காலம் என்பது மீண்டும் திரும்பாமல் ஓடிக் கொண்டே இருக்கும் காட்டாறு இதனைக் 'காலமென்னும் காட்டாறு கரைமீறி ஓடுதடா' என்று ஒரு பாவலர் பாடியுள்ளார். எதை இழந்தாலும் அதை மீண்டும் எவ்வாறேனும் பெற்றுவிடலாம், ஆனால் காலத்தை மட்டும் யாரும் திரும்பப் பெறவியலாது. மீண்டும் பெற்றிட இயலாத காலத்தின் தன்மையறிந்து அதனைப் பகுத்து வினையாற்றித் தமிழர் வெற்றியோடு வாழ்ந்திருக்கிறார்கள்.
காலக் கணக்கு
காலத்தை மாற்றம் பெறும் அதன் தன்மைக்கு ஏற்பப் பெரும்பொழுதாகவும் சிறுபொழுதாகவும் கணக்கிட்டுப் பகுத்திருக்கிறார்கள், சித்திரை. வைகாசி இரண்டையும் இளவேனில் எனவும். ஆனி. ஆடித் திங்கள் இரண்டையும் முதுவேனில் எனவும். ஆவணி. புரட்டாசி இரண்டையும் கார் எனவும். ஐப்பசி. கார்த்திகை இரண்டையும் குளிர் காலம் எனவும். மார்கழி. தை இரண்டையும் முன்பனிக்காலம் எனவும். மாசி. பங்குனி இரண்டையும் பின்பனிக் காலம் எனவும் பிரித்துக் கணக்கிட்டு வழங்கி வருகிறோம், அதுபோல் ஒரு நாளை வைகறை. காலை. நண்பகல். எற்பாடு. மாலை. யாமம் எனப் பகுத்துச் சிறு பொழுதுகளாக இலக்கியம் கூறுகிறது,
ஒருநாள் என்பது இருபத்து நான்கு மணிகளாகவும். 1440 மணித் துளிகளாகவும். அதாவது 1 மணி அறுபது மணித்துளிகளாகவும் கணக் கிடப் பெற்று வழக்கிலுள்ளன, மேலும் ஒருநாள் அறுபது நாழியாகவும் ஒரு நாழிகை இருபத்துநான்கு மணித்துளிகளாகவும் ஒரு நாள் 1440 மணித்துளிகளாகவும் கணக்கிடப்பெறுதலும் உண்டு,
நாளின் தொடக்கம் எப்பொது?
ஆங்கிலேயர் முறைப்படி இரவு பன்னிரண்டு மணிக்குமேல் நாளின் தொடக்கம் நடைமுறையிலுள்ளது. ஆனால் நாழிகையின் கணக்குப்படி காலையிலிருந்தே நாள் தொடங்குகிறது. அஃதாவது பகலிரவு அறுபது நாழிகை முடிந்த பிறகு காலையிலிருந்து நாள் தொடங்குகிற கணக்கும் நடை முறையிலுள்ளது. திருமண அழைப்பிதழ்களில் அதனைக் காணலாம்.
நடுநாள் வந்தது
இலக்கியம் காலக் கண்ணாடி. ஒரு சிறந்த நாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள், நாகரிக மேம்பாடு, பயன்மிகுந்த பண்பாடு ஆகியவற்றை நல்ல இலக்கியங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்! தமிழரின் சான்றாண்மை மிகுந்த தலைசிறந்த வாழ்வியல் நெறிகளைச் சங்ககால இலக்கியங்கள் தெளிவாகச் சாற்றுகின்றன. அந்தச் சங்ககால இலக்கியங்கள் தமிழருக்கு நாளின் தொடக்கம் பகல் பன்னிரண்டுக்குமேல் என்று தெரிவிக்கின்றன. அகநானூறு. நற்றிணை. குறுந்தொகை போன்ற இலக்கியங்கள். குறிஞ்சித்திணை. பாலைத்திணை, நெய்தல் திணை ஆகியவற்றில் கூறக் காணலாம்.
