பாவலர் பரிசுதிட்டம்

பாவலர் பரிசுதிட்டம்-33இல் பரிசு பெற்றவர்

பெயர் :மு.வே.கங்காதரன்

பிறப்பு: 04-01-1940

பிறந்த ஊர்: மொறப்பாக்கம்

தாய்: நவநீதம்

வாழ்விணை: ந. உலோ. சுமித்திரா

மக்கள்: மு. க. திருவள்ளுவன்,
மு. க. தமிழ்வளவன்

கல்வி: க.மு., கல்.மு.

யாப்பியற் பட்டயம்:பைந்தமிழ்ப்பாவலர் (புதுவைத் தமிழன்பர்கள் தமிழ்ப் பணி அறக் கட்டளையினரால் வழங்கப்பெற்றது)

யாப்பாசிரியர்: முனைவர் இரா. திருமுருகனார்

விழைவு: தமிழ், தமிழர் நல்வாழ்வு

கொள்கை: பகுத்தறிவு, இறைமறுப்பு

யாப்பில் முழுமைபெறத் துணை: தெளிதமிழ்த் திங்களிதழ்

படைத்த நூல்கள்: 1. சிறுவர்க்கான செந்தமிழ், 2. அறிவுத்தொடரி,
3. தமிழ்ச்சுவை, 4. சுவைக்கனி, 5. கனித் தொகை,
6. தொடுவான். 7. அண்ணாநான்மணி மாலை,
8. வாழுந்தமிழ், 9. மணிக்குவை,
10.ஆழிப்பேரலை அழிவு 11. கூர்வேல். 12. கணை

முகவரி: மொறப்பாக்கம், மதுராந்தகம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்

பாவலர் பரிசு திட்டம்-34
எழுசீர் வண்ணக்குறட்டாழிசை

சந்தக் குழிப்பு: தான தந்ததன தான தந்ததன
தான தந்ததன தனதனா

உரூபா 500 பரிசுபெறும் பாடல்:

1.ஓடி வந்தமொழி ஊறு தந்ததினி
ஓடு கின்றநிலை புலருமா?
வாடு கின்றதமிழ் பீடு கொண்டுலகி(ல்)
வாழு கின்றநிலை மலருமா?
-திருக்குறள் நாவை. சிவம், மணற்பாறை

2.வீறு செந்தமிழி னோடு நின்றுநிலை மேவ இன்றுமெடு படையடா
நூறு வந்துமெதி(ர்) மோது கின்றபகை நோவ வென்றுதடை யுடையடா!
- த. இராமலிங்கம், சின்னமணல்மேடு

3.மூளு(ம்) வெஞ்சமய மூட ரின்றுநமை மோத வந்திடுவ(ர்) அதிரவே
ஆளு மன்றிடையி லாள வந்தவ(ர்)க ளான நந்தமிழ ரெழுகவே!
- பைந்தமிழ்ப்பாவலர், புலவர் சி. பெருந்தேவன், தவளக்குப்பம்.

4.ஆழி தந்தமண(ல்) மேடு நின்றதென ஆய வந்தவ(ர்)க(ள்) மொழியவே
ஊழி வந்ததென ஓதி நின்றன(ர்)ப லூறு தந்தமத வெறியரே!
- பாவலர் கருமலைத் தமிழாழன், ஓசூர்

5.ஈழ நந்தமிழ(ர்) வீழு கின்றநிலை ஏக வெந்தவழி யறிவொமே
தாழு கின்றநிலை மாறு கின்றவரை வாடு மெந்தமிழ(ர்) மடிவரே!
- ப. வனிதா, நெய்வேலி-3

6.நாவி ணைந்தமொழி தாயி யம்புமொழி நாடு கின்றதமி ழழிவதோ?
தாவி வந்தமொழி மேவு கின்றநிலை தானு கந்ததென மொழிவதோ?
- புலவர் மா. சு. மணி, திருக்கழுக்குன்றம்

7.நாடி வந்தினிய(ர்) போல இங்குலவு நாயி னுங்கடைய(ர்) மொழிகளே
ஈடி லின்றமிழி னூடு புன்களைக ளேனு டன்களைய எழுகவே !
- மு. திருவாணன், திண்டுக்கல்

8.வாடு மெந்தமிழ ரோடு வந்தவிரு(ள்) வாடி யந்தவுல கடையுமே
கூடு மெந்தமிழ ரோடு நந்தமிழ(ர்) கூடி யெந்தமிழை யடையவே
- க. அரசு, வெங்காலூர்-45

9.தோண லம்புதிது தோய வங்கினிது தோது டன்றழுவ விழையுமோ?
மாண வுங்கவரி மாவி னம்புரைய மான முந்திகழு மகளரோ
- பைந்தமிழ்ப்பாவலர் மு. வே. கங்காதரன், சென்னை-83

கருத்தூன்றுக

1. இதில் தந்ததன என்ற இடத்தில, இல்லையென, மின்னலதை, நன்மைசெய, கின்றநிலைக், நிற்பவரு, வைத்தவனுந், தாரியென, பன்மொழியி, பல்லறிவு, முத்தமிழி, அன்னையரி, இல்லமதை, நற்கலைக, நன்மொழிக, னென்னுமன, பெண்ணிவர்த, வந்திடினுந், விண்வரையு, மின்னலென, தீந்தமிழை, என்ற சீர்கள் வாரா.

