குரங்கின் கைம்மாலை

ஒன்பதுபத் தாயிரமாண் டகவை மூத்த
ஒண்டமிழே செம்மொழியி னுயர்ந்த தென்று
கண்டறிந்து மொழியறிஞர் வியக்கின் றார்கள்
காலத்தால் மூத்ததுநம் தமிழ்தா னென்று
பண்டிருந்த மொழியழகை ஒதுக்கித் தள்ளும்
படைப்பாள ரென்கின்ற பழுதைக் கூட்டம்
கொன்றழித்து வருகிறது தமிழை இன்றக்
குழுவினரின் கைகளில்செம் மொழியின் மையம்!

தமக்கிசைவாய் இருப்பவர்க்கே வாய்ப்ப ளிக்கும்
தலைமையின்கீ ழெங்கிருந்து தமிழ்செ ழிக்கும்?
சமத்துவத்தின் மகத்துவத்தை யுலகிற் கெல்லாம்
சாற்றுகின்றா ரிதன்வழியே புரிந்து கொள்வீர்
அமைந்தாங்கே ஒழுகாதா னரச வைக்கே
அலகைகளே அறங்கூறு மவய மாகும்
இமையத்தில் தமிழ்மொழியை எழுதி வைத்த
இனமேநீ இதையயல்லாம் ஏற்கின் றாயா?

மரபழித்து வருபவர்க்கே விருத ளித்து
வளர்க்கின்றேன் தமிழைஎனின் சிரிப்பாய் இல்லை?
அரிதான மணம்பரப்பும் தமிழ்ப்பூங் காவில்
அமர்ந்துசிலர் மலம்கழிக்கும் அருவ ருப்பை
அரங்கேற்றி வருகின்றார் துறைகள் தோறும்
அதிலொன்றே ஐம்பெருங்கு ழெண்பே ராயம்
குரங்கின்கைம் மாலைஎனத் தமிழின் கோலம்
குலைந்தழகை இழக்காமல் வளர்வ தெங்கே?

சுமைதாங்கிக் கல்லொத்த நம்ம வர்க்குச்
சொரணைவந்து விடக்கூடா தென்ப தற்குத்
தமிழினத்தைத் திராவிடராய் மாற்று தற்குத்
தருகின்றார் இலவயங்கள் தடையி லாமல்
உமிதரினும் ஊதியமாய்ப் பெற்றுக் கொண்டே
உழைப்பவர்கள் யாரிங்கே நம்மைப் போலே
நமதினத்தைக் கையேந்த வைக்கு மிந்த
நரியினத்தை நாடறிந்து கொள்வ தென்றோ?

-இரா. செம்பியன்

தமிழ் விழிப்புணர்வுப் பாடல் வெளியீட்டுக் குழுமம்
மேட்டுப்பாளையம் சாலை, கொங்கம்பட்டு,
விழுப்புரம் மாவட்டம்-605105. பேசி 2699485