
|
மனம் திறந்த மடல்கள்
பேரா. ம.இலெ. தங்கப்பா, அவ்வை நகர்
முகப்புப் பாடலில் சரியான அடி கொடுத்துள்ளீர்கள். மான முடையவர்கள் நான்று கொண்டு தான் சாகவேண்டும். ஆனால் மானமில்லாமையால் தானே அவர்கள் அப்படியிருக்கின்றார்கள். எப்படிச் சாவார்கள்? ஆனால் யாரும் உங்களைக் குற்றம் சாட்டமுடியாது. ஏனெனில் நீங்கள் யாரையும் கடிந்து கூறவில்லை. சில செயல்கள்-அத்தகைய செயல்களைச் செய்ய நாம் கற்றுக் கொள்ளவில்லையே என்று வருந்தியிருக்கின்றீர்கள், அவ்வளவுதான். எவ்வளவு சொன்னாலும் சிலர் திருந்தமாட்டார்கள். அவர்கள் பிறவி அடிமைகள். ஆனால் நடக்க வேண்டியவை நடக்காமலிருக்க அவர்கள் துணை போகின்றார்களே! அதுதான் வருத்தமாயிருக்கின்றது. தேவமைந்தன்
இன்றுதான் எங்கள் இணையமுலாவு நடுவத்தில் தெளிதமிழ் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தெளிவான வலையாண்மை. தங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தபொழுதெல்லாம் தமிழ் இணையம் பற்றியே பேசிவந்தேன். இன்று தமிழ் இணையவுலகிலும் சந்திக்க முடிகிறது. தெளிதமிழினை இணையதளத்தில் வடிவமைக்க உதவும் நண்பர்களுக்கு என் வாழ்த்துகள்! புலவர். த. ஆறுமுகன், சென்னை 49
யான் தங்கள் இதழ் வழியாகவும் 'பாவலர் பண்ணை' 'சிந்துப்பாவியல்' வழியாகவும் அரிய பாடல் வகைகளை எழுதும் பயிற்சி பெற்றேன். யான் அண்மையில் எழுதிய 'மரபில் மணக்கும் மலர்கள்' என்னும் பாமாலை நூலைப் பாராட்டி நெய்வேலி நூற் காட்சியினர் ரூ. ஐயாயிரம் பொன் முடிப்பும், பாராட்டிதழும் வழங்கினர் என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன். ச. நாத்திக நந்தனார், வண்டலூர்
ஏன் பிறந்தோம்? அரிய நற்கவிதையைப் படித்தேன். மிக நன்று! ஓர் உண்மையான தமிழ் நெஞ்சக் குமுறலை மிகத் தெளிவாக நன்கு வெளிப் படுத்தியுள்ளீர்கள். நம் மொழிக்கு நல்லவைகள் சரியாக நடக்க வேண்டும், என்பதற்காக நாம் இப்படி மனம் வெந்து சாக வேண்டியதுதானோ? நம் மனக்குமுறலுக்கு மருந்தே கிடையாதா? புதுவையை ஆளுவது ஒரு தமிழர் தானே? அவருக்குச் சிறிதுகூட மொழி உணர்வே வராதா? தமிழுக்கு ஏற்றம் வர நாம் எத்தனைக் காலம்தான் இப்படிப் புலம்பித் தீர்ப்பது? இதற்கு ஒரு முடிவு கட்ட உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் எப்போது ஒன்று திரண்டு வரும்? ம.பாலன், கலிதீர்த்தான்குப்பம்
"நாடாள வந்தோரின் கால்செருப்பை நக்குதற்குக் கற்றோமா? அவர்கள் காட்டும் மூடிவைத்த இடங்களிலே சொறிந்து விட்டு முகமெல்லாம் பல்காட்டக் கற்றிட்டோமா?” என்ற திருமுருகனாரின் முகப்புப்பா அடிகள் சுரணையுள்ள தமிழனுக்குச் சுறுசுறுப்பை அளிப்பன. "மக்களாட்சியில் மக்களே தலைவர்கள். ஆட்சியாளர் ஊழியக்காரர்களே" என்ற தங்கப்பாவின் ஆசிரியவுரை வரிகளைத் தமிழன் உணர எத்தனைக் காலமாகுமோ? மதிப்புறு சொற்களும் சாதிப்பெயர்களும்-பி. இராமநாதனின் கட்டுரை சாதிப்பெயர்கள் வந்ததற்கான அரிய விளக்கம். சாதி வெறியர்கள் படித்துணரக் கூடியதாகும். பொறிஞர். அகன், மாத்தூர்
"தமிழா தமிழைத் தமிழாய் எழுது! தமிழில் பிறமொழி கலப்பது பழுது" மிகச்சிறந்த பரப்புரைப் பாடல்! செம்பியனார்க்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்! கண்ணில் பட்டதும் கருத்திற் பட்டதும் - மிகக் கூர்ப்பும் செறிவும் பெற்றுச் சிறக்கின்றது. புலவர். ந. ஞானசேகரன், திருலோக்கி
தெளிதமிழ் கன்னித்திங்களிதழ் படித்துச் சுவைத்தேன். தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளும் புதுவைக் கீழ்த்தட்டு மக்களின் அறிவிலிச்செயல்பாட்டைப் படித்தபோது சமுதாயத்தில் மட்டுமன்று, மூடநம்பிக்கை கல்வித்துறையிலும் காலூன்றிப் பாழ்செய்யும் என்பதை உணரமுடிந்தது. ஊர் நடவடிக்கைகள் உரையாடல் படித்தேன். தமிழ் நாட்டில் கல்வி மொழி பற்றிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புப் பற்றிக் குறிப்பிடும்போது மொழி தொடர்பாக நீதிமன்றம் செல்வோர்க்கு ஆணிகட்டின செருப்பால் அடித்ததுபோல் உள்ளது தீர்ப்பு என்று சொல்லி யிருந்தது நெஞ்சம் பிணித்தது. தன்னல மில்லாத தமிழறிஞர்களின் கருத்துகளை அரசு புறக்கணிக் கின்றது. சுற்றியிருந்து அரிப்பெடுத்த இடங்களில் சொறிந்துவிடும் கூட்டத்தின் எண்ணம்தான் நிறைவேறுகிறது எனும் பதிவுகள் புதுவை, தமிழக அரசின் உண்மைச் செயல்பாட்டினைப் படம்பிடித்துக்காட்டுவனவாய் இருந்தன. |