தெரியா தாமே!

கல்வியினைத் தாய்த்தமிழில் தருக என்றால்
கற்றுக்கொள் ஆங்கிலத்தை என்கின் றீர்கள்
சொல்லுங்கள் எங்கேனும் இதுபோல் உண்டா?
சொதப்புவதேன் கொள்கையிலோர் தெளிவே இன்றி?
வல்லாண்மைச் செலுத்திவரும் அயல வர்க்கே
வளைகின்றீர் முதுகெலும்பே இல்லார் போலக்
கொல்லாதீர் ஆங்கிலநாய் குதறிப் போட்டே
குற்றுயிராய்க் கிடக்கின்ற தமிழை மேலும்

புதுச்சேரி என்றிருக்கும் பெயரை மாற்றும்
பொறுப்பற்ற செயலதனைக் கண்டிக் கின்றோம்
இதுதமிழர் அனைவரையும் புண்ப டுத்தும்
இழிசெயலே ஆகையினால் கைவி டுங்கள்
இதன்வலியை வரவிருக்கும் தேர்த லில்நீர்
எடுத்தெறியப் படும்போது புரிந்து கொள்வீர்
இதுசரியா? தவறாஎன் றாய்வ தற்கோர்
ஏழறிவு தேவையில்லை? ஆறே போதும்!

நாளையல்ல நகர்த்துவதா வரலா றென்ற
நாட்குறிப்பை எழுதுகின்றீர் கவனம் தேவை
காலாழும் களர்வழியில் நடந்து செல்லும்
களிறதனின் நிலையதனைக் கருத்திற் கொண்டு
தாளாண்மை குன்றாது கோலோச் சுங்கள்
தமிழாளச் செய்துபெரும் புகழ்தே டுங்கள்
கேளாத செவியினராய் அரசி யற்றிக்
கெட்டாரின் பட்டியலில் இடம்பெ றாதீர்!

அயலினத்தார் உங்களுக்கே அமைச்ச ரென்ற
அதிகாரம் தந்துள்ளார் இரவ லாகப்
பெயரளவில் தான்நீங்கள் அமைச்ச ரென்று
பேசுகின்றார் மக்களெல்லாம் பரவ லாக
செயலாண்மை குன்றிவிட்ட நீங்க ளெல்லாம்
முயலாமை யானதுபோல் காணு கின்றீர்
வியப்பான செய்தியிதில் மேலே சொன்ன
விவரமெது முங்களுக்குத் தெரியா தாமே?

-இரா. செம்பியன்

தமிழ் விழிப்புணர்வுப் பாடல் வெளியீட்டுக் குழுமம்
மேட்டுப்பாளையம் சாலை, கொங்கம்பட்டு,
விழுப்புரம் மாவட்டம்-605105. பேசி 2699485