பாவலர் பரிசுதிட்டம்

பாவலர் பரிசுதிட்டம்-32இல் பரிசு பெற்றவர்

பெயர் :ஆ. குமாரசாமி

பெற்றோர் : மா. ஆறுமுகம்-நீலாட்சி

பிறந்த நாள், ஊர் : 15-7-1940, திருநாட்டியத்தான்குடி

துணைவியார் : கமலவேணி

மக்கள் : பிரபு (சுபா மருமகள்),
கோபு (சுசித்திரா மருமகள்)
பாபு

கல்வி : இ. க.

பணி : கூட்டுறவுத் தணிக்கை உதவி இயக்குநர் (ஓய்வு)

பாடல் படைக்க
வழிகாட்டிகள்: பாவலர் பண்ணை, தெளிதமிழ்,
பாவலர் மு.வே. கங்காதரன்

குறிக்கோள் : சிறந்த மரபு பாக்கள் சிறுகதைகள் எழுதுதல்

முகவரி : 160, 14ஆம் தெரு, கிருட்டினா நகர்,

மதுரவாயில், சென்னை - 600 095

தொலைபேசி :95-44-23782236

பாவலர் பரிசு திட்டம்-33
எழுசீர் வண்ணக்குறட்டாழிசை-2

சந்தக் குழிப்பு: தனனா தனந்த தனனா தனந்த
தனனா தனந்த தனனா

உரூபா 500 பரிசுபெறும் பாடல்:

1.தமிழா லுயர்ந்து தமிழா(ல்) வளர்ந்து
தமிழே மறந்து திரிவான்
உமிபோ லிழிந்த உடலே சுமந்த
உதவா தமைந்த மகனே!
- பைந்தமிழ்ப் பாவலர் மு. வே. கங்காதரன், சென்னை-83

வெளியீட்டுக்குத் தேர்வு பெற்ற பாடல்கள் (வரிசைப்படி) :

2.இனமா னமின்றி இழிவா னநெஞ்ச மிசையோ டுதந்த படமே
சினவா துசென்று விழியா லருந்தி மனமே மயங்க லழகோ?
- சு. இலம்போதரன், தண்டை

3.அணிநா ணழிந்து துணிவே யிழந்து பிணியோ டுநின்ற தமிழா!
பணிவோ டுவந்த புகழே யிழந்து பிணமா னதுன்ற னிலையே!
- பூங்கொடிபராங்குசம், புதுச்சேரி-13

4.இமையா திரண்டு விழியோ டுவந்து நடமா டுகின்ற மயிலே!
உமைபோ லவிங்கு நலமே விளங்க ஒளியா கிவந்த வடிவே!
- ப. வனிதா, நெய்வேலி

5.தமிழே யுய(ர்)ந்த மொழியா குமென்ற வுண(ர்)வா லியங்கி யதையே
நமதா வியென்று வளமே றுகின்ற வழிகா ணலென்ப தழகே !
- ப. நீலா, சத்தியாநகர்

6.தலைமே லெழுந்த நரையே தளர்ந்த உட(ல்)மே(ல்) விரிந்த திரையே
புல(ன்)மே(ல்) விளைந்த குலைவே முதி(ர்)ந்த பெரியோர் வருந்து நிலையே
- மு, இராம. கனகராசன், புதுச்சேரி-3

7.உழவோ டுழன்று கடனா லெழுந்த குழியோ டழுந்து குறியே
பிழைபா டறிந்து பிழையே புரிந்து பழியா னதெங்க ளரசே !
- இராச. அப்பாசி, கடலூர்-1

8.கனவா கவந்து நினைவா கநின்று கனியா னநங்கை உறவே!
துணையா கவந்து மனையா கநின்று கனிவா கிவந்த நிலவே!
- மா. இராமமூர்த்தி, அதிகாரப்பட்டி

முன்னரே பரிசு பெற்றோர் பாடல்கள்:

விழியே துறந்து வழிதே டுகின்ற வினைதா னுகந்த நெறியோ?
மொழியே மறந்து பழியே சுமந்த முறைதா னமைந்த அறிவோ?
- புலவர் மா. சு. மணி, திருக்கழுக்குன்றம்

அறமே திறம்பி அரசே புனைந்து மறமே புரிந்த மடவோர்
அறவே தொலைந்து நிலையே திருந்தி அறிவோ ரிலங்க லழகே
- பைந்தமிழ்ப்பாவலர் புலவர் சி. பெருந்தேவன், தவளக்குப்பம்.

