மதிப்புறுசொற்களும் சாதிப்பெயர்களும்
பி. இராமநாதன் க.மு., ச.இ.

கடந்த சில "தெளிதமிழ்" இதழ்களில் தமிழறிஞர் கோபாலையர் பெயரை அவர் தம் பெயரை எப்படி எழுதினாரோ அப்படிச் சுட்டுவதற்கு வந்த ஒரு மறுப்பையும் அதற்கான விளக்கத்தையும் கண்டோம்.

2. அவரவர் தம் பெயரை எப்படிக் கூறுகிறாரோ. எழுதுகிறாரோ அப்படியே அனைவரும் சுட்டுவதே உலகெங்கும் உள்ளநிலைமை. பண்பாடும் அதுவே, விருப்பு வெறுப்புக்குத் தக்கவாறு பிறர் பெயரை வெட்டுதல் யாண்டும் இல்லை. தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடிக்கும் மூடத்தன்மை தமிழகத்தில் பல்வேறு துறைகளிலும் உண்டு. அதே தன்மையில் பெயர் ஈறுகளில் உள்ள மதிப்புறு சொற்களை (Honorific Titles) சாதிப் பெயர் என மயங்கி ஈறுகளை வெட்டி விடுவதுதான் முற்போக்கு முதலியவற்றுக்கு அடையாளம் எனக் கருதப்படுகிறது. சாதி அடிப்படையிலான வெறி, கொடுமை, வன்முறை முதலியவை 1952 தேர்தலில் அகவை வந்தோருக்கு வாக்குரிமை என்று வந்ததிலிருந்து தமிழ்நாட்டில் மட்டுமன்று இந்தியாவெங்கும் அனைத்து அரசியல் கட்சிகளாலும் அவற்றின் தலைவர்களாலுமே பெருமளவுக்கு வளர்க்கப்பட்டு வருகின்றன என்பது அறிவுள்ள அனைவருக்கும் தெரிந்ததே. மதிப்புறு சொற்களைச் சாதிப்பெயர்கள் என்றே ஊழ் குறித்து(வாதத்திற்காக) வைத்துக் கொண்டாலும், அவற்றை நீக்கிவிட்டால் மட்டும் சாதி ஒழிந்துவிடாது. ஒரு செம்பில் முக்கால் பகுதிப் பால் உள்ளது, அதில் நஞ்சைக் கலந்து விட்டனர் கயவர், அதைப்பற்றி கவலைப்படாது செம்பின் மேலுள்ள காற் பகுதியிலுள்ள நுரையைக் காப்பாற்றக் கடுமையாக முயல்வது நிழலோடு போராடுவதேயாகும். அடுத்து வரும் பகுதிகளில் இத்தகைய மதிப்புறு சொற்கள் சாதிப் பெயர்களே அல்ல என்பதைக் காண்போம்.

3. ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரையில் அனைத்துச் சாதியினருமே வெறும் பெயர்களை மட்டும் கொண்டிருந்தனர் ("இன்னார் மகன் இன்னான்") அரசனே தரும் முதலி போன்ற பதவிப்பெயர்களைப் போட்டுக்கொள்ளலாம். ஏனையோர் போட்டால் தொலைத்துவிடுவான் அரசன் (ஏன், அப்பொழுது ஓலைவீட்டைக் கல் வீடாக மாற்றவும் அரசன் அனுமதி வேண்டும்) அப்பொழுது தேவர், ஐயர் போன்ற சொற்களை அரசர் மட்டுமே பயன்படுத்தினார். சோழமன்னர் தம்மைத் "தேவன், தேவர்" என்று அழைத்துக்கொண்டனர். மதுரை நாயக்க மன்னர் தம்மை "ஐயன்" என்று அழைத்துக்கொண்டனர். ஆங்கிலேயர் ஆட்சி வந்தபின்னரே அனைத்துச்சாதியினரும் தங்கள் பெயருடன் ஏதாவது ஒரு மதிப்புறுசொல்லைச் சேர்க்கலாம்-அரசன் தண்டனைக் காளாகாமல் என்றநிலை உருவாகியது. அதன் பின்னர்த்தான் மதிப்புறு சொற்களைப் பல்வேறு சாதியினரும் சேர்த்துக்கொண்டனர். தமிழ் நாடு சார்ந்த ஒரு சில எடுத்துக்காட்டுகளைத் தரவே இடம் உள்ளது (இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் இதே நிலைமைதான்-விரிவஞ்சி விடுத்தேன்).

