருவதால் நாநூறு என்று எழுதலாமா? விளக்கம் கூற வேண்டுகிறேன். அ) தமிழில் உள்ள எல்லாப் பாவகைகளுக்கும் இலக்கணம் கூறுதல் பாவலர் பண்ணையின் நோக்கமன்று. தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகம் என்ற உறுப்புகள் அளவுக்கு மிகுதியாகவும், குறைந்தும், மாறியமைந்தும், கலிப்பாவில் வரக் கூடாத சீர்களையும் அடிகளையும் பெற்றும், ஒத்தாழிசைக் கலிப்பாக்க ளோடு ஒவ்வாது வருவன எல்லாம் மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா என்று வழங்கப்படும். மங்கலவாழ்த்துப்பாடல் தாழிசை நான்கு முதலிலும், இடைஇடையே தனிச்சொற்களும் கலிப்பாவில் வரக்கூடாத மாச்சீர்களும், வஞ்சியுரிச்சீர்களும் வந்ததனால் மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா ஆயிற்று. ஆ) நான்கு+நூறு என்பது நானூறு என்றாகும். நான்+நூறு என்பதும் நானூறு என்றே ஆகும். அதனால் இருபொருளிலும் நாநூறு என்று எழுதக்கூடாது. 'நானூறு' என்றே எழுதவேண்டும். 4. அ) கட்டு+இல்=கட்டில் (கட்டிய இல்) என்ற சொல் ஏற்பட்டிருக்கலாம். இந்தச்சொல்லே தற்போது உள்ள மூங்கில்களைக் கயிற்றால் கட்டி உருவாக்கும் 'கட்டில்' என்பதற்கு வந்திருக்கலாம் என்பதுபோல பேரா.மா. நன்னன் அவர்கள் மக்கள்தொலைக்காட்சி வழியே 20.8.07 அன்று கூறினார். இதுபற்றித் தெளிதமிழின் கருத்து என்ன? ஆ) இரட்டைக்காப்பியம், இருவகைப் பாணர், இருவகைக் கூத்து, இருவகையங்காடி, மூவகைக்குற்றம், நால்வகை உணவு, நால்வகைப் பா, நான்கு வகை அம்பி, நான்கு வகை இசைக்கருவி, நான்கு வகை யாழ்- இவற்றை முறையே இருகாப்பியம், இருபாணர், இருகூத்து, ஈரங்காடி, முக்குற்றம், நாலுணவு, நாற்பா, நாலம்பி, நாலிசைக்கருவி, நால்யாழ் என எழுதலாமா? அ) கட்டில் விளக்கம் பொருத்தமாகவே தோன்றுகிறது. ஆ) இரட்டைக்காப்பியம் என்பது கதைத் தொடர்புள்ள இருகாப்பியங்கள் என்று பொருள்படும். சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய இரண்டையும் அவ்வாறு கூறலாம். சிந்தாமணியையும் சிலப்பதிகாரத்தையும் இரட்டைக் காப்பியங்கள் எனல் பொருந்தாது. அவற்றை இருகாப்பியங்கள் என்றே கூறவேண்டும். இருவகைப்பாணர் என்பது குரற்பாணர். யாழ்ப்பாணர் என்ற இருவகைப் பாணர்களைக் குறிக்கும். இருபாணர் என்பது ஒருவகைப் பாணர்களிலேயே இரண்டுபேரைக் குறிக்கும். மேலும் வகை என்று வருவன வெல்லாம் அத்தனை வகைக்குமேல் இல்லை என்ற பொருளையும் உடையன. வகை என்ற அடை வாராதனவெல்லாம் ஒருவகையிலேயே பல பொருளும் உள்ளமையைக் காட்டும். 