
|
கண்ணிற் பட்டதும் கருத்திற் பட்டதும்
1. இராசாசியும், கே. எம். முன்சியும், பண்டித நேருவும், நீலகண்ட சாத்திரியும், இந்து மதத்தை உலகெங்கும் பரப்பிட முயன்ற சுவாமி விவேகானந்தரும் கூறியிருப்பதுபோல் இராமாயணம் நடந்த கதை அல்ல! வால்மீகியின் கற்பனை! கற்பனை மட்டுமே! (சிந்தனையாளன், ஆக. 07, பக். 07) கூறியிருக்கட்டுமே! அவர்கள் இந்துமதத்தை வளர்ப்பதற்காக மற்ற மதங்களுக்குரிய எத்தனைக் கோயில்களை இடித்திருப்பார்கள்? இன்றைக்கு அவர்கள் இருந்து. இராமாயணம் கற்பனை என்று சொல்லியிருந்தால், அவர்கள் தலைக்கும் விலை வைத்திருப்போம்! என்று வேதாந்திகள் சொல்லக்கூடும்! 2. தமிழ் அறிஞர்களுக்குக் குடியரசு தலைவர் விருதுகள் வழங்காதது ஏன்? சமற்கிருதம், பாலி, பிராகிருத, அரபு, பெர்சிய மொழி வல்லுநர்கள் 23 பேருக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கிக் குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல் சிறப்பித்துள்ளார். குறிப்பிடத்தக்க வகையில் சாதனை புரிந்தமைக்காக, சீனிவாச வரகேடி சமற்கிருத விருதினைப் பெற்றுள்ளார். அராபிக் மொழி மோசின் உசுமானி, மவுலானா அபீப்ராய்கன்கான் மற்றும் சாபிக் அகமது கான். பெர்சிய மொழி முகமது சாசரப்-இ-ஆலம், பாம்பேவாலா முகைதீன் குலாம் ரசூல் மற்றும் மரியா பில்குயிஸ். இத்தகவலை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை, ஆகஸ்டு 16 ஆம் தேதியில் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ் மொழி வல்லுநர் எவர்க்கும் விருது மற்றும் சான்றிதழைக் குடியரசு தலைவர் வழங்கவில்லையே ஏன்? உயர்தனிச் செம்மொழியாகத் தமிழ் இன்னும் வைக்கப்படவில்லை என்பது தானே உண்மை? (யாதும் ஊரே, செப்.07, பக்.45) இத்தனைக்கும் தமிழ்தான் சட்டப்படிச் செம்மொழி என்று தொங்கத் தொங்கத் தாலி கட்டிக்கொண்ட மனைவி. சமற்கிருதம், பாலி, பிராகிருத, அரபு, பெர்சிய மொழிகள் செம்மொழியாக த்துக்கொள்ளப் பட்டவர்கள்! இந்தக் காலத்தில் சின்ன வீடுகளுக்குத்தானே மதிப்பு மிகுதி? 3. இந்திய நாட்டின் தேசியமொழிகளாக அறிவிக்கப்பட்ட மொழிகள் இருபத்திரண்டுதான். இருபத்து மூன்றாவது மொழியாகச் சமற்கிருதம் ஏன் சேர்க்கப்பட்டுள்ளது? இந்தியக் கூட்டமைப்பில் உள்ள எந்த ஒரு மாநிலத்திலும் தாய்மொழி என்னும் தகுதியில் இல்லாத சமற்கிருதம் ஆட்சி அலுவலக மொழியாகப் பயன்பாட்டில் இல்லாத சமற்கிருதம் பெரும்பான்மையான மக்களின் பேச்சுவழக்கில் இல்லாத சமற்கிருதம் எங்கனம் தேசிய மொழிகளில் ஒன்றாகும்? (தமிழர் முழக்கம், செப்,-ஆக.07, பக்.19) அதுதானே! கடவுளுக்குப் புரிந்த ஒரே மொழியான அந்தத் தேவபாடையை, வேதம் படைத்த ஒரே பாடையை, எப்படி மக்கள் வாய் எச்சிலில் ஊறிய தேசிய மொழிகளில் ஒன்றாகச் சொல்லமுடியும்? 4. பொதுமக்களே, பட்டங்களைப் பார்த்துக் கலைஞர்களையும் இலக்கியவாதி களையும் மதிக்காதீர்கள். அவர்களுடைய படைப்புகளைப் படித்தும் பார்த்தும் மதிப்பிடுங்கள். (பரணி, செப்.-ஆக.07, பக்.13) நல்ல அறிவுரை. சில நேரங்களில் பட்டம் கொடுக்கத் தகுதியில்லாத சிலர், பட்டம் பெறத் தகுதியில்லாத சிலர்க்குத் தகுதியில்லாத பட்டங்களைத் தந்துவிடுகிறார்கள்! நல்லதமிழை விரும்பும் எனக்கு ஓரமைப்பினர் 'கவிச் சிங்கம்’' என்று வடமொழியில் பட்டம் கொடுக்க அழைத்தார்கள்!-இரா. தி. 5. பாம்புக்குப் பட்டாபிசேகம் செய்வித்து அதனோடு பதவியையும் பகிர்ந்து கொண்ட தி.மு.