மதிப்புறுசொல் பயன்படுத்தியவர்கள், குறிப்பிட்ட சாதியினரும் பிறரும்
ஐயர் (ஐயன் என்ற பழைய வழக்கும் உண்டு, "உ.வே. சாமிநாதையன்" என்றே தொடக்ககாலத்தில் அவர் தன்னைக் குறிப்பிடுவார்.. "ஐயா" விளிவடிவம்) நாயக்க மன்னர்கள் வீரசைவர்கள்(விசாகப் பெருமாளையர்) "சங்கரையா" போன்றவர்கள் தமிழ்ப்பார்ப்பனர், கோயில் குருக்கள், கிறித்துவக் குருமார் (போப்பையர்) ஆதிதிராவிடக் குருமார் ஆகிய வள்ளுவர்
பிள்ளை (பார்ப்பும் பிள்ளை யும் பறப்பவற்றிளமை என்பது தொல்காப்பியம், செல்லம் அன்பு கருதி மாந்தக் குழந்தைகளுக்கும் இப்பெயரிட்டனர்)பிராமணர்(வடக்குத்திருவீதிப் பிள்ளை நம்பிள்ளை, பெரியவாச்சான்பிள்ளை) வேளாளர் எனத்தம்மைக் கூறிக்கொள்ளும் பல சாதியினர் (பட்டியல் வகுப்பினர் உட்பட) இசை வேளாளர், வன்னியர். ஆதிதிராவிடர் (ஜே, சிவசண்முகம்பிள்ளை) மலையாளத்து நாயர்கள். கிராமணி (தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை)வணிகத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு சாதியினர் மீனவர் (சிங்காரவேலு செட்டி) பலிசா, கவரை நாக்கர் சிலபழங்குடிகள்(வயநாடன் செட்டி, மௌந்தாடன் செட்டி கூடலூர்) வேளாளர் (பா.அ. சிதம்பரநாதன் நாட்டுக்கோட்டை வைசியர் வாணியர்(எள் நெய் தொழிலோர்)
நாயகர், நாய்க்கர் (தெலுங்கு வடிவம் நாயுடு)வன்னியர், பற்பல தெலுங்குச் சாதியினர் (அவர்களுள் பட்டியல்வகுப்பினர் உட்பட)பல கன்னடச்சாதியினர் (ஈ.வே.இராமசாமி நாய்க்கர்) வேளாளர் (பா.வே. மாணிக்க நாயக்கர்)
நாட்டார், நாடார் கள்ளர், நாடார்

(ஊர்த்தலைமை, சில ஊர்களின் தலைமையைக் குறித்து அத்தலைவர்க்கு மட்டுமே முதலில் வழங்கியது)

ஆக, சாதி வேற்றுமை வெறி, கொடுமை நயன்மைக்கேடு (அநியாயம்) ஆகியவற்றை ஒழிப்பதற்கான செயல்களில் ஈடுபடுவது அனைவர்க்கும் நன்றே-வெற்றி கிட்டுமாயினும் கிட்டாதாயினும் (அரசியல் கட்சிகள் வெற்றிகிட்ட விடமாட்டா). தனிப்பட்டவர் தம் விருப்பப்படிச் சாதிப்பெயர் எனத் தாம் கருதுவதைத் தம்பெயரில் சேர்க்காமல் விடுதலும் நன்றே. எனினும் அடுத்தவர்கள் (இறந்தவர்கள். இருப்பவர்கள்) பெயரைச் சாதிப்பெயர் ஒட்டு இருப்பதாகக் கருதிக்கொண்டு கொன்னே வெட்டிச் சிதைத்தல் தேவையில்லை, பண்பாடும் அன்று. வரலாற்றுக் குளறுபடியும் உண்டாக்கும்.

இன்று உலகில் உள்ள 650 கோடி மாந்தரும் ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் ஆண்டுகட்கு முன்னர் ஆப்பிரிக்காவில் இருந்த ஒரு பெற்றோரின் அல்லது ஒரு சிறு குழுவின் பிறங்கடைகளே என இன்று அறிவியல் நிறுவிவிட்டது, எனவே சாதி குலம் பிறப்பு எல்லாம் முற்றிலும் மாயையே என்பதை அனைவரும் உணர்தல் வேண்டும்.