![]() |
அறிவியற் சொல் ஒலி வடிவங்கள்
இரா. செம்பியன் (பிறமொழி எழுத்துகளைப் பயன்படுத்தாமல் தமிழ் எழுத்துகளைக் கொண்டே அறிவியற் சொற்களை உரிய ஒலியுடன் ஒலிக்க உதவும் வகையில் வேண்டிய குறியீடுகளைப் படைத்திருக்கிறார் பாவலர் இரா. செம்பியன் அவர்கள். அது பற்றி அவர் எழுதும் கட்டுரை இது. இது குறித்த அறிஞர் கருத்துகளை வர வேற்கிறோம்.) தமிழா, தமிழைத் தமிழாய் எழுது! தமிழில் பிறமொழி கலப்பது பழுது! உரைவள மிகுந்த இலக்கியப் பெருநோக்குள்ள நமது தமிழ் மொழியில் மரபு சொற்களுக்குக் குறைவே இல்லை. இதை மாற்றாரும் ஒப்புக்கொள்வர் இது ஒரு புறமிருக்க... அண்மைக் காலங்களில் வியத்தகு வளர்ச்சியடைந்து வரும் அறிவியல் துறைகளில் எந்தவொரு மொழியாலும் ஈடு கொடுக்க முடியாத அளவிற்கு ஏராளமான அறிவியல் சொற்கள் ஆங்கிலத்தில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன. இந்நிலையில் அனைத்துத் துறைக்கல்விகளையும் தமிழிலேயே கற்பிக்கப்பட வேண்டுமென்ற தமிழ்மக்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு நாளுக்குநாள் வலுவடைந்துகொண்டே வருகின்றது. இது தாய் மொழிப்பற்றிய விழிப்புணர்வு தமிழ்மக்களுக்கு ஏற்பட்டு வருவதையே காட்டுகின்றது. மேலும் தாய்மொழிக் கல்வியே அறிவியல் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிய வல்லது என்ற அறிஞர்களின் கருத்தும் இங்கு நோக்கத் தக்கது. எனவே பிற மொழிகளிலுள்ள அறிவியல் சொற்களைத் தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டுவர வேண்டியது உடனடித் தேவையாகும். என்றாலும், அது எளிதான செயலன்று என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். இதுநாள்வரை நாம் எந்தெந்தத் துறைகளிலிருந்து எத்தனை எத்தனை விழுக்காடுகள் பிற மொழிகளிலிருந்து அறிவியல் சொற்களைத் தமிழுக்கு மொழிபெயர்த்துக்கொண்டு வந்திருப்போமென்றெண்ணிப் பார்த்தால், அது மிகச்சொற்ப விழுக்காடாகத்தான் இருக்க முடியும். மிகு மக்கள் பயன்பாட்டிற்கு வந்ததாகத் தெரியவில்லை. அதுபோல் ஏட்டில் பதுங்கி இருட்டில் முடங்கிக் கிடக்கும் புதிய சொல்லாக்கத்தால் விளைந்த பயனென்ன? எதுவுமில்லை. பன்னெடுங் காலமாக முயன்றோம். பல்லாயிரம் சொற்களை உருவாக்கினோம் என்று நாமிங்கே பேசிக்கொண்டிருப்பதால் அறிவியலைத் தமிழில் உடனடியாக மொழி பெயர்த்துக் கொண்டு வருவதிலுள்ள சிக்கல் தீரப்போவதில்லை. எனவே இந்நாள்வரை முயன்றும் இந்நிலை, இனிமாத்திரம் என்ன செய்துவிடப் போகின்றோம் என்ற மலைப்பே மேலோங்குகிறது. மேலும், மொழிபெயர்ப்பதிலுள்ள இடர்ப்பாடுகள் குறித்தும் சற்றுச் சிந்திப்போம். மொழி ஆக்கம் செய்வோர் ஒரே பெயரை வெவ்வேறு பொருள்களுக்கு வைக்கும் முரண்பாடு ஏற்பட்டு விடுகின்றது. அதோடு நில்லாது அவரவர் ஆக்கிய சொற்களும் சரியே என்று வலியுறுத்தும் நிலையைத்தவிர்க்க இயலாதபோது தமிழார்வலர்களுக்கு இடையே எந்தச் சொல் சரி என்ற குழப்பத்தை விளைவிப்பது இயல்பேயாகும். இந்தச்சிக்கலை முதலில் தீர்த்தாக வேண்டும். இவையெல்லாம் மொழி பெயர்ப்பதிலுள்ள இடர்ப்பாடுகள், மொழியறிஞர்களுக்குள் ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கு அவர்களின் தன்முனைப்பு இடம் தருவதில்லை. இதுவே மொழி வளர்ச்சிக்குப் பெருந் தடையாகி விடுகின்றது என்றகருத்து சான்றோரிடையே நிலவுகின்றது. மேலும், எந்தவொரு மொழிபெயர்ப்பாளராக