வினாதலும் விடுத்தலும்

1. அ) இனிய தமிழைப் பிழையின்றி எழுத எளிய வழிகள் என்னும் நூலில் (பக்கம்-13) மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள் 12 உயிர், க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ ஆகிய 9 உயிர்மெய்கள் எனக் கூறியுள்ளீர்கள். நன்னூலில் ங வையும் சேர்த்து 10 உயிர்மெய் எனக் கூறப்பட்டுள்ளது. ங விற்கு அங்ஙனம் காட்டாகக் கூறப்பட்டுள்ளது. ஙப்போல் வளை என்பதில் ங மொழிக்கு முதலில் வருகிறது. இந்த எடுத்துக்காட்டைக் கூறாமல் அங்ஙனம் என்ற எடுத்துக்காட்டை நன்னூல் உரையில் ஆறுமுகநாவலர் கூறக் காரணம் என்ன? நீங்கள் மொழிக்கு முதலில் வரும் எடுத்துக்காட்டுடன் ங வை நீக்கியது ஏன்?
ஆ) ஆவி ஞணநமன யரலவ ழளமெய் சாயு முகர நாலாறு மீறே (நன் 107) என்ற நூற்பாவில் வரும் ஆவி என்பதற்குத் தனித்தும் மெய்யோடு கூடியும் வரும் பன்னிரண்டு உயிர்களும் என உரையாசிரியர் குறிப்பிடுகின்றபடி 12 உயிர்களும் தனித்து எவ்வாறு இறுதி எழுத்துகளாக வரும்?
-செந்தாமரை, நிரவி.

அ) ங என்ற மெய் தவிர அதனோடு உயிர் கூடிய ங, ஙா, ஙி... முதலிய எந்த உயிர் மெய்யும் பயன்படுவதில்லை. ஙப்போல் வளை என்பதில் ஒளவையார் கூறுவது, ங் என்ற ஒரு மெய் மட்டும் பயன்படுவதால். பயனற்ற அதன் வருக்க உயிர்மெய்களும் நெடுங்கணக்கில் (ஒரு சீர்மை கருதி) இடந்தரப் பெற்றுள்ளன. அதுபோல் உறவினர்கள் பயன்படாதவர்களாயினும், உனக்காக அவர்களுக்கும் உயர் மதிப்புக் கிடைக்கும்படி நீ குமுகாயத்துக்குப் பயன்படுமாறு வாழ்க என்பதே, ஙப்போல் என்பதில் ங என்ற உயிர்மெய்தானே முதலில் வருகிறது? என்றால், இல்லை ங என்பதில் உள்ள (ங்+அ) அகரம் சாரியை. எனவே இங்கே வந்தது ங என்ற மெய்யே. மெய்கள் அகரச்சாரியை பெற்றே வழங்கும். ங் போல் என்று சொல்ல முடியாது ஆகையால் ஙப்போல் என்றார். தொல்காப்பியரும்,

ஙஞண நமன எனும்புள்ளி முன்னர் (தொல். எழுத்து. 25)

என்றுதான் கூறுகிறார். அத்தன்மை, அவ்வாறு என்று பொருள்படும் ஆங்கனம் என்ற சொல் முதல் குறுகி மூக்கொலி சிறந்து (ஆங்கனம்-அங்கனம்) அங்ஙனம் என்றானது. இதைப் பவணந்தியார் அ+ஙனம் எனப் பிரித்தார். நிலைமொழி அகரச் சுட்டாதலின் வருமொழி ஙனம் என்று கொண்டு ங மொழி முதலாகும் என்றார் எனினும் ங எங்கும் தனியே வாராமல் அ இ எ யா என்னும் சுட்டு வினாக்களை அடுத்தே வருதலின் முடவன் கோல் ஊன்றி வரும்போது. கோல் முதலில் வருவதுபோல் தோன்றினாலும் முடவன் வந்தான் என்றுதானே சொல்வார்கள்.?அதுபோல் ஒருவாறாக ங மொழிமுதலில் வந்தது என்று உரையாசிரியர்கள் விளக்குகிறார்கள் (நன். 106) தொல்காப்பியர், வீரசோழிய நூலார், நேமிநாத நூலார் ஆகிய, பவணந்தியாருக்கு முந்திய ஆசிரியர்கள் யாரும் ஙகரம் மொழிமுதலாகும் என்று கூறவில்லை. எனக்கும் அ+ஙனம் என்று பிரிப்பதில் உடன்பாடில்லை. அங்ஙனம். இங்ஙனம் முதலியன ஆங்கனம். ஈங்கனம் முதலியவற்றின் மருவிய வடிவங்கள். அவற்றைப் பிரிக்கக்கூடாது என்பதே என் கருத்து. எனவேதான் இனிய தமிழை என்ற நூலில் அவ்வாறு கூறினேன்.

ஆ) அ-சுட்டெழுத்து என்ற வகையில் தனித்துத் தனக்கே ஈறாய்வந்தது, பல என்ற சொல்லில் அ-மெய்யோடு கூடி ஈறாய்வந்தது. இப்படி எல்லா உயிர்களும் தனித்தும் மெய்யொடு கூடியும் ஈறாய் வரும். நன். 107,108,109 ஆம் நூற்பாக்களின் உரையில் இவற்றைக் காட்டுடன் காணலாம்.

2. அ) செல்+உழி என்னும் சொற்கள் செல்வுழி என்றுதான் புணருமெனின், நெல்+உறை, கல்+உளி, சொல்+உரை ஆகிய சொற்களும் முறையே நெல்வுறை, கல்வுளி, சொல்வுரை என்று புணராவோ?

