ஊர் நடவடிக்கைகள் - உரையாடல்

இரைக்க இரைக்க ஓடிவந்தான் இளவழுதி.

"என்னங்கய்யா, எத்தனையோ ஆண்டாய்த் தமிழ்வழிக்கல்வி, தமிழ்வழிக் கல்வின்னு போராடிக்கினு வரீங்க, கடைசீல உங்க தொகுதியிலேயே அரசு ஆங்கில வழிப் பள்ளியைத் திறக்கிறதே!" என்றான் இளவழுதி.

"அப்படியா? எப்படிச் சொல்லுகிறாய்?" என்று கேட்டார் தமிழையா.

"எங்குப் பார்த்தாலும் சுவரொட்டி ஒட்டி யிருக்கிறார்கள்.


'ஏழை ஆதி திராவிட இன மக்களின் நீண்ட நாள் கனவாகிய அரசு ஆங்கிலவழித் தொடக்கப் பள்ளியை அரும்பாடுபட்டுக் கொண்டு வந்த ஏழைகளின் ஒளி விளக்கு' என்று இரா. சிவா ச.ம.உ. அவர்களைப் பாராட்டி வரவேற்றிருக்கிறார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அரங்கசாமி அவர்களும், மாண்புமிகு கல்வி யமைச்சர் சாசகான் அவர்களும் இராசா நகரில் இன்று (30-8-07) காலை 10 மணிக்குப் பள்ளியைத் திறக்கப் போகிறார்கள்".

"வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்று வாழ்ந்து, தமிழைக் கட்டாயப்பாடமாக்கிய கலைஞர் கட்சியைச் சேர்ந்த சிவாவா அரும்பாடுபட்டு ஆங்கிலவழிப் பள்ளியைக் கொண்டுவந்தாராம்?"

"அப்படித்தான் ஐயா சுவரொட்டி சொல்கிறது."

"என்ன செய்வது? மக்கள் நீண்ட நாளாகக் கனவு கண்டார்களாமே! அதை நிறைவேற்றவேண்டியது மக்களாட்சியில் அரசின் கடமையல்லவா?"

"ஏழை மக்கள் ஏனையா ஆங்கிலப்பள்ளியைக் கனவு கண்டார்கள்?"

"தம் மக்கள் ஆங்கிலவழியில் படித்தால்தான் நம் அமைச்சர்களைப்போலவும், சட்டமன்ற உறுப்பினர்களைப் போலவும் செல்வம் கொழிக்க வாழ்வார்கள் என்று அவர்கள் எண்ணியிருக்கக் கூடும். தம் பிள்ளைகள் வளமாக வாழ வேண்டும் என்று பெற்றோர்கள் நினைப்பது இயற்கைதானே!"

"அது சரி, நம் ச.ம.உ.க்கள் ஆங்கிலவழியில் படித்ததால்தான் கைந்நிறையச் சம்பாதிக்கிறார்களா?"

"அவர்கள் அப்படித் தவறாக நினைத்திருக்கலாம்"

"பணக்காரர்கள் தங்கள் பிள்ளைகளைப் பணம் செலவுசெய்து ஆங்கிலவழித் தனியார் பள்ளியில் படிக்கவைக்கிறார்களாம். தங்கள் பிள்ளைகளும் ஆங்கில வழியில் படிப்பதற்கு அரசு ஆங்கிலவழித் தொடக்கப் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று மக்கள் கேட்பதாக எல்லாச் சட்டமன்ற உறுப்பினர்களும் (தமிழ்நாட்டில் பலரும் பாராட்டும்படி தமிழுக்காகப் பாடுபட்டுக்கொண் டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ச.ம.உ.க்களும் உட்படவா என்பது மருத்துவர் ஐயாவுக்குத் தான் வெளிச்சம்!) முதலமைச்சரிடம் வற்புறுத்தினார்களாம்!"

"மக்கள் அப்படிக் கேட்டாலும், இவர்கள் அது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு ஆகாது என்று அறிவுறுத்தவேண்டியதுதானே? "குடும்ப அட்டைக்கு விலையில்லாமல் சாராயம் ஊற்றுங்கள்" என்று குடிமக்கள் கேட்கிறார்கள் என்றால் இவர்கள் அப்படிச் செய்வார்களா? வேறு ஒன்று மில்லை வழுதி, ஏழைமக்களுக்கு அவர்கள் விரும்பியதெல்லாம் விலையில்லாமல் கிடைக்கவேண்டும். அரசியல்வாதிகளுக்கு அவர்களின் ஒப்போலை வேண்டும். மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் மஞ்சள் குளிக்கிறார்கள். அவ்வளவுதான்! விடு தம்பி, விழலுக்கு இறைத்தது போதும்."

