தங்கள் தலையில் தாங்களே மண்ணைவாரிப்
போட்டுக்கொள்ளும் கீழ்த்தட்டு மக்கள்

இப்படி ஒரு சுவரொட்டி சில நாள்கட்கு முன் புதுவை நகரச் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்தது. பாவம், அப்பாவிக் கீழ்த்தட்டு மக்கள் ஆங்கிலவழிக் கல்வி உயர்வென்று கருதி அதைப் புதுவை அரசு தங்கட்குத் தந்தமைக்கு மகிழ்ந்து அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்,


இது தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளும் செயல் என்பதை அவர்கள் அறியாதிருக்கின்றனர். "எங்கள் பிள்ளைகளுக்கு எங்கள் மொழியில் கல்வி கொடு; அதுதான் எங்கள் முன்னேற்றத்துக்கான வழி" என்று அவர்கள் அரசுக்குக் கட்டளையிட்டிருக்கவேண்டும்.

மக்களாட்சியில் மக்களே தலைவர்கள். ஆட்சியாளர் ஊழியக்காரர்களே. தாங்கள் செலுத்தும் வரிப்பணம் சரியான வழியில் பயன்படுத்தப்படவேண்டும் என்று கூறுவதற்கு மக்களுக்கு முழு உரிமை உண்டு. அதை விட்டுவிட்டுப் பணக்காரனெல்லாம் பணம் கட்டி ஆங்கில வழியில் படித்து முன்னேறுகிறான். எங்களிடம் பணம் இல்லை, எங்கள் பிள்ளைகளுக்கு அரசு இலவசமாக ஆங்கில வழிக் கல்வி தர வேண்டும் என்று மக்கள் அரசைக் கெஞ்சுகின்ற அவல நிலை இந்தப் புதுவை மண்ணில்தான் இருக்கின்றது.

இரண்டு உண்மைகளை மக்கள் உணராமல் போய்விடுகின்றனர். ஆங்கில வழிக் கல்வி சட்டப்படி இங்கு நிலவுவதற்கு எந்த உரிமையும் இல்லை என்பது ஒன்று. ஆங்கிலவழிக் கல்வி எந்தவகையிலும் முன்னேற்றத்துக்கு உரியதன்று என்பது அடுத்த உண்மை. இந்த இரண்டு உண்மைகளையும் மக்கள் தெரிந்துகொண்டால் போதும். ஆங்கிலவழிக் கல்விக்காரர்கள் ஓடெடுக்க வேண்டியதுதான். ஆனால் இன்றோ மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அவர்கள் மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றார்கள்,

ஆங்கில வழிக் கல்வி ஒழிக்கப்படவேண்டியது. அது முன்னேற்றத்துக்குத் துணைபுரியாது என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் இன்று நடை முறையளவில் ஆங்கிலவழிக் கல்வி ஒரு நடப்பு உண்மையாக மக்களைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கின்றது. கல்வியாளர் எனப்படுவோரின் ஆங்கில அடிமைத்தனத்தாலும் ஆட்சியாளரின் தெளிவின்மையாலும் ஆங்கிலவழிக் கல்வி வாணிகரின் கயமைத்தனத்தாலும் அது பேருருவம் பெற்று மக்கள் முன் நின்று கொண்டுள்ளது,

"பணக்காரர் பணம் கொடுத்துப் படிக்கும் ஆங்கிலவழிக் கல்வி எளியவர் களாகிய எங்களுக்கு எட்டாமல் இருக்கிறது. எங்கள் பிள்ளைகளும் ஆங்கில வழியில் படிக்கவேண்டும். அதனால் அரசுபள்ளிகளில் இலவசமான ஆங்கில வழிக்கல்விக்கு ஏற்பாடு செய்யுங்கள்" என்று மக்கள் கேட்டார்களாம். உடனே அரசு அவர்கட்கு அதை வழங்கிவிட்டதாம்! என்ன தாராளம்!

முன்னேற்றமடைந்த மேல்தட்டு மாணவனையும் முன்னேற்றமடையாத கீழ்த்தட்டு மாணவனையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்தி ஓடவைக்கலாமா? ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாகப் படிப்பதிலோ ஆங்கிலவழிக் கல்வி பெறுவதிலோ மேல்தட்டு மாணவரோடு கீழ்த்தட்டு மாணவர் போட்டிபோட முடியுமா? ஆங்கிலத்தில் பழகி, ஆங்கிலச் சூழலில் வளர்ந்து, ஆங்கிலம் படித்த பெற்றோர்களின் உறுதுணையுடன் ஆங்கிலம் கற்கும் நகர மாணவர்கள் எங்கே? ஆங்கிலத் தொடர்பே இல்லாத எழுதப் படிக்கத் தெரியாத ஏழைக் குடும்பங்களில் பிறந்து வளர்ந்து பாடம் படிக்கப் போதிய நேரம் கிடைக்காத வறுமைச் சூழலின் நடுவிலிருந்து பள்ளிக்கு வரும் நாட்டுப்புற மாணவர் எங்கே? ஆங்கிலச் சூழலுக்கே உரிய ஆங்கிலவழிக் கல்வியை ஆங்கிலச் சூழல் அறியாத கீழ்த்தட்டு மாணவர் மீது திணிக்கலாமா? தாய் மொழிவழிக் கல்வியில் ஒழுங்காகக் கற்றுத் தேறும் கீழ்த்தட்டு மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வியில் அடிபட்டுப் போகின்றனரே! இது கடந்த சில ஆண்டுகளில் சிற்றூர்ப்புற மாணவரிடை நடத்தப்பட்ட ஆய்வில் வெளிப்படையாகத் தெரிந்த உண்மையாயிற்றே!