இருந்தாலும் சரி தம்மால் பெயர்க்கப்பட்ட சொற்களனைத்தும் முன்னுக்குப்பின் முரண்பட்டுப் பொருள்திரிபை ஏற்படுத்தாதிருக்குமா? என்ற ஐயப்பாடு அவர்களை நிழல்போல் விடாமல் தொடர்ந்தே வரும். ஒரு துறையில் ஒரு பொருளைக் குறிக்க எழுந்த சொல்லானது அதே துறையில் இன்னொரு பொருளையும் சுட்டுவதாக அமைதல் கூடாதல்லாவா? இக்கருத்திற்குப் பொருத்தமான குறட்பா ஒன்றைக் கீழே காணுங்கள் சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை என்று ஒன்றுக்கொன்று முரண்படாமல் சொற்களைப் பயன்படுத்துமாறு அறியுறுத்துவதாகவே இக்குறட்பாவைமொழிபெயர்ப்பு இலக்கணத்திற்கு இலக்கியமாகச் சுட்டுவது பொருத்தமாக இருக்கும். இது ஒருபுறமிருக்க, மொழிபெயர்க்கின்றோம் என்று சில அயல் மொழிச்சார்பாளர் அவர்தம் சொற்களைப் புகுத்துவதற்கு அறிவியல் துறைகளை நுழைவாயில்களாகவே பயன்படுத்திக் கொள்வர். இதற்கு அவர்கள் கூறும் காரணம், சில அறிவியல் சொற்களின் ஒலி வடிவங்கள் தமிழில் இல்லை என்பதேயாகும். இன்றுள்ள மொழிநிலையில் அதை நாம் மறுப்பதற்கில்லை என்றாலும் அதை வரவேற்கவும் இயலவில்லை. அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டு விட்டாலும் தமிழின் வரிவடிவம் அருவருப்பாக மாறி விடும் என்பது இன்றைக்கு வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழறிஞர்களின் நெஞ்சங்களில் வளர்ந்து கொண்டிருக்கும் கவலைகளாகும். இந்நிலையை. 'ஏராளமான வடமொழிச் சொற்களென்ற வடுக்களைத் தாங்கியுள்ளதால் தமிழன்னையின் முகம் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டது' என்று இலக்கணச்சுடர் முனைவர் இரா. திருமுருகன் அவர்கள் சுட்டிக்காட்டுவர். இன் னோரன்ன தமிழறிஞர்கள் இப்படிக் கவலைப்படுமளவிற்கு தமிழ்ச்சொல் ஒலி களோடு ஏராளமான வேற்றுமொழிச் சொல்லிக் குப்பைகள் சேர்ந்து விட்டன. இவற்றை எல்லாம் வரிவடிவத்தில் இருந்தாவது நீக்கினாலன்றி நமது வரலாற்று வரிகள் வடுக்கள் நிறைந்ததாகவே காணப்படும். அத்துடன், தமிழிலே தமிழில்லை, தமிழரிடம் தமிழில்லை, தமிழகத்தில் தமிழில்லை, இனம் மொழி நாடே இல்லை என்றிப்படிப் படிநிலை வீழ்ச்சியை நோக்கி நமது பைந்தமிழர் வரலாறு விரைந்து செல்வதைத் தடுக்க இயலாது, போய்விடும். சங்க இலக்கிய நூல்களில் கூடப் பிறமொழிச் சொல்லாட்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக விரவிக் காணப்படுகின்றனவேயொழிய பிறமொழி எழுத்துக்கள் அவற்றின் வரிவடிவங்களில் அறவே காணப்பட மாட்டா. ஆனால் இடைக் காலத்தில் தோன்றிய மொழி அழிஞர்களின் திட்டமிட்ட சதியால்தான் இப்படியொரு வடமொழி தென்மொழிக் கலவையான மணிப்பிரவாளம் என்ற மொழி நடை தோன்றி தமிழின் வரிவடிவத்திலும் நுழையத் தொடங்கிவிட்டது. ஏற்கெனவே நம்மிடம் கடன் வாங்கிப் பிழைக்கும் மொழிகளின் இந்த இழிநடை குறித்து பரிதிமாற்கலைஞர் அவர்கள் தமிழ் மொழியின் வரலாறு என்ற தமது நூலில் பின் வருமாறு கூறுவாராயினர். 'மணிப்பிரவாளம் என்றதோர் புதிய பாடை வகுத்துவிட்டனர். அஃதாவது தென்மொழியும் வடமொழியும் சரிக்குச்சரி கலந்த பாடையாம் மணியும் பவளமும் கலந்து கோத்ததோர் மாலை காட்சிக்கின்பம் பயத்தல்போலத் தமிழும் சமற்கிருதமும் கலந்த பாடை கேள்விக்கின்பம் பயக்குமென்ற போலி எண்ணமே இத்தகைய ஆபாச பாடையொன்று வகுக்குமாறு தூண்டிற்று' (தமிழ்மொழியின் வரலாறு பக்கம் 10 ) (தொடரும்) |