மனமே கனிந்து மறமே சிறந்து வளமே நிறைந்த தமிழே!
நினையே மறந்த நிலையே திரிந்த நிலமோ இறந்த உடலே!
- த. இராமலிங்கம், சின்னமணல்மேடு

மறைவா யிருந்து கறையே நிறைந்து மறையோ துகின்ற மடையா!
இறைமீ திருந்த நிறைவா னநெஞ்சு கறையா லழிந்த திவணே!
- புலவர் வீ. வில்வநாதன், க. மு.. வெங்காலூர்-16.

பலபே ருடம்பு நொடியே சிதைந்து தெருவே கிடந்த தறமோ?
கொலையே புரிந்தி னுலகே யழிந்தெ னுறுவீ(ர்) கொடும்பு(ன்) முறையீர்!
- மு. திருவாணன், திண்டுக்கல்

மடமே செறிந்து தொழவே புகுந்த மனைமா மடந்தை தனையே
மடமே யுறைந்த துறவோ(ன்) விழைந்து மடைவா னிழிந்து வலிதே!
- கலைமாமணி கோவி, கலியபெருமாள். அரியாங்குப்பம்

கலையே நிறைந்து நிலையே உய(ர்)ந்து கனிவே வழங்கு மெழிலே!
தலையே சிறந்த தடமே விளங்கு தமிழே மல(ர்)ந்த பொழிலே!
- வேங்கடேசபாரதி

வழியே மொழிந்து வரலா றழிந்து வளமே பொருந்த லழகோ?
தொழிலே மிகுந்து துவளா தெழுந்த துணிவா லொடுங்கு மிழிவே
- புலவர் த. ஆறுமுகன், சென்னை-49

அடியே வணங்கி அறிவே இழந்து மறமே மறந்த தமிழா
குடியே துலங்க மொழியே இலங்க உரமோ டிணைந்தெ ழுகவே
- பாவலர் கருமலைத் தமிழாழன், ஓசூர்

அறிவே இழந்த ஒருநா டழிந்த வரலா றறிந்த உடனே
வெறியோ டுடன்று வருவா யெழுந்து கொளவா வலிந்து தமிழா!
- மருதநாடன், திருச்சிராப்பள்ளி-21.

தமிழா துணிந்து தடையே கடந்து தகைவே புரிந்து வருவாய்
உமியா நினைந்து வருவா(ர்) வணங்க உனைநீ உண(ர்)ந்து நடவாய்!
- வே. ச. திருமாவளவன், புதுவை-8

மறையோ துகின்ற மனமேவு கின்ற உலகாளு மெங்க ளரசே!
நிறைவா கவின்று நலமே வவுன்ற னுளமே இசைந்து வருமா?
- பொன். பசுபதி, புதுச்சேரி-13

மழையா லளந்த மரமே அழிந்து மலடா னதிந்த நிலமே
பிழையா வறிந்து மதையே மறந்த எவரா லுமிந்த இடரே.
- ஆ. குமாரசாமி, சென்னை-95

கலையா யுகந்து பொலிவா யமைந்து கருவா யிருந்த அமிழ்தே
நிலையா யமைந்து நிறைவா யுய(ர்)ந்து நினைவோ டுநின்ற தமிழே!
- பாவலர் ஆ. இராமலிங்கம், வேளாங்கண்ணி

தமிழே பயின்று தமிழா லுய(ர்)ந்த தமிழா பயின்ற மொழியை
அமைவா யிருந்து விழியா யுண(ர்)ந்துபுகழே அடைந்து மகிழ்வாய்!
- புலவர் அரங்க. பணிக்குன்றன், புதுச்சேரி-13.