மேலும் தனியார் நடத்தும் ஆங்கிலவழிப் பள்ளிகட்கும் அரசு நடத்தும் ஆங்கிலவழிப் பள்ளிகட்கும் எவ்வளவு வேறுபாடு! நகரில் நடக்கும் ஆங்கில வழிப்பள்ளிகள் கொழுத்த வருவாய் உடையவை; கொள்ளையடிக்கும் தந்திரங்கள் மிகுந்தவை; அரசின் அக, புறத்துணைகளைப் பெற்றிருப்பவை. மிகப் பெரிய வாணிகர்களாலும் சமய நிறுவனங்களாலும் இவை நடத்தப்படுகின்றன. திறமையான ஆசிரியர்கள் இங்கு அமர்óத்தப்படுகின்றனர், கற்பித்தல் பல்வேறு கருவிப் பொருள்களோடும் கற்றல் முறைகளோடும் நடத்தப்படுகின்றது. கண்டிப்பும் கட்டுப்பாடும் மாணவர்களை நன்கு படிக்கவைக்கின்றன. ஆசிரியர்கள் மீது கண்காணிப்பும் மேற்பார்வையும் இருப்பதால் அவர்கள் யாரும் வேலை செய்யாமல் ஏமாற்ற முடியாது.

ஆனால் அரசு பள்ளிகள் எவ்வாறு நடக்கின்றன? மந்தைகளை அடைத்து வைக்கும் திறந்த மடங்களாகத்தாமே அரசு பள்ளிகள் பல காட்சி தருகின்றன! பல பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் அமர்த்தப்படவில்லை, சரியான பாடத்தைச் சரியான ஆசிரியர் நடத்துவதில்லை. மேலும் இப்பொழுதெல்லாம் கண்காணிப்பு, மேற்பார்வை, ஆய்வு முறைகள் அரசு பள்ளிகளில் அடியோடு நிறுத்தப் பட்டுவிட்டனவே. பாடங்களை ஆங்கிலவழியில் திறமையாக நடத்தத் தெரியாத ஆசிரியர் கைகளில்தான் நாட்டுப்புற ஆங்கிலவழி மாணவர் ஒப்படைக்கப் படுகின்றனர். பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர் பலர் ஆங்கிலத்தில் போதிய மதிப்பெண் பெறமுடியாமல் தோல்வியடைகின்றனர். தேர்ச்சி பெற்றாலும் கூட ஆங்கிலத்துக்கு அஞ்சி இவர்கள் கல்லூரிகளில் நுழைவதில்லை.

மேல்தட்டு மாணவர்கள் ஆங்கிலவழிக் கல்வியை வைத்துக்கொண்டு எப்படியாவது முன்னேறிவிடுகின்றனர். ஆனால் தமிழ்வழிக்கல்வியில் நன்றாகப் படித்து முன்னேறும் வாய்ப்புடைய கீழ்த்தட்டு மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வியைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தேர்ச்சிபெறாமல் முன்னேறும் வாய்ப் பிழந்து போகின்றனரே. இப்படி அவர்களின் இயல்பான முன்னேற்றத்தை ஆங்கிலத்தைப் புகுத்தி அரசு தடை செய்யலாமா? நீந்தத் தெரியாதவனைத் தண்ணீரில் பிடித்துத் தள்ளலாமா?

புதுவை அரசு தன் தமிழ்வழிப் பள்ளிகளைப் படிப்படியாக ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றிக் கொண்டு வருவது கீழ்த்தட்டு மாணவர்க்கு எந்த வகையிலும் நன்மை செய்வதாகாது. மாறாக அவர்களை மேலும் மேலும் பின்னுக்குத் தள்ளுவதாகும். இருப்பதையும் பறித்துக்கொள்வதாகும். இந்த நிலையில் "எங்கள் பிள்ளைகளும் ஆங்கிலவழியில் படிக்க ஏற்பாடு செய்யுங்கள்" என்று ஒன்றுமறியா ஏழைமக்கள் அரசை வேண்டிக் கொள்வார்களானால் அது அவர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதே ஆகும்.
-பேராசிரியர் ம. இலெ. தங்கப்பா.