5. பல்லாயிரம் ஆண்டுகள் மூத்த பெருமைக்குரிய தமிழ் மொழியை எண்ணிலடங்காப் புலவர்கள் கையாண்டுள்ளார்கள். அவர்களுக்கெல்லாம் புலப் படாத அல்லது, அவர்களெல்லாம் செய்யத் துணியாத மொழிச் சீர் திருத்தத்தை இந்தத் தலைமுறையில் செய்ய வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? தமிழ் இயற்கை மொழி. யானை-(னை வடிவம்) யானையின் துதிக்கை போலுள்ளது. பூனை-(னை வடிவம்) பூனையின் மீசை போலிருக்கிறதே! நீங்கள் குறிப்பிடுவது மொழிச் சீர்திருத்தம் அன்று, எழுத்து(வரிவடிவ)ச் சீர்திருத்தம், தொல்காப்பியர் காலம் முதல் தமிழ் எழுத்துகளில் ஒலிவடிவம் பெரும்பாலும் மாறாமல் உள்ளது. ஆனால் வரிவடிவம் பல மாற்றங்களை அடைந்துள்ளது. இன்று தொல்காப்பியரும் திருவள்ளுவரும் வந்தால் இன்றைய எழுத்துகளில் உள்ள தங்களின் நூல்களையே படிக்கத் தெரியாமல் விழிப்பர். னை என்பதன் பழைய வடிவம் ஒன்றே துதிக்கை போலவும் மீசை போலவும் இருப்பதாக உங்களுக்கே தோன்றுகிறது என்கிறீர்கள். வரிவடிவம் மாறக் கூடாது என்பதற்கு நீங்கள் கூறும் காரணம் ஏற்றற்குரியதாக இல்லை. தமிழ் நெடுங்கணக்கில் ன, ை,(பழைய)னை என்ற மூன்று வடிவங்கள் வைத்துக் கொள்வதை விட்டு ன, ை, என்ற இரு வடிவங்களை மட்டுமே வைத்துக் கொள்வது சிக்கனந்தானே? 6. புதுச்சேரியில் அண்மையில் வெளிவந்த மாத இதழ் ஒன்றில் மலிகைக்கடை என்று குறிப்பிட்டுள்ளனர். அது சரியா? நான் மளிகைக்கடை என்று எழுத வேண்டும் என்று கருதுகிறேன். தங்கள் கருத்து யாது? மளிகை என்பதே சரி, மலிகை என்பது அச்சுப்பிழையாக இருக்கலாம். மலிகை என்பது விலை குறைதல். 7. அ) நாற்சீரடிப் பாடல்களில் சிறப்பாக ஓரடியின் நான்கு சீரிலும் மோனை வந்தால் அது முற்றுமோனை. வெண்பாவின் ஈற்றடியில் (முச்சீரடியில்) அஃதாவது மூன்று சீர்களிலும் மோனை வரின் அது முற்றுமோனை யென்றுகொள்ளத் தயங்குவானேன்? முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை வரின் அது பொழிப்புமோனை. அங்ஙனமே திருக்குறளின் இரண்டாம் அடியிலும் (புன்சொல் உரைப்பான் பொறை-189) முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை வருவ தனையும் பொழிப்பு மோனையாக ஏற்றுக்கொள்வதில் நேரும் குற்றம் யாது? பொறுத்தாரைப் பொன் போல் பொதிந்து-155 என்பதனை முற்று மோனையாக ஏற்கத்தயங்குவானேன்? இதைப் பற்றி உங்கள் கருத்தைக் கூறுக. இணை, பொழிப்பு முற்று ஆகிய தொடை விகற்பங்கள் அளவடிக்குக் கூறியவையே. முச்சீரடிகளில் மூன்றுசீரிலும் மோனை வந்தாலும் முற்றுமோனை என்றோ, கூழைமோனை என்றோ கூறுவதில்லை. பிறவும் இன்ன. புன்சொ லுரைப்பான் பொறை என்பதைப் பொழிப்புமோனை என்றால் நான்காம்சீர் ஒன்று இருப்பதாகப் பொருள்படும். இருசீர் மிசை என்ற 19ஆம் காரிகை உரையில். 'வருசீர் என்று சிறப்பித்தது இணையோசை முதலாகிய முப்பத்தைந்து தொடைவிகற்பமும் அளவடிக் கண்ணே வழங்கப்படும் என்பது அறிவதற்கு' என்று கூறுவதுதான் இதற்கு இலக்கணம். 