![]() |
இயற்கைப் புணர்ச்சிக்கு முற்பட்ட
கைக்கிளைக் கூற்றுக்கள் நூற்கடல் தி. வே. கோபாலையர் 'ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின், ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப' எனவும், 'தானே அவளே தமியர் காணக், காமப் புணர்ச்சி இருவரின் ஒத்தல்' எனவும் கூறப்படுதலான் காமப்புணர்ச்சி எனப்படும் இயற்கைப் புணர்ச்சிக்கு உரிய நிலைக்களன் தலைவனும் தலைவியும் தாம் அறிந்து செய்யும் முயற்சி எதுவும் இன்றி பண்டைய வினைப் பயனாகிய ஊழ் கூட்டி வைத்த இயல்பால் அமைந்ததாம். 'ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப' எனவே, காட்சி என்ற செயல் இருவரின் முடியும் ஒரு வினையாகவே தலைமகனைத் தலைமகள் காண்டலும் தலைமகளைத் தலைமகன் காண்டலும் ஒரு சேர நிகழ்வனவாம். தலைவன் குறிக்கொண்டு நோக்குவான், தலைவி ஒருகண் சிறக்கணித்தாள் போன்று நோக்குவாள். இதுவே நோக்குதலில் நிகழற்பாலதோடு வேறுபாடு. 'உடம்பும் உயிரும் வாடியக் காலும் ஆதலின் இயற்கைப் புணர்ச்சிக்கு உரிய ஆயத்தங்களில் முயலும் செயல் தலைவன் மேற்றோ அங்ஙனம் முயலுதற்கு முன் அவளும் தன்னிடத்துக் கற்பிளளா என்ற செய்தியை அறிதல் வேண்டும். காட்சி முதல் குறிப்பறிதல் காறும் உள்ள இடைப்பட்ட சில மணித்துளி நேரம் தலைவன் ஒருதலை ராகத்தனாய் இருக்கிறான். இந்தச் சில மணித்துளி நேரமே களவுக்கு முற்பட்ட கைக்கிளை என்று சொல்லப்படுகிறது. கை-பக்கம். கிளை-உறவு; கைக்கிளை-ஒருபக்கத்து உறவு 'ஒரு தலையான் இன்னாது காமம்; காப்போல இருதலையாலும் இனிது' ஆதலின் தலைவன் தலைவி ஆகிய இருவருள் ஒருவர் மாத்திரம் சொற்கும் அன்பு கைக்கிளை எனப்பட்டது. இனி, கை-சிறுமை, கிளை- உறவு எனவே இருதலையும் ஒத்தது என்ற பெருமையை அடையாத சிறுமையுற்ற தலைமக்கள் நட்பு என்றும் பொருள் கொள்ப. 1. கைக்கிளை பல வகைப்படும். மிகச் சிறப்புடைய கைக்கிளை, காமஞ் சாலா இளமை யோள்வயின் என்று ஆண்டு மூத்த ஆடவன் பெதும்பைப்பருவமும் உறாதாள் ஒருத்தியைப் பார்த்துப் பேசும் பேச்சுக்கள் எப்பொழுதும் மறு மாற்றம் பெறாத நிலைபெற்ற கைக்கிளைப் பேச்சுக்களாம். 2. ஒருத்தியை ஒருவன் கண்டக்கால் ஏற்படும் மனநிலைபற்றிய கைக்கிளை முன்னைய நான்கும் முன்னதற் கென்ப யாரேனும் பெருவனப்பினள் ஒருத்தியை மேதக்கான் ஒருவன் காணும் போது ஏற்படும் காட்சி ஐயம் தெளிதல் குறிப்பறிதல் என்பன அவன் குறிப்பை நன்று எனக்கோடற்கும் அன்று எனக்கோடற்கும் பொதுவாக அமைதலான் இம்மனநிலை கைக்கிளையாகவே இறுதிவரை அமைதலும் கூடும் என்பதனை உட்கொண்டு இதுவும் சிறப்புடைக் கைக்கிளையாகக் கொள்ளப்பட்டது. 3. காமம் சான்ற இளமையோள்வயின், குறிப்பு அறிவானும் குறுகாது நின்று குறிப்படு நெஞ்சொடு கூறும் கைக்கிளை. இதனைத் தொல்காப்பியம் கைக்கிளை என்று பெயரிடாமல், ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப - காட்சி என்ற செய்திகளைக் கூறுகிறது. இதுவரையில் ஐந்திணை ஒழுக்கமாக மாறுவது ஆதலின் இது சிறப்புடைய கைக்கிளை அன்று. 4. முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே என்று கொள்ளப்படும் அசுரம், இராக்கதம், பைசாசம் என்ற மூவகை மன்றல்கள். அசுரம் - ஒருத்தியை மனைவியாக அடையக் கொல்லேறு கோடல், வில் லேற்றுதல், திரி பன்றி எய்தல் முதலிய செயல்களுள் ஒன்றாகச் செய்து அச்செயலின் பரிசாக அவளைப் பெறுதல். இராக்கதம் - தலைவியை வலிதிற் கவர்தல் பைசாசம் - களித்தோர், துயின்றோர் முதலியோர்களை வேட்கை மிகுதியால் வலியக்கூடுதல். இவை தொடக்கத்தில் ஒருதலைக் காமமாக அமைந்து திருமணமானபின், அன்புடைக் காமமாக மாறக்கூடிய சிறப்பில்லாத கைக்கிளை. (தொடரும் ) |