"ஐயா, "ஆங்கிலத்தில் கெட்டிக்காரராக இருப்பவர்க்குத்தானே வேலை கிடைக்கிறது? மேல் படிப்புக்கு இடம் கிடைக்கிறது? எங்கள் பிள்ளைகள் நல்ல வேலை பெற வேண்டாமா? மேட்டுக்குடி மக்களைப்போல மேல்படிப்புப் படிக்க வேண்டாமா? அந்த உரிமை ஏழைகளுக்குக் கிடையாதா? ஆங்கில வழியில் படித்தால் தானே ஆங்கிலத்தில் கெட்டிக்காரராக முடியும்?" என்று கேட்கிறார்கள் ஐயா, அதுவும் சரியாகத்தானே தோன்றுகிறது?

"உரிமை கேட்கிற வரையில் சரிதான், ஆனால் உண்மையான உரிமை எது என்று தெரியாமல் கேட்பதுதான் சரியில்லை, "மக்கள் மொழி தமிழ். ஆளுகின்ற நீங்கள் தமிழர்கள். ஆட்சிமொழி தமிழ், எங்கள் பிள்ளைகள் ஏன் ஆங்கிலத்தில் கெட்டிக்காரராக வேண்டும்? அலுவல்களை ஏன் ஆங்கிலத்தில் நடத்துகிறீர்கள்? தமிழில் நடத்துங்கள்! மேற்கல்விகளைத் தமிழ்வழியில் கொடுங்கள்!" என்று கேட்பதுதான் உண்மையான உரிமையை உணர்ந்து கேட்பதாகும்.

"அதென்ன ஐயா, தமிழ்நாட்டில்கூட எந்த அமைச்சரும் ச.ம.உ. வும் இப்படி ஆங்கிலக் கல்விக்குப் பரிந்துவந்ததில்லையே! அங்கிருக்கும் அடித் தட்டு மக்கள்கூட இப்படிக் கனவுகண்டதாகத் தெரியவில்லையே!"

"தமிழ்நாட்டு அமைச்சர்களும் ச.ம.உ.க்களும் இவர்களிடத்தில் அறிவை இரவல் வாங்கவேண்டும்! இப்பேர்ப்பட்ட விந்தைப் பேரறிவாளர்களை உலகிலேயே வேறு எங்கும் பார்க்கமுடியாது வழுதி! நம் புதுவைக்குள்ள தனிப்பெருமைகளில் இதுவும் ஒன்று!"

"ஐயா, தமிழ்வழியில் படித்தவர்கள் ஆங்கிலவழியில் படித்தவர்களைவிடத் தரம் குறைந்தவர்களா?"

"அதில் உண்மை இல்லை. கற்கிற மொழியில்தான் வேறுபாடு இருக்கிறதே தவிரப் படிக்கின்ற பாடம், நடத்தப்படும் தேர்வு அனைத்துமே ஒன்றுதான். எல்லா நாடுகளிலும் நாட்டுமொழிதான் பயிற்றுமொழியாக இருக்கிறது என்று கல்வி வல்லுநர் முனைவர் இராசகோபாலன் தமிழோசையில் (26-8-07) கூறியிருக்கிறாரே படிக்கவில்லையா? பயிற்றுமொழி என்ன? மாநில மொழியாகிய தமிழே படிக்காமல் பல்கலைக்கழகப் பட்டங்களையும் பெறமுடியும் என்ற நிலை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும்தான் உள்ளது. ஆனால் அண்மையில் தமிழ் நாட்டில் கட்டாயத் தமிழ்ச் சட்டம் வந்துவிட்டது. ஆனால் புதுச்சேரியில்?"

"ஏனையா, புதுச்சேரியில்தான் 2002ஆம் ஆண்டிலேயே எட்டாம் வகுப்பு வரையில் தமிழ் கட்டாயம் என்ற சட்டம் வந்துவிட்டதே!"

"அது சட்டமில்லை வழுதி, வாழைப்பழம்! தமிழறிஞர்கள் என்னும் குழந்தைகளுக்குக் காது குத்துவதற்காகக் கையில் கொடுக்கப்பட்ட உரித்த வாழைப்பழம்!"

"சரி ஐயா, தமிழ்நாட்டில் இப்படித் தமிழை விரும்பாத மக்கள் இல்லையா?"

"இருக்கிறார்கள். தமிழ் வேண்டாம் என்று நீதிமன்றம் போகின்றவர்களும் இருக்கிறார்கள். இத்தகைய வழக்கில், அவர்களை ஆணி கட்டின செருப்பால் அடித்ததுபோல், அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் ஓர் அருமையான தீர்ப்பைச் சொல்லியிருக்கிறதே!"