ஆ) தமிழ்மொழியும், மலையாளமொழியும் வழங்கும் நோட்டம் என்னும் சொல்லைக் கன்னடமொழியில் நோட்ட என்று ஒரே பொருளில் வழங்கு கிறார்கள். நோட்ட என்னும் கன்னட மொழிச் சொல்லுக்கு நோடு என்பது பகுதியாம். நோடு என்றால் காண், பார் என்று பொருள். நோட்டம் என்னும் சொல்லின் பகுதி யாது?

இ) சிற்றாடை, சிட்டாடை இவ்விரண்டில் சரியானது எது? இரண்டுமே சரியானவையா?
- புலவர் வீ. வில்வநாதன், வெங்காலூர்

அ) செல்+உழி=செல்வுழி என்றும் சார்+உழி=சார்வுழி என்றும் விண்+அத்து=விண்வத்து என்றும் வருவன முன்னோர் இலக்கியங்களில் வருபவை. மெய்ம்முன் உயிர் வரும் இங்கே உடன்படுமெய் போன்ற வகரம் (நன்னூல் 163 ஆறுமுகநாவலர் உரை) வருவது மிகச் சிறுபான்மை, பெரும்பாலும் கல்+உளி=கல்லுளி, சீர்+உடை=சீருடை. கண்+அழகு= கண்ணழகு என்றே புணரும். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்றாலும், பெரும்பாலும் இலக்கியத்தில் கண்டதற்குத்தான் இலக்கணம் கூறப்படும்.

ஆ) தமிழில் நாட்டம். நேட்டம் என்னும் தொழிற்பெயர்களுக்கு வினைமுதல்கள் நாடு நேடு என்பன. இவற்றிலிருந்து நாடினான், நேடினார் என்னும் வினைவடிவங்கள் உண்டாகின்றன. இதுபோல் நோட்டம் என்று வழங்கும் தொழிற்பெயர்க்கு வினைமுதலாகிய நோடு என்பது தமிழில் வழக்கில் இல்லை. இதிலிருந்து நோடினான் முதலிய வினைவடிவங்கள் பிறப்பதும் இல்லை. கன்னடத்தில் நோடு வழக்கில் உள்ளது. இவை யாவும் ஆராய்தல் என்னும் பொருளனவே. சண்டை, கூத்து என்னும் தொழிற் பெயர்களைப் பகுதி விகுதியாகப் பிரிப்பதில்லை. அதுபோல் நோட்டம் என்ற தொழிற்பெயர்க்குப் பகுதி கூறுதல் இல்லை.

இ) சிறு+ஆடை=சிற்றாடை என்றுதான் ஆகும். பேச்சு வழக்கில்கூட அது சித்தாடை என்று ஆகிறதே தவிரச் சிட்டாடை ஆவதில்லை. சிட்டாடையைச் சிட்டு+ஆடை என்றுதான் பிரிக்கமுடியும். ஒளவையாரும் 'நீலச்சிற்றா டைக்கு நேர்' என்பது காண்க. எனவே சிற்றாடை என்பதே சரி.

3. தலித் என்பது எம்மொழிச்சொல்? அம்மொழியில் எப்பொருளில் வழங்குகிறது?

தலித் என்பது மராட்டியச்சொல். இதன் பொருள்-ஒடுக்கப்பட்டோர். முன்னர் வழங்கிய 'பழந்தமிழர்'. 'தாழ்த்தப்பட்டோர்' என்ற தமிழ்ச்சொற்களில் நிறைவு இல்லை யென்றால், ஒடுக்கப்பட்டோர் என்று கூறலாம். ஆனால், அயல்மொழிச் சொல்லில் கூறினால்தானே நம்மண்ணின் மைந்தர்களுக்கு மதிப்பாயிருக்கிறது! அதையும் தலித்து என்று எழுதினால் தமிழ் மொழிமரபுக்கு ஒத்ததாக வாவது இருக்கும்.

4.அ) தாய்தந்தைக்கு என்பதை அம்மா அப்பாவுக்கு என்று எழுதலாமா?

ஆ) சென்ற இதழில் கோபாலையர் 'கூற்றுக்கள்' என்று எழுதியது கண்டேன். சிலர் 'வாழ்த்துக்கள்' 'ஒற்றுக்கள்' என்று எழுதுகிறார்கள். நான் 'வாழ்த்துகள்' 'ஒற்றுகள்' என்று எழுதிவருகிறேன். எது சரி?

அ) அம்மா, அப்பா என்பன விளி வடிவம். எனவே, 'தாய்தந்தையர்க்கு' என்று எழுதுவதே சரி.

அ) இரண்டிலுமே பிழையில்லை. வன்றொடர்க் குற்றியலுகரச்சொற்களில் கள் ஈறு புணரும்போது ஒற்று மிகுதலும் உண்டு. மிகாமையும் உண்டு. கள் என்னும் இடைச்சொற் புணர்ச்சிக்குத் தனி விதி இல்லை. உ. வே. சா. அவர்களே பாட்டுகள், பாட்டுக்கள் என்று இருவகையாக எழுதுகின்றார்கள். இலக்கணப்புலவர் மே. வீ. வேணுகோபாலர் இயல்பாக எழுதலாம் என்கிறார். மிகுந்தும் மிகாமலும் வரும் புணர்ச்சியை உறழ்ச்சி என்பார்கள். அதுபோல் இதைக் கொள்ளலாம்.