ஆரவாரத்தால் அருந்தமிழ் வளராது! ஆற்றத் தவறிய கடமைகளைக்
கலைஞர் செய்து சிறப்பெய்துக!

(நா. நந்திவர்மன், பொதுச்செயலர், திராவிடப்பேரவை)

உலகின் அனைத்து மொழிகளின் வரிவடிவமும் பற்றிய நூல் (The World's Writimg Systems) இன்று அறிஞர்களிடையே புதிய சிந்தனைகளைத் தூண்டியுள்ளது. பீட்டர் மேனியல், வில்லியம் பிரெட்டு ஆகியோர் இணைந்து எழுதிய ஆக்சுபோர்டு பல்கலைக்கழக அச்சகம் வெளியிட்ட அந்நூல் உலகில் எழுத்து வடிவத்துடன் உள்ள ஒவ்வொரு மொழியின் வரலாற்றையும் எழுத்துகளின் பிறப்பையும் ஒரே நூல் வழியே உணர்ந்துகொள்ள வழி ஏற்படுத்துகிறது. 13 பகுதிகள் கொண்ட அந்நூலில் பலதுறை அறிஞர்கள் பன்மொழி களில் ஆற்றிய ஆய்வுகள் ஒருங்கே திரட்டித் தரப்பட்டுள்ளன.

அந்நூல் பிழிந்து தரும் பிறமொழி ஆய்வு நூல்கள் சிலவற்றை ஈண்டு பட்டியலிட விழைகின்றேன். பீட்டர் டேனியல் எழுதிய இலக்கணவியல் (Grammatology) பன்மொழி எழுத்து வடிவங்கள் பற்றி விரித்துக் கூறுகிறது. முதல் நாகரிகங்கள் (The First Civilizations) என்ற அவரது நூலும் தமிழர்கள் படிக்க வேண்டிய நூலாகும். முதல் நாகரிகம் எமதே என்றிடும் தமிழர்கள் முதல் நாகரிகங்கள் என்ற நூலின் கண் தமது நாகரிகம் பற்றிய உண்மைச் செய்திகள் உள்ளனவா என்று தேடிப்பார்க்க வேண்டாமா? இருந்தால் அந்தச் சான்றை உலகறிய ஓங்கி ஒலித்திடல் வேண்டாமா? இல்லாவிட்டால் விடுபட்டுப்போன வரலாற்றைப் பதிந்திட வேண்டாமா? உலக மொழிகளின் வரிவடிவங்கள் ஒரே வடிவமாக இருந்து பிரிந்திருக்கலாம் என்ற கருத்தை வலியுறுத்தும் நூலில் உலக முதன்மொழி தமிழென வாதிடும் நாம், நமது தரப்பை எடுத்துச் சொல்லி இடம் பெறச் செய்ய வேண்டாமா?

பழம் பாரசீக குயுனிபார்ம் (Old Persion Cuneiforms) பற்றி டேவிட்டு டி. டெசுடன் முந்து சீன எழுத்துமுறை (Early Chinese Writing) பற்றி வில்லியம் போர்ட்சு நவீன சீன எழுத்துமுறை (Modern Chinese Writing) பற்றி விக்டர் மெயர். கொரியன் எழுத்துமுறை (Korean Writing) பற்றி உரோசு கிங்கு ஆகியோர் எழுதிய நூல்களின் செய்திகள் உலகின் வரிவடிவங்கள் நூலின் கண் இடம் பெற்றுள்ளன. அனைத்து மொழி நூல்களின் பட்டியலையும் தரின் நெடிய நூற்பட்டியலாகப் பல பக்கங்களுக்கு விரியும்.

ஆயினும் நம் மொழி தொடர்புடைய மொழிகள் பற்றிய நூற்பட்டியலை மட்டும் காண்போம் முந்து எலாமைட்டு வரிவடிவம் (ProtoElamiteScript) பற்றி இராபர்ட்டு கே. இங்குவந்து எழுதியுள்ளார். சிந்துவெளி வரிவடிவம் பற்றி அசுகோ பர்போவா எழுதியுள்ளார். சிந்துவெளி எழுத்தாய்வுக்காக வாணாளை முழுமையும் செலவிடும் முனைவர் இரா. மதிவாணன் நூல்கள் மேற்கோளாகவும் பயன்படவில்லை. இவ்வளவு பெரிய ஆய்வு நூலை உருவாக்கியவர்கள் பார்வைக்கும் போகவில்லை. சிந்துவெளி எழுத்துகள் பற்றி மதிவாணன் கண்டுபிடிப்புகள் முழுமையாக இன்னமும் பதிப்பிக்கப்படவில்லை. அவற்றைப் பதிப்பிக்கவும் எந்தத் தமிழ் நாட்டரசும் எவராண்ட போதும் முன் வரவில்லை. பாவாணர் பேரறிவைப் பாரறியப் பறைசாற்றிய தென்மொழி ஏடும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களும் வலியுறுத்திய தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டத்திற்கு இயக்குநராக மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அமர்த்தப்பட்டார். அவருக்கு உதவியாளர்களோ உரிய ஏந்துகளோ அளிக்கப்படாமல் அவரிடம் மண்டிக் கிடந்த பேரறிவு உலக அரங்கில் தமிழ் முதன் மொழி என நிறுவப் பயன்படுத்தப்படாமல் கலைஞர் ஆட்சியால் வீணடிக்கப்பட்டது. பன்னூறு ஆண்டுக்கொரு முறையே பாவாணர் போன்ற ஆழ்ந்தகன்ற அறிவுடைய மொழியியல் அறிஞர்கள் முகிழ்க்க முடியும். அவர் வாழும் காலத்தில் பயன்படுத்தப்படாமல் போனது போலவே அவருக்குப் பின் தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்குநராக ஆக்கப்பட்ட முனைவர் இரா. மதிவாணன் தொண்டும் இடை வெளி விட்டு விட்டு அரசுகள் மாறுவதற்கேற்பத் தடைபட்டுத் தடைபட்டே தொடரப்பார்க்கிறது. எழுபானாண்டைக் கடந்த அறிஞரிடம் உள்ள தமிழறிவைப் பெற்றுப் பாதுகாக்கத் தமிழ் நாட்டரசுகள் தவறியுள்ளன. 37 ஆண்டுகளாக இழுத்தடிக்க வேண்டிய ஒன்றா தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம்? செய்யத் தவறிய கடமைகளைத் தமிழ்நாட்டரசின் முதல்வர் கலைஞர் சிந்தித்துப் பார்ப்பாரா?