8. திருக்குறள் கூடா நட்பு என்ற அதிகாரத்தில் இனம்போன்று இனமல் லார் கேண்மை மகளிர் மனம்போல வேறுபடும் என்ற குறட்பாவில் வந்துள்ள 'மகளிர் மனம்போல வேறுபடும்' என்ற தொடரின் பொருளை அருள்கூர்ந்து விளக்குக. மேலும் பரிமேலழகர் எடுத்துக்காட்டிய 'பெண்மனம் பேதின்று ஒருப்படுப்பேன்' என்னும் எண்ணில் ஒருவன் என்ற மேற்கோளின் பொருளையும் தெளிவுபடுத்துக. மளிகை புறத்தில் தமக்கு நண்பர்போல் இருந்து அகத்தில் பகைவராக இருப்பாரின் நட்பானது பொதுமகளிர் மனம்போல வேறுபடும். என்பது இதன் பொருள் என்பது என் கருத்து. பரிதியார் மகளிர் என்பதற்குப் பொதுமகளிர் என்றே உரை கூறுகிறார். இதுவே பொருத்தம். பெண்ணைப் பேதை என்பதும், நுண்ணுணர் வுடையோர் நூலொடு பழகினும் என்பதும். பெண்ணின் நான்கு இயல்புகளில் ஒன்றாக மடத்தைக் கூறுவதும் பழந்தமிழரிடையே இருந்த நிலைகள்தாம். அக்கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதே பரிமேலழகர் உரையும் அவர் காட்டும் மேற்கோளும். பெண்மனம் பேதின்று ஒருப்படுப்பேன் என்னும் எண்ணில் ஒருவன் என்பதற்குப் பெண்ணின் மனம் வேறுபடுதல் இன்றி நான் ஒரு தன்மையுடைய தாக்குவேன் என்று கூறும் ஆராய்ச்சியில்லாத ஒருவன் என்பது பொருள். இப்பகுதி வளையாபதி 49ஆம் செய்யுளில் வருவது. 9. அ). பஞ்சசுத்தி செய்துநின்னைப் பாவித்துப் பூசை செய்தால் என்று தாயுமானவர் கூறுகிறார். இதில் உள்ள பஞ்சசுத்தி என்பதற்கு விளக்கந் தருக. ஆ). உலகில் அதிக இன்பம் எது? அதிக துன்பம் எது? இ). மைவிழியார் மனையகல் என்று ஒளவையார் குழந்தைகளுக்குக் கூறியுள்ளார். அதன் கருத்து யாது? அ) பஞ்சசுத்தி செய்தல் என்பன பூதசுத்தி, லிங்கசுத்தி, திரவியசுத்தி, ஆத்மசுத்தி, மந்திரசுத்தி எனப்படும். இவை 1. பூதசுத்தி - அன்றைக்குச் செய்த பாவங்களை நீக்குதல் ஆ) நிலவின் ஒளி சேர்ந்திருக்கும் காதலர்களுக்குப் பேரின்பம். பிரிந்திருக்கும் காதலர்க்குப் பெருந்துன்பம். 'இஸ்த்துகினு போற' தமிழ் செயகாந்தனுக்குப் பேரின்பம். எனக்கு அதுவே பெருந்துன்பம். எனவே, இன்பமும் துன்பமும் ஒரு பொருளிலோ செயலிலோ இல்லை. அதைப் பட்டறிவோரின் உள்ளத்தில்தான் உள்ளது. இ) 'மைவிழியார் மனை அகல்' என்பதற்கு மை தீட்டிய கண்களையுடைய விலைமகளிர் வீட்டை அணுகாதே என்பது பொருள். பல பெரிய நீதிநூல்கள் கூறும் கருத்துகளின் சாரமாகச் சுருங்கிய வடிவமுள்ள செய்யுள்களாகப் பாடப்பட்டனவே ஆத்திசூடி, கொன்றை வேந்தன் முதலிய சிறு நூல்கள். தையல் சொல் கேளேல், பையலோ டிணங்கேல், மோகத்தை முனி என்பவை குழந்தைகளுக்காகப் பாடப்பட்ட குழந்தைப் பாடல்கள் என்றா நினைக்கிறீர்கள்? |