அது "என்ன தீர்ப்பு ஐயா?"

"குழந்தையின் ஆளுமைத்திறனைத் தொடக்கத்திலிருந்தே வளர்க்கும் கடமை மாநில அரசுக்கு உள்ளது. குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு கொள்கைமுடிவு எடுத்துள்ளது. தமிழகத்தில் வாழும் மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் தமிழ்தான் முதன்மைப் பங்காற்றுகிறது. கல்விக் கொள்கைகள் பற்றிச் சட்டமன்றம்தான் முடிவெடுக்க முடியும். அதில் நீதிமன்றம் குறுக்கிட முடியாது என்பது தான் அந்தத் தீர்ப்பு"

"ஐயா, தமிழ்நாடும் புதுச்சேரியும் தமிழ்மாநிலங்கள்தானே? அப்படியிருக்கத் தமிழ்மொழிக் கல்வி குறித்த கொள்கை எப்படி இந்த இரு மாநிலங்களுக்கும் வெவ்வேறாக இருக்க முடியும்? ஆமாம், புதுவை அரசின் கல்விக்கொள்கை தான் என்ன?"

"குழந்தைகளின்மேல் தமிழ்க் காற்றுக்கூடப் படாமல் அவர்களை ஆங்கிலேயர்களாக வளர்ப்பதுதான் புதுவை அரசின் கல்விக்கொள்கை என்று எனக்குத் தோன்றுகிறது. தனிக் கல்விவாரியம் வந்தால் இங்கே தமிழ்நாட்டை விட மிகுதியாகத் தமிழ் மணம் வீசும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதை இவர்கள் தங்களுக்கு வாய்ப்பாக வைத்துக்கொண்டு இருக்கும் தமிழ்வழி வகுப்புகளையும் ஒழித்துக் கட்டிக் கொண்டு வருகிறார்கள்!

"ஐயா, அண்மையில் புதுவை அரசு புத்தொளிர் பள்ளி (SMART SCHOOL) என்ற பெயரில் வேறு 80 ஆங்கிலப்பள்ளிகளைத் திறந்திருக் கிறதாமே!"

"கேள்விப்பட்டேன். அதென்ன 'புத்தொளிர் பள்ளி?' SMART SCHOOL என்ற பெயரைப் பிழையற்ற நல்ல தமிழில் மொழியாக்கம் செய்து தர நம் கல்வித்துறைக்கு ஒரு தமிழறிஞர் கிடைக்கவில்லையா? மேட்டுக்குடிகளுக்கான எல்லாப் புதிய ஏந்துகளுடனும் கூடிய, ஆடம்பரமான பள்ளிகளின் அமைப்பில் நமது அரசு பள்ளிகளைத் திறந்து. ஏழைத் தமிழ்க் குழந்தைகளைக் கூரறிவுள்ளவர்களாக வளர்க்கப் போகிறது போல் தோன்றுகிறது. மகிழ்ச்சி. அவை தமிழ்வழியில் இருந்தால் வரவேற்கலாம். அவற்றில் ஆங்கிலவழி ஏன்? 10ஆண்டுகள் படித்த மாணவர்கள் கூடத் தமிழ் எழுத்துகளையே சரியாக ஒலிக்கத் தெரியாமல், "வெல்லம் வந்ததால பல்லத்தில தன்னி நிக்கிது" என்று பேசும் நிலையில், அங்கே முதல்வகுப்பிலிருந்தே நன்றாக ஆங்கிலம் பேசக் கற்றுக் கொடுக்கப் போகிறார்களாமே அது ஏன்? இது என்ன இங்கிலாந்தா?"

"அது சரி, இதைப்பற்றி இங்கே இருக்கும் மொழி இலக்கிய அமைப்புகளுக் குத் தெரியாதா?"

"எல்லாம் கமுக்கமாக நடக்கின்றன. அதனால் தெரியாமலும் இருக்கலாம். தெரிந்தும், பாட்டும் உரையும் பயிலாத இந்த முழுமக்களின் ஓட்டைச் செவிகளில் என்ன சொன்னாலும் ஏறப்போவதில்லை என்று விட்டுவிட்டும் இருக்கலாம்! தன்னலமில்லாத நல்லறிஞர்களின் கருத்துகளை அரசு புறக்கணிக்கின்றது. சுற்றியிருந்து, அரிப்பெடுத்த இடங்களில் சொறிந்து விட்டுக் கொண்டிருக்கின்ற கூட்டத்தின் எண்ணம்தான் ஈடேறிக் கொண்டிருக்கிறது, என்ன செய்வது?"
-இரா. திருமுருகன்.