கண்ணிற் பட்டதும் கருத்திற் பட்டதும்

1. ஏற்கெனவே மூத்தவன் இருக்க இளையவனுக்குத் திருமணம் செய்வித்தது போல், இந்திக்கு இப்போது வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. திறமையும், ஆற்றலும் பருவமும் வாய்ந்த தமிழ் என்ற மூத்தவனுக்கு திருமணம் என்ற ஆட்சி வாய்ப்பை அளிக்க ஆவன செய்வோம். இன்னும் பக்குவமில்லாத குழந்தைகளாக உள்ளவர்களுக்கும் திருமணம் செய்துவைக்கக் கருதும் வீண் வெட்டி வேலைக்கு இனியும் குரல் கொடுக்கவேண்டாம் என வேண்டுகிறோம்.
-தமிழறம், ஆக.-செப். 07, பக். 07

தமிழா, தமிழைத் தமிழாய் எழுது! தமிழில் பிறமொழி கலப்பது பழுது! உரைவள மிகுந்த இலக்கியப் பெருநோக்குள்ள நமது தமிழ் மொழியில் மரபு சொற்களுக்குக் குறைவே இல்லை. இதை மாற்றாரும் ஒப்புக்கொள்வர் இது ஒரு புறமிருக்க...

உரிய பருவமடைந்த இளைஞன் தனக்குத் திருமணம் வேண்டும் என்பதற்காகத் திருமண எண்ணமே வாராத தன் தம்பிகளுக்கும் தனக்கும் திருமணம் செய்துவையுங்கள் என்று கேட்பதுபோல், தமிழன் மட்டும் ஏன் 18 மொழி களையும் நடுவணரசின் ஆட்சிமொழிகள் ஆக்குங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறானோ தெரியவில்லை. நம் நாட்டின் உயர்தனிச் செம்மொழிகள் நீங்களே ஒப்புக்கொண்ட சமற்கிருதமும் தமிழும். அவற்றில் சமற்கிருதத்துக்கு இல்லாத, வாழும் மொழி என்ற தகுதி தமிழுக்கு இருக்கிறது. அதனால் எங்கள் தமிழை நடுவணரசின் ஆட்சிமொழியாக்குங்கள் என்று கேட்கத் தமிழனுக்குத் தெரியவில்லையா? துணிச்சல் இல்லையா?

2. விவேகானந்தர் இந்து சமயத் தொன்மங்களில் கூறப்படும் கதைமாந்தர் களை வழிபடு கடவுள்களாக உருவகப்படுத்துவதை வெறுத்துள்ளார். 1897இல் சென்னையில் இந்து இதழுக்கென அளித்த நேருரையாட்டில். இராமாயணத்திலும் பாரதத்திலும் உயர்த்திக் கூறப்பட்டுள்ள சட்டங்கள், இராமன், கிருட்டினன் என்பவர்கள் கூறியவை அல்ல, அந்த மாதிரி ஆட்கள் எப்போதுமே வாழ்ந்ததில்லை என்று கூடக் கொள்ளலாம் என்னும் ஓர் அரிய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
-தமிழர் முழக்கம், ஆக.-செப். 07, பக். 22

தொன்மங்களில் கூறப்படும் இராமனும் கிருட்டினனும் போன்றவர்கள் வெறுங் கற்பனைகளே என்று விவேகானந்தரே சொன்னாலும் சில முண்டங்களுக்கு விளங்காது. உப்பும், நெய்யும், பாலும், தயிரும் பெருங்காயமும் போட்டுச் சமைத்தாலும் பேய்ச்சுரைக்காய் கசப்பு மாறாது என்கிறது நாலடியார்.

