
|
கருத்து மேடை
கு. அனாதரட்சகன், சென்னை-14
1. தங்கள் 'இனிய தமிழைப் பிழையின்றி எழுத எளிய வழிகள்' என்ற நூலின் 18ஆம் பக்கத்தில், 5ஆம் வேற்றுமை உருபுகள் நின்று, இருந்து என உள்ளது. ஆனால், 5ஆம் வேற்றுமை உருபுகள் இல், இன். சொல்லுருபுகள் இருந்து, நின்று ஆகும். இதைச் சரிபார்த்துக்கொள்ளவும். 2. அந்நூல் பக். 22இல், வலிமிகும் இடங்களில் சில அ, இ, எ, அந்த, இந்த, எந்த, அங்கு, இங்கு, எங்கு, ஆங்கு, ஈங்கு, யாங்கு என்று உள்ளது. அவற்றுடன், அப்படி, இப்படி, எப்படி, ஆண்டு, ஈண்டு, யாண்டு என்பவற்றையும் சேர்த்தால் நலமாக இருக்கும் என எண்ணுகிறேன். 1. தங்கள் கருத்துரைகளுக்கு நன்றி. இன்றைய பேச்சு வழக்கில், இருந்து என்பதும், எழுத்துவழக்கில் நின்று என்பதுமே உள்ளன. எனவே அவை 5ஆம் வேற். உருபுகளாகத் தரப்பட்டுள்ளன. சொல்லுருபுகளும் அப்பொருள் தரும் வேற். உருபுகளே. 2. அப்படி இப்படி எப்படி என்பன மிகுந்தும் மிகாமலும் வரும் என்பதனால் சேர்க்கவில்லை. சுருக்க நூலாதலின் இன்றைய இலக்கிய வழக்கில் சிறு பான்மையே வரும் ஆண்டு, ஈண்டு, யாண்டு ஆகிய சொற்கள் சேர்க்கப்பட வில்லை. மேலும் புணர்ச்சி விதிகளை விரிவாகக் கூறும் நோக்கமில்லை. மிகவும் இன்றியமையாத சிலவற்றைச் சுட்டுவதே நோக்கம் என்பதையும் அதனால்தான், வலிமிகும் இடங்களில் சில என்று தலைப்பிடப்பெற்றது என்பதையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். இரா. கலைச்செல்வி, வேலூர்
1. தமிழகத்தில் தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ் இதழை நடத்த வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் இலங்குவது தெளிதமிழே என்பேன். தெளி தமிழில் வெளிவரும் சிறப்பான கட்டுரைகளுள் ஒன்று நூற்கடல் திரு. கோபாலையர் எழுதும் கட்டுரை. 18.9.2007 தெளிதமிழ் இதழில் வந்த கட்டுரையில் பின்வரும் குறைகள் உள்ளன. நிகழற்பாலதோடு, என்கற் றனகொல், கிழத்திற்கு இல்லை, அன்பினளா, இருதலையாலும், சொற்கும் அன்பு-இவற்றிற்குத் தாங்கள் சரியான திருத்தம் செய்து வெளியிட்டால் இலக்கண ஆர்வலர் அனைவருக்கும் பயன்படும். நன்றி. நீங்கள் குறிப்பிட்ட இடங்களில் பிழை நேர்ந்துள்ளது உண்மைதான். தட்டச்சிட்டவர் கோபாலையரின் நுணுங்கிய கையெழுத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு அவ்வாறு அடித்திருக்கிறார். இதைச் சரியாக நோக்காதது எனது பிழையே. பொறுத்தாற்றுக. நிகழற்பாலதோடு-நிகழற்பாலதாகும், என்கற்றன கொல்-என் உற்றன கொல், கிழத்திற்கு இல்லை-கிழத்திக்கு இல்லை, கற்பினளா-அன்பினளா இருதலையாலும்-இருதலையானும், சொற்கும் அன்பு-கொள்ளும் அன்பு என அவற்றை அன்புகூர்ந்து திருத்திக்கொள்க. |