தமிழா லுய(ர்)ந்து தமிழால் வள(ர்)ந்த தமிழா பசுந்த மிழிலே
உமியே கலந்த நிலையே திருந்த உடனே விரைந்து முனைவாய்!
- புலவர் கி. த. பச்சையப்பன், சென்னை-81

கருத்தூன்றுக

1. சந்தத்தையே சிலர் விளங்கிக்கொள்ள முயலாமல் பாட்டெழுதியிருந்தனர்,

2. வழகாய், குழகாய், உழிந்து, மழம் என்பன போன்ற, அகரவரிசையைப் பார்த்துப் புரிந்து கொள்ளக் கூடிய சொற்களைப் பாடலிற் பெய்தல் விரும்பத்தக்கதன்று.

3. பதமா கனிந்து, அருந்த குறையே, என்பன முறையே பதமாக் கனிந்து, அருந்தக் குறையே, என்று புணரும். புணரின் சந்தம் பிழைக்கும்.

4. வசை-வினை, பணி-படை, தமிழ்-சதி எதுகையாகா.

5. இவை தமிழல்ல பதம்(செவ்வி), பதி(தலைவன்), சதி(சூழ்ச்சி), சிந்தை(மனம்), கணம்(நொடி)

பாவலர் பரிசு திட்டம்-34

பாவலர்களே, பாவலர் பரிசு திட்டம் தொடங்கி 33 திங்கள்கள் கடந்தன. இதுவரையில் பல்வேறு பாவகைகளில். பல்வேறு சந்த வண்ண அமைப்புகளில், பல்வேறு அணிகள் அமையும் பாடல்களைப் படைத்துப் பரிசும் பாராட்டும் பெற்றிருக்கிறீர்கள். உங்களால் மரபு யாப்புக்கே ஒரு மதிப்பு ஏற்பட்டுள்ளது. சந்தம், வண்ணம், சிந்துப் பாவகைகளை இலக்கணத்துடன் படைக்கும் திறன் உங்களுக்குக் கைவந்திருக்கிறது. உங்களால் ஒரு பாடலைப் பார்த்து அதன் யாப்பமைப்பை அறிந்து அந்த வகைப் பாடலைச் செம்மையாகப் படைக்கமுடியும். எனவே, இந்தத் திங்கள் முதல் பரிசு திட்டத்தில் ஒரு மாறுதல் செய்யப்படுகிறது. அதாவது ஒரு பாடலைக் கொடுத்து அதன் இலக்கணம் அறிந்து அந்த அமைப்பில் பாடல் எழுதுமாறு கேட்பதே அது.

மற்றுமொரு மாறுதல். இப்புதிய முறைப் பரிசு திட்டத்தில் ஏற்கெனவே பரிசு பெற்றோரும் கலந்துகொள்ளலாம். பிற நெறிமுறைகள் வருமாறு :

1. ஒருவர் ஒரு பாடல் மட்டுமே அனுப்பலாம்.

2. பாடல்களைத் தேர்வு செய்வதில் வல்லுநர்குழுவின் முடிவே இறுதியானது.

3. ஒரு திங்களுக்கு ஒரு முதற்பரிசு மட்டுமே (உரூபா 500 மதிப்புள்ள) நூல்களாக அனுப்பிவைக்கப்படும்.

4. வெளியீட்டுக்குத் தகுதியானவை என்று வல்லுநர் குழுப் பரிந்துரைக்கும் பாடல்கள் தரவரிசைப்படி வெளியிடப்படும்.

5. இப்புதிய முறையில் பரிசு பெற்றவர் பாடல் அதுமுதல் 2 ஆண்டுக்குத் தேர்வுக்கு உட்படுத்தப்பெறாது. ஆனால் அவர்தம் பாடல் தகுதி யுடையதாயின் வழக்கம்போல் வெளியிடப்படும்.

கீழ்க்கண்ட அமைப்பில் விரும்பிய பொருளில் ஒரு பாடல் இயற்றி வரும் கன்னி 20 (7-10-2007)க்குள் விடுக்க.

நாடி நந்தமிழி னாளு நன்றிசொல
நாணு கின்றவ(ர்)க(ள்) மடையரே!
வாட நந்தமிழ(ர்) சோறு தின்றுலகி(ல்)
வாழு கின்றவ(ர்)க(ள்) கடையரே!
- இரா. தி.