![]() |
மனம் திறந்த மடல்கள்
புலவர் மு. முனிசாமி. வேலூர்
மதுரகவிராயர் பாடிய, நக்குப் பொறுக்கி களும்பறப்பர் நானேன் பறப்பேன் நராதிபனே என்ற பாடலில் வந்துள்ள நக்குப்பொறுக்கிகளும் என்ற சொற்றொடர், மதுரகவிராயர் காலத்திலும் நக்குப்பொறுக்கிகள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைக் கூறுவதால் 17.7.2007 தெளிதமிழ் முகப்புப்பாடலின் கருத்துக்கள் ஒன்றும் வியப்பளிக்கவில்லை. திருக்குறள் புலவர் நாவை. சிவம், மணற்பாறை
தெளிதமிழ்க் கடகம் இதழ் முகப்புப்பாடலில் (தாய்மொழியில் ஒப்பமிட நாணும் தடியர்களை நாய்போல மக்கள் நடத்துவதும் எக்காலம்!) பொருளும் உவமையும் போற்றத்தக்கனவே ஆயினும், நாயையே இன்று சிலர் செல்லமாகப் பேணுகின்றனர் ஆதலின் தாய்மொழியில் ஒப்பமிடாத் தறுதலையரை நாயினும் பேயினும் நோயினும் இழிந்தவராகச் சுட்டுதல் நன்று. புலவர் ச.மு. விமலானந்தன், திருப்பத்தூர்.
பேரா. ம. இலெ. தங்கப்பாவைப் பெரிதும் மதிக்கிறேன். ஆனால் தமிழனைத் தமிழரே விலங்கு என இழித்துரைப்பது தமிழ்ப்பண்பாடாகுமா? இவ்வாறு வேறு இனத்தார் கூறினால் பொங்கியெழுந்து போராடுவோமன்றோ? புதுவைச் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழர்கள் தாமே? அவர்கள் ஆங்கிலவழி மழலையர் பள்ளிகளைத் திறக்க வற்புறுத்துவது ஏன்? துணையிழந்து துடித்த பெருந்தேவன் உள்ள முருகிப் பாடிய கையறுநிலை உள்ளத்தை உருக்குகிறது. (தங்கப்பா தமிழனைத்தான் விலங்கு என்றார். வேறு இனத்தாரை அன்று. பெற்றோர். உரிமையோடு தம் பிள்ளைக்கு உணர்வு வர, கழுதை! எருமை! என்பதில்லையா? பாரதியார்கூடத் தமிழர்கள் எருமைகளைப் போன்றவர்கள் என்றார். நானும் எருமைத்தமிழர்கள் என்று ஒரு நூல் எழுதியிருக்கிறேன். எவ்வளவு உறைத்தாலும் உணர்வு வராமல் இன்னும் ஆங்கிலத்தில் ஒப்பமிட்டுக் கொண்டும், சார் என்று அழைத்துக்கொண்டும் இருக்கும் தடித்த தோல் உள்ள எருமைகள் இன்னும் இருக்கின்றனவே!-இரா. தி.) பொறிஞர் அகன், மாத்தூர்
தோழர் கலியாணராமனின் கறுப்புப்பூனைகள் கதைக்கருத்துக் கிணங்க, கடந்த 2000 ஆண்டுகளாகத் தொடர்ந்து கருப்புப்பூனைகளே தமிழருக்கு ஆட்சியாளர்களாய் வாய்த்த கொடுங்கேடன்றோ பல கோடி வெள்ளந்தியான உழைக்கும் தமிழ்மக்களை உயர்வற்றவர்களாக மாற்றியுள்ளது. பாதம், நாமம் உச்சரிப்பு, முக்கியத்துவம், பக்தி, பரவசம் முதலிய அயற்சொற்கள், குனித்த புருவமும் என்ற கட்டுரை வாயிலாகக் கண்களை உறுத்துவதோடு நம் தமிழம்மையையும் உதைக்கின்றனவே! தெளிதமிழ்க்கு இது தகுமோ? ச.நாத்திக நந்தனார், சென்னை-48
அய்யா ம. இலெ. த. வின் இந்த விலங்கின் பேர் தெரியுமா? என்ற அரிய பாடலைச் சுவைத்தேன். அவன் மீண்டும் மாந்தனாகமாட்டான். விலங்காகவே மடிவான். புலவர் ந. ஞானசேகரன், திருலோக்கி
தமிழைக் கட்டாயப் பாடமாக்கியுள்ளதமிழக அரசின் ஆணை செல்லுமெனத் தீர்ப்பு வந்துள்ள வேளையில், நன்கொடையாக நஞ்சு என்ற ஆசிரியவுரை காலம்பார்த்து எய்யப்பெற்ற அம்பு. |