மாணாக்கர் பக்கம்

சென்ற இதழ்ப் பரிசு திட்டத்தின் விடை

ஆராலும் ஆக்கற் கரிதாய்த் துகளாலே
சீராய் இழைத்த திருமனையாம் - நாரில்
அரிக்கும் நறவை அடக்கும் உயரத்
திருக்கும் அதன்பேர் இறால். - இரா. தி.

(நாரில்-பன்னாடையில், அரிக்கும்-வடிகட்டும்.)

சரியான விடை அனுப்பியோர்

*த. முத்தமிழ்-கோவை 18,
*பு. காயத்திரி-திருப்பத்தூர்(வேலூர்),
இரா. கலைச்செல்வி-வேலூர் நாமக்கல்,
புலவர் த. ஆறுமுகம்-சென்னை 49,
*சு. தங்கதுரை-வேலூர் 9.

* இக் குறியிடப்பட்டோர் பரிசு பெறுகின்றனர்.

மாணாக்கர் பரிசு திட்டம்-127

அடியில் சில சுவையான சுவைப் பகுதிகளும் அவை வரும் நூல்களும் தரப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் எந்த நூலில் வருகிறது என்று குறிப்பிடுக.

1. தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன்

2. கடைக்கண்ணால் கொல்வான்போல் நோக்கி, நகைக்கூட்டம்
செய்தான்அக் கள்வன் மகன்.

3. யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல, நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்

4. இளமையிற் சிறந்த வளமையும் இல்லை

5. நெடுநுகத்துப் பகல்போல
நடுவுநின்ற நல்நெஞ்சினோர்

6. ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்

7. அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்
பெரியோர்

8. தேன்மயங்கு பாலினும் இனிய. அவர்நாட்டு...
மான்உண்டு எஞ்சிய கலிழி நீரே.

9. நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப.

10. பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

நூல்கள்: தொல்காப்பியம், மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு. விடையை வரும் துலை உ0 (6-11-2007)க்குள் அனுப்புக.