மாணாக்கர் பக்கம்

மாணாக்கர் பரிசுதிட்டம் - 125இன் விடை: திருக்குற்றாலம்

எட்டெழுத்தாலான ஓர் ஊர்ப்பெயரின் எழுத்துகள் 58, 104 என்ற எண்ணுடைய இரண்டு குறட்பாக்களிலும் இருக்கின்றன. அவ்வூர்ப்பெயரைக் கண்டு எழுதுக என்று கேட்டிருந்தோம். அக்குறட்பாக்கள்:

பெற்றாற் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழு முலகு
58

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்றெரி வார்
104

இவ்விரண்டு குறட்பாக்களிலும் வரும்,

ற் றா ரு ல கு தி ம் க் ஆகிய எட்டெழுத்துகளையும் முறையாக அமைத்தால் திருக்குற்றாலம் என்ற ஊர்ப்பெயர் வரும்.

பெற்றாற் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிப்புப்
புத்தேளிர் வாழு முகு
58

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்றெரி வார்
104

இவ்விரண்டு குறட்பாக்களிலும் வரும்,

ரு ற மு கு தி ம் து ன் ஆகிய எட்டெழுத்துகளையும் முறையாக அமைத்தால் திருமுதுகுன்றம் என்ற ஊர்ப்பெயரும் வரும். இந்த விடையைக் கண்டுபிடித்து எழுதியவர் ச. தமிழ்ச்செல்வி-கள்ளக்குறிச்சி. எனவே இவ்விரு விடைகளில் எந்த ஒன்றும் சரியானதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

சரியான விடை அனுப்பியோர்

ச. தமிழ்ச்செல்வி-கள்ளக்குறிச்சி,
பொ. இராமராசு-கோவை,
*இரா. கலைச்செல்வி-நாமக்கல்,
சு. தங்கதுரை-வேலூர்,
த. முத்தமிழ்-கோவை.

* இக்குறியிடப்பெற்றவர் பரிசு பெறுகிறார்.

மாணாக்கர் பரிசுதிட்டம் - 126

ஆராலும் ஆக்கற் கரிதாய்த் துகளாலே
சீராய் இழைத்த திருமனையாம் - நாரில்
அரிக்கும் நறவை அடக்கும் உயரத்
திருக்கும் அதன்பேர் . . .- இரா. தி.

(நாரில்-பன்னாடையில், அரிக்கும்-வடிகட்டும்.)

இஃது ஒரு பிசிச்செய்யுள். இதன் விடையாக வரும் ஒரு சொல் இவ் வெண்பாவின் இறுதிச் சீராக அமையும். அந்தச் சொல்லைக் கண்டுபிடித்து வரும் கன்னி உ0 (7-10-2007) க்குள் எழுதி அனுப்புக.