அன்பு இலதனை... - சிறுகதை
பொறிஞர் அகன் ஐயர், மாத்தூர்

கண் விழித்தவுடன், சாளரத்தின் வழியே தோட்டத்தை நோக்கினேன், வேம்பின் கிளைகளினூடே செக்கச்செவேல் எனத் தங்கத்தட்டாகக் கீழ்வானில் காட்சியளித்தது இளம்பரிதி! சிவமே என இருகைகூப்பி நெஞ்சாரப் போற்றினேன் அச்சிவந்த பரிதியை! சிவத்தின் செவ்வொளி மனமெங்கும் சிலிர்ப்பை ஏற்படுத்திற்று! புறநகர்ப் பகுதியிலிருக்கும் என் வீட்டின் கிழக்கே வீடுகள் எவையும் இல்லாதிருந்ததும் நல்லதாக ஆயிற்று!

பல் துலக்கிக் காலைக்கடன் முடித்தேன். வழக்கம் போல், கடுக்காய்-நெல்லி-தான்றிப் பொடிகலந்த முப்பலாத் தூளைச்சிறுகரண்டியளவு வாயிலிட்டுக் குளிர்ந்த நீரைப் பருகினேன். பலவகையிலும் உடல் நலந் தரும் அரு மருந்திதுவாம்! வாயிற் கதவைத் திறந்து ஆங்குக் கிடந்த நாளிதழை எடுத்துச் சாய்விருக்கையில் அமர்ந்து செய்திகளில் மூழ்கினேன்!

குண்டு வெடிப்பு, வன் புணர்வு, கொலை, கொள்ளை, தன் மனைவியின் கடவுச் சீட்டில் வேற்றவளைக் கடத்தும் நாடாளுமன்றின் உறுப்பினர், தமிழர்நாட்டு மீனவத் தமிழர்களைச் சிங்களன் துமுக்கியால் சுட்டுக் கொலை, பேருந்து மோதல் பலர் சாவு... உள்ளம் வலித்தது! என்ன நாடு...? என்ன உலகு...? மனம் கொதித்தது.

அழைப்பு மணி ஒலிக்க, வெளி வாயிலை நோக்கினேன். என் மகள்! எழுந்து சென்று வெளிக்கதவின் பூட்டைத் திறந்தேன்.

"வாம்மா... என்ன காலையிலேயே...?"

"காலையா...! மணி எட்டரை ஆச்சுப்பா... பிள்ளைகள் பள்ளி சென்று விட்டனர்... அவரும் கல்லூரிக்குச் சென்றுவிட்டார்... சாப்பிட்டீங்களாப்பா?"

"இல்லைம்மா... இனிமேல்தான்..."

"என்ன உணவுப்பா...?"

"பழைய சோறும் வெங்காயமும்...! இந்தக் கோடைக்கு மிக நல்லதும்மா"

"நீங்க தான் என் வீட்டுக்கு வர மறுக்கிறீங்க... கொண்டுவரவும் கூடா தென்றீங்க..."

"எவருக்கும் என்னால் தொல்லை வேண்டாம்மா..."

"அப்பா... அம்மா போயி மூன்றுமாதமாச்சு... நீங்க தனியாளா இங்கேயே இருக்கிறீங்க... என் வீட்டு மாடி அறையிலே தங்கிக் கொள்ளலாமே இந்த வீட்டை வாடகைக்கு விட்டா மாதம் மூவாயிரம் வருமே..."

"அதெல்லாம் வேண்டாம்மா... என் ஓய்வூதியமே எனக்குப் போதும். அம்மாவும் நானும் கடைசியாக வாழ்ந்த வீடும்மா இது. அம்மா நினைவோடேயே இóங்கேயே இருப்பதுதான் என் மனத்திற்கு நிறைவா இருக்கு"

"இல்லைப்பா... வந்து... அம்மா வீடும், அம்மா நகைகளும் மகளுக்குத்தான் சொந்தமாம்... அதனால இந்த வீட்டை எனக்குக் கொடுத்துட்டு என்வீட்டிலே தங்கிக் கொள்ளுங்க... நானும் உங்களைப் பார்த்துக் கொள்வேன்... எங்களுக்கும் உங்களால் உதவியாய் இருக்கும்... உங்கள் பேர்த்தி அடுத்தாண்டு கல்லூரிக்குப் போகப் போறா... அவள் கல்லூரிச் செலவுக்கு இந்த வீட்டு வாடகை தேவைப் படுதுப்பா... எங்களோட ஒத்துப் போங்கப்பா..அதுதான் நல்லது"

