வன்முறையின் கைகளிலே சிக்கிக் கொண்டு
வடிக்கிறது கண்ணீரை உலகம் இன்று!
தன்பசிக்குத் தன்னூனைப் பிடுங்கித் தின்னும்
தன்மையதே வன்முறையின் செயற்பா டாகும்
வன்முறையைக் கண்டுமனம் பதறு வார்போல்
வடிக்கின்றார் அரசியலார் முதலைக் கண்ணீர்
என்னிதிலே கொடுமைஎனின் பின்பு லத்தில்
இருந்ததனை இயக்குவதே இவர்கள் தானே?
பதவியினைக் காப்பாற்றிக் கொள்வ தற்குப்
பயன்படுத்தும் கைத்தடியின் பெயர்தான் என்ன?
முதுகொன்று தங்களுக்கும் இருப்ப தைஏன்
முற்றிலுமாய் மறந்தேபோய் விடுகின் றார்கள்?
இதன்வலிமை ஒடுங்கிவர வேண்டும் என்றால்
இன்றிருக்கும் அரசியலார் திருந்த வேண்டும்
இதுநடந்தால் வன்முறையே ஒழிந்து போகும்
என்பதிலே எள்ளளவும் ஐயம் இல்லை
அடிமரத்தை வீழ்த்தியதில் கனிப றிக்கும்
அடிமுட்டாள் வன்முறைக்குத் தலைமை ஏற்பான்
நடுவுநிலை யற்றவர்கள் நாடாள் கின்ற
நாளெல்லாம் வன்முறைக்குத் திருநா ளாகும்
எடுபொருளை எனத்தடியை எடுப்பார் கையில்
இருக்கிறதே அதிகாரம் இதுபோ தாதா?
கெடுவானே பிறன்கேடு சூழ்வா னென்று
கிளத்துகின்ற வள்ளுவன்சொல் கோடா தென்றும்
உழைக்காமல் உண்பதற்கு வன்மு றையோர்
உயர்ந்தவழி என்றுசிலர் கருது கின்றார்
அழக்கொண்ட எல்லாமே அழப்போம் என்றே
அறிவுறுத்தும் குறட்பொருளை அறியா மாக்கள்
பழிமலைந்து தொகுத்துவைக்கும் பொருட்கள் வீட்டில்
பதுங்கியுள்ள திருடருக்கு நிகரே யாகும்
மழைநாளில் முளைக்கின்ற காளான் என்றும்
மரமாகி இளைப்பாற நிழல்த ராதே
-இரா. செம்பியன்