க. இப்போது அந்தப் பாம்பு கொத்துகிறதே என்று கூப்பாடு போடுவதில் என்ன நேர்மை இருக்கிறது? என்ன கொள்கை இருக்கிறது? ஆரிய அரசியலின் ஒரு கூறுதான் ஜெயலலிதா. ஆனால் ஆரிய அரசியலுக்கு வெளியே உள்ள கருணாநிதி, தமிழ்நாட்டை ஆரியத்திற்கு விற்றவர். விலைக்கு வாங்கியவர்கள் கருணாநிதியின் தலைக்கும் விலை வைக்கிறார்கள். பலரின் மதிப்பீடும் இதுவாகத்தான்இருக்கும் என்று நம் பட்டறிவுக்குப் படுகிறது. 6. அமிர்தலிங்க அய்யர் வால்மீகி இராமாயணத்தை திறனாய்வு செய்து 'இராமாயண விமர்சா' என்று ஆங்கிலத்தில் நூல் எழுதியுள்ளார். அதில் அவர் இராமனோ. சீதையோ, மத்தியப் பிரதேசத்திற்குத் தெற்கே வந்ததில்லை, வால்மீகி இராமாயணம் குறிப்பிடும் லங்கா என்பது இப்போது மத்தியப் பிரதேசத்தில் உள்ளது. அது இலங்கையைக் குறிக்கவில்லை என்று கூறுகிறார். இராமன், இராவணன் ஆகியோர் பழங்குடித் தலைவர்கள் என்கிறார். (தமிழர் கண்ணோட்டம், ஆக.07, பக்.26) இதன்படி, தமிழ்நாட்டுக்கும் உண்மையான இராமாயணக் கதைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றாகிறது. அது விந்திய மலைக்கு வடக்கே நடந்ததாக உள்ள கதை என்றாகிறது. இங்கே உள்ள எந்த மலையிலும் சீதை மஞ்சள் தேய்த்துக் குளிக்கவில்லை. இங்கே எந்த ஊர்ப்பக்கமாகவும் இராமன் மாய மானைத் துரத்திக்கொண்டு ஓடவில்லை. தென்னிலங்கை வேந்தன் இராவணன் யாருடைய மனைவியையும் கடத்திக்கொண்டு வரவில்லை என்றாகிறது. அப்படியிருக்க இங்கே ஏன் வந்து இராமர் கடலில் பாலம் கட்ட வேண்டும்? 7. இராம-இராவணப் போர் மீண்டும் தொடங்கியிருக்கிறது. தமிழக முதல்வர் கருணாநிதியின் தலையையும், நாக்கையும் கொய்து கொண்டு வந்தால் எடைக்கு எடை தங்கம் அளிப்போம் என மதவெறித் துறவிகளின் தலைவர்களுள் ஒருவரான இராம்விலாசு வேதாந்தி சமயக்கட்டளை (Fatwa) இட்டிருக்கிறார், கலைஞர் கருணாநிதியை இராவணனின் வழி வந்தவர் என்று அடையாளம் கண்டிருக்கிறார். பிரச்சினை பாலம் பற்றியது அல்ல; அது இனம் பற்றியது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார். இராம-இராவணப் போர் அல்லது ஆரிய திராவிடப் (தமிழர்) போர் விட்ட இடத்திலிருந்து இப்போது மீண்டும் தொடங்குகிறது. (தமிழர் கண்ணோட்டம், ஆக.07, பக்.26) அதாவது, தேவர்களுக்கும் அரக்கர்களுக்கும் ஆன போர் ('தேவாசுர யுத்தம்') இன்னும் தொடர்கிறதோ? 8. வாழும் மொழிகள் நிறுவனத்தின் இணை இயக்குநரான ஹாரிசனும் இயக்குநர் கிரிகோரி டி.எஸ். ஆன்டர்சனும் மொழிகள் மறைவதற்கான காரணங்களை ஆராய்ந்தனர். தன் வளர்ச்சிக்கான வேலைவாய்ப்பைத் தரமுடியாதது, தன் பசிக்குச் சோறு போடமுடியாதது தமிழ் என்று தமிழன் கருதுகிறான். இருக்கும் நிலை அதுதான். தமிழை ஆட்சிமொழி என்று சட்டம் செய்துவிட்டு, அதைப் புறக்கணித்து ஆங்கிலத்தில் வல்லவர்க்கே வெலைவாய்ப்பைத் தந்து கொண்டிருக்கும் அரசே தமிழ் சாவதற்கு முதற்காரணம். 9. புதிய இசைப்பல்கலைக் கழகம் தமிழ் இசைக்கான பல்கலைக் கழகமாக இருக்க வேண்டும். மருத்துவர் இராமதாசு வலியுறுத்தல் -தமிழ் ஓசை, 9.10.07 இசைப் பல்கலைக்கழகம் தொடங்கி, இசையில் வல்லவர்கள் என்று அதற்குத் தமிழ்ப்பகைவர்களைத் துணைவேந்தர்களாக அமர்த்தினால் அது எப்படித் தமிழிசைக்கான பல்கலைக்கழகமாக இருக்கும்? எந்த மொழியில் பாடினால் என்ன? இசைக்கு மொழி இல்லை என்பார்கள். தமிழில் இசைப்பாடல் இல்லை என்பார்கள். தமிர்மொழி இசைக்கு ஏற்றதன்று என்பார்கள். இசையும் தமிழும் வல்ல இசைத்தமிழ் அறிஞர்களை அங்குத்துணைவேந்தர்களாக அமர்த்தினால் ஒழிய அது தமிழ் இசைக்கான பல்கலைக்கழகமாக இருக்காது. -இரா. திருமுருகன் |