3. தமிழர்கள் கணிசமாக வாழும் நாடுகளில் தமிழை விருப்பப்பாடமாகக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. குடியேறிய நாடுகளில் தமிழர்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு. சொந்த மண்ணில் தமிழர்களுக்கு இல்லை என்பது வேதனை மட்டும் அல்ல, அதிர்ச்சியும் அளிக்கிறது. தமிழ் நாட்டில்-தமிழ் மாணவர்களுக்குத்-தமிழ் சொல்லித் தராத பள்ளிகள் இருக்கத்தான் இருக்கின்றன. நாமும் இந்த நிலைமையைச் சகித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
-தமிழினியன், தமிழ் ஓசை, 5.9.07

பலர்க்கு நடுவே மாற்றான் தன் மனைவியின் துணியை அவிழ்ப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த தருமனைக் கோயில் கட்டிக் கும்பிடுகின்ற பாரதப் பண்பாட்டில் ஊறியவர்கள் நாம். அதனால், பொறுத்தவர் பூமி ஆள்வார் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் எல்லாவற்றையுமே பொறுத்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருக்கின்றோம்!

4. இந்து முன்னணி மாநாடு நடத்தியது. இதையொட்டி இராமர் பாலத்தைப் பாதுகாப்பதற்கான இராம மகாவேள்வி நடத்தப்பட்டது.
-தமிழ் ஓசை, 27.8.07

அப்புறம் எதற்கு நாடாளுமன்றத்தில் கூச்சல், ஊர்வலம். போராட்டம் எல்லாம்? இராம மகா வேள்வி ஒன்றே போதுமே!

5. தமிழகத்தில் முதல்கட்டமாக 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலாவது தமிழே பயிற்றுமொழி என்ற திட்டத்தைத் தமிழகஅரசு அறிவிக்கவேண்டும். இப்போது கொண்டுவந்துள்ள தமிழ் மொழிப்பாடச் சட்டம் எப்படிப் படிப்படியாக நிறைவேற்றப்படுகிறதோ அதைப்போலத் தமிழ் பயிற்சிமொழிச் சட்டத்தையும் படிப்படியாக நிறைவேற்றலாம். அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட விரும்பவில்லை என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள தீர்ப்பைச் சாதகமாக எடுத்துக்கொண்டு தமிழ் பயிற்சிமொழித்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கொள்கை முடிவினைத் தமிழக அரசு உடனடியாக எடுக்கவேண்டும். அதனை வரும் கல்வி யாண்டிலிருந்து (2008-2009) செயல்படுத்துவதற்கும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மருத்துவர் ஐயா, தமிழ் ஓசை, 24.8.07

சரியான நேரத்தில் சொன்ன சரியான, ஊக்கந்தரும் கருத்துரைதான். ஆனால் முதிர்ந்த பட்டறிவுள்ள முத்தமிழறிஞர் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.

6. தமிழே பயிற்று மொழி என்ற திட்டத்தை உயிர்ப்பித்திட உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்று பட்டுக் குரல் எழுப்பும் காலம் நெருங்கிக் கொண்டுதானிருக்கிறது.
-தமிழக முதல்வர் கலைஞர், தமிழ் ஓசை, 26.8.07

அதாவது தமிழைப் பயிற்றுமொழி ஆக்குவது எப்போதுமே நடக்காது என்பது இதன் கருத்து. ஏனென்றால் தமிழர்கள் அனைவரும் எந்தக் காலத்தில் ஒன்றுபட்டுக் குரல் எழுப்பப்போகிறார்கள்? இதனால் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்ளுவது என்னவென்றால், தமிழைப் பயிற்றுமொழி ஆக்கும் கோரிக்கையைக் கலைஞர் தட்டிக்கழிக்கிறார் என்பதே!

7. வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என நினைப்பவன் நான். தமிழ் வாழும். மற்றவர்களையும் வாழவைக்கும் என்ற உறுதியை நான் தருகிறேன்.
-தமிழக முதல்வர் கலைஞர், தமிழ் ஓசை, 2.9.07

நினைப்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அதற்காவன காலத்தோடு செய்யப்படவில்லை. அதனால், தமிழ் வாழவில்லை. செத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் மற்றவர்களை அது வாழவைத்துக் கொண்டுதான் இருக்கிறது.