ஆண்டு : க௪
இதழ் :
தி. ஆ. உ0௩அ, துலை,
18 - 10 - 2007
மலட்டெருமை பால் தருமா?

என்றடைந்தோம் விடுதலையை ! அன்று தொட்டே
எம்தமிழ்க்குத் தமிழ்மண்ணில் முதன்மை, மேன்மை
வந்திருக்க வேண்டும்; இதே இயற்கைச் சட்டம்.
வாழ்வென்னும் பயிர்க்கு நீர் இதுவே, ஆனால்
தந்திரத்துப் பார்ப்பனர்கள், வணிகர், வேற்றார்,
தன்னலப்பேய் ஆட்சியரும் கூடிக் கொண்டே
இன்று வரை ஆங்கிலத்தை அரசு கட்டில்
ஏற்றிவைத்தே எம் இளைஞர் வாழ்வைச் சாய்த்தார்.

அலுத்தலுத்துப் போய்விட்டோம் சொல்லிச் சொல்லி;
அணுவளவும் பயனில்லை! எண்ணிப் பார்ப்பின்,
வலுத்த பொருட் குறியர்அவர்! ஒழுக்கக் கேடர்!
வாழ்வு நலம் அவர் சிறிதும் பேணு வாரோ?
மலைச்செழும்புல் குடல்கொழுக்க மேயு மேனும்
மலட்டெருமை மடிசுரந்து தருமோ பால்தான்?
கலைத்திறத்தால் தேன்கூடு போலி ருக்கும்
*கடந்தையதன் கூடுஅதனில் தேன்உண் டாமோ?

-ம.இலெ. தங்கப்பா

* கடந்தை - ஒரு வகைக் குளவி. இதன் கூடு தேன்கூடுபோல் அமைந்திருக்கும்.