தான என்ற இடத்தில், ஓடிச், நாடிச், தண்டம், மூத்தோர் என்பன போன்ற சீர்கள் வாரா.

2. வாழு செந்தமிழை, தாயை கொன்றவனை, வாடி செந்தமிழர், மேவு வன்பினொடு, என்பவனு பாதகம். ஆணு பெண்ணிவர்தம், சூழுகின்ற யிடர், இந்த செயல், வந்ததென செல்லுமே என்பன புணர்ச்சிப் பிழைகள். இவை முறையே, வாழுஞ் செந்தமிழை, தாயைக் கொன்றவனை, வாடிச் செந்தமிழர், மேவு மன்பினொடு, என்பவனும் பாதகம். ஆணும் பெண்ணும், சூழுகின்றவிடர், இந்தச் செயல். வந்ததெனச் செல்லுமே என வரவேண்டும். வரின், சந்தம் பிழைக்கும்.

3. ஒன்றுபட(த்), வந்திடினு(ந்) தூய, ஓடு(ம்) சிங்களவர், விம்மியழு(ம்) சொந்தமே, வந்தடையு(ம்) பேரும் என்ற இடங்களில் த், ந், ம் என்பன அடைப்புக்குள் வாரா.

4. இல்லறம், நல்லறம், செல்லுமே, சொந்தமே, ஆளுமே, வாழுமே ஆகியன தனதனா என்ற சந்தமாகா.

5. பின் வரும் அயற்சொற்களை அகற்றியிருக்கலாம்: பாதகம் (கொடுவினை), வேடம் (கோலம்). ஆசை (அவா).

பாவலர் பரிசு திட்டம்-35

பாவலர்களே. பாவலர் பரிசு திட்டம் தொடங்கி 34 திங்கள்கள் கடந்தன. இதுவரையில் பல்வேறு பாவகைகளில், பல்வேறு சந்த வண்ண அமைப்புகளில், பல்வேறு அணிகள் அமையும் பாடல்களைப் படைத்துப் பரிசும் பாராட்டும் பெற்றிருக்கிறீர்கள். உங்களால் மரபு யாப்புக்கே ஒரு மதிப்பு ஏற்பட்டுள்ளது. சந்தம், வண்ணம், சிந்துப் பாவகைகளை இலக்கணத்துடன் படைக்கும் திறன் உங்களுக்குக் கைவந்திருக்கிறது. உங்களால் ஒரு பாடலைப் பார்த்து அதன் யாப்பமைப்பை அறிந்து அந்த வகைப் பாடலைச் செம்மையாகப் படைக்கமுடியும். எனவே, சென்ற திங்கள் முதல் பரிசு திட்டத்தில் ஒரு மாறுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு பாடலைக் கொடுத்து அதன் இலக்கணம் அறிந்து அந்த அமைப்பில் பாடல் எழுதுமாறு கேட்பதே அது.

மற்றுமொரு மாறுதல். இப்புதிய முறைப் பரிசு திட்டத்தில் ஏற்கெனவே பரிசு பெற்றோரும் கலந்துகொள்ளலாம். பிற நெறிமுறைகள் வருமாறு:

1. ஒருவர் ஒரு பாடல் மட்டுமே அனுப்பலாம்.

2. பாடல்களைத் தேர்வு செய்வதில் வல்லுநர்குழுவின் முடிவே இறுதியானது.

3. ஒரு திங்களுக்கு ஒரு முதற்பரிசு மட்டுமே (உரூபா 500 மதிப்புள்ள) நூல்களாக அனுப்பிவைக்கப்படும்.

4. வெளியீட்டுக்குத் தகுதியானவை என்று வல்லுநர் குழுப் பரிந்துரைக்கும் பாடல்கள் தரவரிசைப்படி வெளியிடப்படும்.

5. இப்புதிய முறையில் பரிசு பெற்றவர் பாடல் அதுமுதல் 2 ஆண்டுக்குத் தேர்வுக்கு உட்படுத்தப்பெறாது. ஆனால் அவர்தம் பாடல் தகுதியுடை யதாயின் வழக்கம்போல் வெளியிடப்படும்.

கீழ்க்கண்ட அமைப்பில் விரும்பிய பொருளில் ஒரு பாடல் இயற்றி வரும் துலை 20 (6-11-2007)க்குள் விடுக்க.

தனதுபிள் ளைக்குத் தாய்மொழி யான
தமிழிலே பெயரிட விரும்பான்
தனதுகை யெழுத்தை அயலவர் மொழியில்
தான்இடு வேனென மொழிவான்
தனதுபேர் தன்னில் ஆங்கில எழுத்தைத்
தலைப்பிலே போட்டுளம் மகிழ்வான்
தனதுபண் பாட்டில் பற்றிலா இவனும்
தமிழனா? எருமையா? புகல்வீர்!
- இரா. தி.