உன்னைத் திருத்திக்கொண்டு உலகைத்திருத்து
இரா. செம்பியன்

தம்பி தண்ணி இனிப் போடாதே - போட்டுத்
தன்னை மறந்து நீ ஆடாதே - உன்னை
நம்பி இருக்கின்ற மனைவி மக்களை
நடுத்தெருவில் விட்டு ஓடாதே!

தம்பி...

தெம்பை இழந்துநீ ஏங்காதே - ஊர்
வம்பை விலைகொடுத்து வாங்காதே - உயர்
பண்பை அழிக்கின்ற பாழுங் கள்ளை நீ
பருகிப் பருகியே கருகிப் போகாதே

தம்பி...

அம்மி மிதிச்சவ அழுது புலம்பிடக்
கம்மல் மூக்குத்தியைக் கழற்றித் கேட்பதா?
அன்பின் ஆழத்தை அளந்து பார்க்கவோ
அடித்துத் துவைத்தவளை வெளுத்துப் போடுவது?

தம்பி...

திருத்தும் மனைவியை முறைத்துப் பார்க்காதே
திட்டித் தீர்த்தவளை எட்டி உதைக்காதே
வருத்தும் குடியைநீ நிறுத்து இன்றோடு
கழுத்தை நீட்டியவள் கவலை பறந்தோடும்

தம்பி...

காசு கையிலே இருக்கும் போதிலே
கட்டுப் பாட்டினை இழந்து போகாமல்
ஏசு புத்தரைக் காந்தி யண்ணலை
எண்ணிப்பாரு நீ தண்ணி போடுமுன்

தம்பி...

மாசு மறுவற்ற மனித தெய்வங்கள்
வாழ்ந்து காட்டிய வழியில் செல்லுவாய்
காச நோயினா லின்னல் பட்டு நீ
கண்ணை மூடுமுன் உன்னைத் தேற்றிக்கொள்

தம்பி...

இருக்கும் பொருட்களைக் குடித்து அழிக்காதே
இன்ப வாழ்க்கையை இழந்து தவிக்காதே
என்றோ வரும்சாவை இன்றே அழைக்காதே
எமனைப் பார்த்து நீ தவணை கேட்காதே

தம்பி...

குடியைக் கெடுக்கின்ற குடியைக் குடிக்காதே
குட்டிச் சுவராகிக் கெட்டுத் தொலைக்காதே
அடிமையாகி மது வரக்கன் கைகளால்
மடிந்து போகும்முன் மனத்தை மாற்றிக்கோ

தம்பி...

இறுதியாக நீ உறுதி கொள்ளுவாய்
மறந்து மினிமேல்நீ மதுவைத் தீண்டாமல்
திருத்திக் கொண்டுனைத் திருத்து உலகினை
தெய்வத் தன்மையை எய்த லாகும் நீ

தம்பி...