வரலாற்றில் ஆதாரம் எதுவும் இல்லை
வந்துபோனான் இராமனிங்கே என்றுசொல்லப்
புரட்டரது புனைகதையே இராமர் பாலம்
புதைந்துளது கடலடியில் என்ப தெல்லாம்
குருட்டினமாய்த் தமிழினத்தை மாற்றி மூடக்
கொள்கையினைத் திணிக்கின்ற கொடுமை காணீர்
பெருவாழ்வு வாழ்ந்திருந்த தமிழி னத்தின்
பேதைமையைப் பயன்படுத்தி வீழ்த்து கின்றார்
மதவெறியர் கைகளிலே நாடு சென்றால்
மக்களெல்லாம் கற்காலம் நோக்கிச் செல்வர்
கதைபுனைந்தே அதன்வழியே மதவா தத்தைக்
கட்டவிழ்த்து விடுவதுதான் கடவுள் தொண்டா?
இதைவிளக்கி எழுதுவதே தமிழ்ச்சான் றோரின்
இன்றியமை யாக்கடனில் முதன்மை யாகும்
இதன்வழியே மக்களுக்கு விழிப்பு ணர்ச்சி
ஏற்படுத்தி இழிநிலையை நீக்க வேண்டும்
என்னேயிஃ? தேனென்று வினவு கின்ற
இயல்பினையே நீக்கிவிட்டார் தமிழர் பண்பில்
சொன்னதெலாம் செய்கின்ற அடிமை கள்போல்
தொண்டியற்றச் செய்துவிட்டார் வடவ ருக்கே
பின்னின்றே இயக்குகின்ற மதவா தத்தைப்
பிடர்பிடித்துத் தள்ளிவெளி யேற்ற வேண்டும்
வன்நெஞ்ச ராளுகின்ற வரையில் நல்ல
வளம்பெருகத் தமிழகத்தில் வாய்ப்பே இல்லை
அறிவார்ந்த இனமென்றால் தமிழ ரென்ற
அனைத்துலக மதிப்பீட்டைக் கெடுப்ப தற்கே
அறிவழிக்கும் திருப்பணியை ஆரி யர்கள்
அன்றிருந்தே இன்றுவரை யாற்று கின்றார்
அறவழியில் மறம்பயிலும் தமிழ ரின்றோ
அச்சுறுத்தப் படுகின்றார் மதத்தின் பேரால்
அறியாமை இருள்பரப்பும் மதவா தத்தை
அரியணையி லேற்றுவதா லழியும் நாடே!
-இரா. செம்பியன்