
|
நூல் நிறை
தமிழ்ச் சிமிழ் ஆசிரியர், புலவர் வே. பதுமனார், வெளியீடு. ஆதவன் பதிப்பகம், 4, இராவாண்டை வேணுகோபால் வீதி, பிச்சனூர், குடியேற்றம்-632 602. பக் 144 விலை உரூபா 55. குடியேற்றத்துத் தமிழ்ச் சான்றோர்களுடன் பெருமை மிக்க புலவர் வே. பதுமனார் அவ்வப்பொழுது இயற்றியவையும், பாட்டரங்குகளில் பங்குபெற்றுப் பாடியவையும், பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு பரிசுபெற்றவையுமான மரபு பாக்கள் இந்நூல் தலைப்புகள் ஏழின்கீழ்த் தொகுக்கப்பெற்றுள்ளன. இந்த நூலை எடுத்துப் படிப்போர், தெளிதமிழ்ப் பயன்பாட்டை மெல்லமெல்ல வளர்த்துக்கொண்டு, தமிழர் பண்பாட்டையும் தமிழ்ச் செம்மையையும் கட்டிக் காத்துத் தமிழ் இனத்தின் விதைகளாய் உரம் பெற்றால் அதுவே இந்த நூலின் பயன். இன்றைய இணையப் பதிவிறக்கப் புகழ் எழுத்தாளர்கள் குறித்து, எழுத்தாள ரல்லரவர் ஆங்கி லத்தை என்று பாடுவதன் ஈற்றடியில் இலைமறை காயாய்த் தோன்றும் இருபொரு ணயம் நூலாசிரியர்தம் நுண்ணோக்கைப் புலப்படுத்தும். உஷாப்பிடி என்று பி.டி. உஷாவை (இருபொருள்?) போற்றும் பா. இன உணர்வுள்ளோரை உறுத்தும். 'பஞ்ச கனிகளிலே', 'பாரதம் ஓட்டிய சாரதீ', 'காந்தீயம் வாழ்கிறது', 'உன்றன் உடும்பு பிடியில்', 'சிலுக்குகளின் சிரிப்பில்', 'கார்கள் கத்தின' முதலான பிழைகள் பல, நூலாசிரியர் மொழியும் நூற்பயனுக்கு இழுக்குகள் அல்லவோ? - பேராசிரியர் தேவமைந்தன். தமிழர் திருமணம் : செய்ம்முறை விளக்கம் ஆசிரியர் : ஐவர்வழி வ. வேம்பையன் வெளியீடு : அவ்வை பதிப்பகம், 6/91, திருவள்ளுவர் இல்லம், மஞ்சு அடுக்ககம், திருவள்ளுவர் சாலை, நெசப்பாக்கம், கலைஞர் நகர் மேற்கு, சென்னை - 600 078. பக்கம். 16. விலை உரூ. 5/- தமிழர் திருமணத்தைத் திருக்குறள் வழி நடத்திக்கொள்ள உதவும் எளிய செய்ம்முறை விளக்கக் கையேடாக இவ்வரிய நூலை உருவாக்கியுள்ளார் ஐவர்வழி வேம்பையன். திருமணம் நிறைவுற்றபின் மணமக்கள் வாழ வேண்டிய முறையையும் மிகச் சுருக்கமாகப் பழந்தமிழ்ப் பாடல் (ஐந்திணை ஐம்பது 38) விளக்கத்தின்படித் தந்திருப்பது அருமை. மாறன் பொறையனாரின் அப்பாடல், மணமக்களுக்கு 'மான்கள் வழங்கும் பாடம்' என்ற தலைப்பின்கீழ்த் தரப்பெற்றுள்ளது. செம்புலப் பெயனீரார் பாடல் காட்டும் தமிழ்க்காதல் படிப்படியாகப் பொய்யும் வழுவும் சேர்ந்து எவ்வாறு கரணத்துக்குக் காரணம் ஆனது(தொல்.பொருள்.கற்பியல்,143)தொடங்கித் தமிழ்த்திருமணத்திற்கான தேவையின் வரலாறு செறிவாகவும் தெளிவாகவும் தரப்பெற்றுள்ளன. திருமண நிகழ்முறை, மணமக்களுக்குப் பத்துக் கட்டளைகள் ஆகியவையும், ஏற்ற தரவுகளை யாரும் நிரப்பிக் கொள்ளும் வகையில் திருமண வாழ்த்து, மணமகள்-மணமகன் தரும் வாழ்க்கைத் துணை நல உறுதிமொழிகள், திருமணம் சரிபார்ப்புப் பட்டியல் ஆகியவையும் அமைக்கப்பெற்றுள்ளமை மிகவும் பாராட்டத்தக்கன. சுனைவாய்ச் சிறு நீரைக் கள்ளத்தின் ஊச்சும் அழகை வெளிப்படுத்தும் ஓவியர் மு. கலைவாணன், தன் பெயருக்கேற்றவர். தமிழர் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய கையேடு இது. |