"ஓ... அப்படி வாறீயா...! என் நிலாவுக்காக நான் கட்டிய இந்த வீடும், நான் வாங்கிய நகைகளும் உனக்குத்தான் சொந்தம்! இவ்வீட்டை வாடகைக்கு விடுவீர்கள், பின் விற்றும் விடுவீர்கள்! உங்கள் காவலுக்கும், எடுபிடி வேலைக்கும் நான் தேவை. சோறு போடுவீர்கள்... என் ஊதியத்தையும் கேட்பீர்கள்... அப்படித்தானே...? ஆற்றாமையால் நெஞ்சம் துடித்தது"

"இப்படிச்சொன்னா எப்படிப்பா...? மகள் வீட்டில் எவரும் பெற்றோரை வைத்துக்கொள்ள மாட்டார்கள்.. அப்படியிருந்தும் நாங்கள் வரச்சொல்கிறோம்".

"உன் அண்ணன், தம்பியிடம் கலந்து பேசிச் சொல்கிறேன்"

"அவங்ககிட்ட எதுக்குப்பா கேட்கனும்...? அவங்களுக்கும் தனித்தனியா வீட்டைக் கட்டிக் கொடுத்திருக்கிறீங்க. அதை ஒத்திக்கு விட்டுவிட்டு அமெரிக்கா விலேயே குடும்பத்தோடு இருக்காங்க... இலக்கம் இலக்கமாச் சம்பாதிக் கிறானுங்க. உங்களுக்கு அவர்களால் எந்த உதவியும் இல்லை. இது அம்மா வீடு, நகைகளும் அம்மாவுடையவை. அம்மாவுக்குப்பிறகு எனக்குத்தானே சொந்தம்..."

"உனக்கும் தானே வீட்டைக் கட்டிக் கொடுத்திருக்கேன். நகை நட்டு, சீர்வரிசை எல்லாம் சிறப்பாகவே செய்துள்ளேன். உன் துணைவருக்கும் கல்லூரிர் பேராசிரியர் பணியைப் பெற்றுத்தந்தேன். நீங்களும் நல்ல ஏந்தாகத்தானே இருக்கிறீங்க...! அதனால, எவருக்கும் இந்த வீட்டைத் தரும் எண்ணமே இல்லை. வேறு பேச்சுப் பேசும்மா."

"பேச வேறொன்றும் இல்லை.. தன்னந்தனியா இருக்கிறீங்களே... திடீர்னு ஏதாச்சும் ஆயிட்டா என்னாகும்...? ஆர அமரச் சிந்திச்சுப்பாருங்க..." என்றவள் படக்கென எழுந்து சென்றாள். நானும் அவளோடேயே சென்று, வெளிக் கதவைப் பூட்டிவிட்டுத் திரும்பினேன், படிக்கட்டில் ஒரு புழு வெயிலின் சூட்டைத் தாங்காமல் துடித்துக்கொண்டிருந்தது-என் மனத்தைப் போலவே! செம்பருத்தி இலையொன்றைக் கிள்ளி எடுத்துப் புழுவை அவ்விலையில் ஏந்தி நிழலில் வைத்தேன்.

என்பு இலதனை வெயில் போலக் காயுமே
அன்பு இலதனை அறம்
(77)

என்ற திருக்குறளை நினைத்தேன். மனமெங்கும் வலித்தது... பழைய சோற்றை நாய்ச்சட்டியில் கொட்டிவிட்டுக் குளிக்கச் சென்றேன். குளிர்ந்த நீரில் உடல் நனைந்திட, உள்ளத்தில் மலர்ந்தன நினைவுப் பூக்கள்! அன்று மாலை வேளை... நானும் நிலாவும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தோம். பரபரப்போடு வீட்டுக்குள் வந்த இளைய மகன் "அம்மா, அண்ணன் வேலை செய்யும் இடத்திலேயே எனக்கும் வேலை கிடைத்து விட்டது, இன்னும் மூன்றே மாதங்களில் குடும்பத்தோடு அமெரிக்காவுக்குச் சென்றுவிடுவேன்" என்றான் பூரிப்போடு!

"அப்படியா... நல்லாஇருப்பா... ஆனா நாங்கதான் தனியா இருக்கணும். அதுவும் அப்பா அலுவலகம் போயிட்டா பகல் முழுவதும் எனக்குத் தனிமைதான்..." என்றாள் நிலா! நான் சிரித்து வாழ்த்தினேன்.

(தொடரும் )