| 1. | ஆர்கலி வானம் தலைஇ நடுநாள்
கனைபெயல் பொழிந்தென | (நற்றிணை-குறிஞ்சி. 53) |
| குறிஞ்சித் திணைக்குரிய சிறுபொழுது யாமம். அதாவது நள்ளிரவு. நடு நாள் என்றால் நண்பகல் நாளின் தொடக்கமாகும். |
| 2. | உரவு உரும் உரறும் அரைஇருள் நடுநாள்
கொடி நுடங்கு இலக்கிய மின்னி | (நற்.குறி. 68)
|
| 3. | நல்லரா நடுங்கு உரறி. கொல்லன்
ஊதுலைக் குருகின் உள் உயிர்த்து அகழும் | (நற்.குறி. 125) |
| 4. | படு மழை உருமின் உரற்று குரல்
நடு நாள் யாமத்தும் தமியம் கேட்டே | (நற்.குறி.129)
|
| 5. | கடுமான் பரிய கதழ்பரி கடைஇ நடு
நாள் வரூஉம் இயல்தேர்க் கொண்கனொடு | (நற்.குறி.149)
|
| | யாம நடு நாள் துயில் கொண்டு ஒளித்த | (கலித்தொகை-122.21)
|
| 6. | அணங்குடை அரவின் ஆரிருள் நடுநாள்
மைபடு சிறுநெறி எöகு துணை ஆக! | (நற்.குறி.168)
|
| 7. | கண் தூர்பு விரிந்த கனைஇருள் நடு நாள்
பண்புஇல் ஆர்இடை வரூஉம் நம் திறத்து | (நற்,குறி,228) |
| 8. | கடுமா வழங்குதல் அறிந்தும்
நடுநாள் வருதி. நோகோ யானே | (நற்.குறி. 257)
|
| 9. | மழை அமைந்து உற்றமால்இருள் நடுநாள்
தாம் நம் உழைய ராகவும் | (நற்.பாலை. 281)
|
| 10. | அரவு இரை தேரும் ஆர்இருள் நடுநாள்
இரவின் வருதல் அன்றியும் | (நற்.குறி. 285) |
| 11. | நீயே பெருநலத்தையே! அவனே
நெடுநீர்ப் பொய்கை நடுநாள் எய்தி | (நற்.மருதம்.290) |
| 12. | உருமுரறு கருவிய பெருமழை தலைஇப்
பெயலான்று அவிந்த தூங்கிருள் நடுநாள் | (அகம். மணி, குறி. 158)
|
| 13. | விளிவுஇடன் அறியா வான்உமிழ் நடுநாள்
அருங்கடிக் காவலர் இகழ்பதம் நோக்கி | (அகம். மணி, குறி. 162) |
| 14. | தொல்முரண் சொல்லும் துன்னருஞ் சாரல்
நடுநாள் வருதலும் வரூஉம்
வடுநாணலமே-தோழி-நாமே | (குறுந்.-குறிஞ்-88)
|
| 15. | நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும் | (புறநானூறு 189)
|
| 16. | பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும்
ஆர்இருள் நடுநாள் வருதி | (குறுந்.-குறிஞ்சி-141)
|
| 17. | வெஞ்சின அரவின் பைந்தலை துமிய
நரை உரும் உரறும் அரைஇருள் நடுநாள் | (குறுந்.-முல்.190)
|
| 18. | பையுடை இருந்தலை துமிக்கும் ஏற்றொடு
நடுநாள் என்னார் வந்து
நெடுமென் பணைத்தோள் அடைந்திசி னோரே | (குறுந்.குறி.268)
|
| 19. | சுனைப்பூங் குவளைச் சுரும்பு ஆர் கண்ணியன்
நடுநாள் வந்து நம்மனைப் பெயரும் | (குறுந்.குறிஞ்-321)
|
| 20. | பிறங்குமலை அருஞ்சுரம் இறந்தவர்ப் படர்ந்து
பயில் இருள் நடுநாள் துயில் அரிது ஆகி
| (குறுந்.பாலை-329)
|
| 21. | புயலேறு உரைஇய வியலிருள் நடுநாள்
விறலிழைப் பொலிந்த காண்பின் சாயல் | (அகம்.மணி.குறிஞ்.)
|
இது காறும் காட்டிய காட்டால் நடு நாள் என்பது நள்ளிரவாகிய யாமம் என்பது புலனாகிறது. கதிரவன் தெற்கில் தோன்றிவிட்டு வடக்கில் தோன்ற வரும் நாளை உத்திராயனம் என்றும் வடக்கில் தோன்றிவிட்டுத் தெற்கில் தோன்ற வரும் நாளைத் தட்சணாயனம் என்றும் கூறுவர். அயனம் என்றால் செல்லுதல் என்று பொருள். கதிரோன் நிலநடுக்கோட்டுக்கு நேரே வரும் நாள் சித்திரைத்திங்கள் முதல் நாளாகும். கதிரோன் நடுக்கோட்டில் தோன்றும் நாளிலிருந்து ஆண்டின் பிறப்பைக் குறிப்பதுபோலப் பகலின் பன்னிரண்டு மணியில் சூரியன் உச்சிக்கு வரும் பொழுதிலிருந்து நாளின் தொடக்கமாகக் கொண்டிருக்கலாம்.