ஆண்டு : க௪
இதழ் :
தி. ஆ. உ0௩அ, கன்னி,
18 - 9 - 2007
ஏன் பிறந்தோம் ?

அடகெடுவீர், ஆங்கிலத்தைக் கற்று வாழ
அறியாமல் தமிழ்கற்றோம். அரசு நம்மை
மடையர்களாய் நினைக்கிறது! கழன்று திர்ந்த
மயிரெனவே மதிக்கிறது! தமிழைக் காக்க
முடியவில்லை. கண்ணெதிரே தாய்சா கின்றாள்!
மூடரெலாம் கூடியர சாளும் நாட்டில்
அடிமுட்டாள் பேச்சைத்தான் அரசு கேட்கும்!
அறிஞர்களின் அறிவுரையை எவன்கேட் கின்றான்?

ஏடுபல வெளியிட்டோம்; எழுதிப் பார்த்தோம்;
எண்ணரிய போராட்டம் செய்தோம்; ஆனால்
நாடாள வந்தோரின் கால்செ ருப்பை
நக்குதற்குக் கற்றோமா? அவர்கள் காட்டும்
மூடிவைத்த இடங்களிலே சொறிந்து விட்டு
முகமெல்லாம் பல்காட்டக் கற்றிட் டோமா?
நாடியிரு மாவேலை செயக்கற் றோமா?
நாமிங்கே ஏன்பிறந்தோம்? நவிலு வீரே.

-இரா. திருமுருகன்