
|
குயவனுக்குப் பலநாள் வேலை !
தடியனுக்கு ஒருநாள் வேலை ! புதுச்சேரி என்று மண்ணின் மக்களால் வழங்கப்பட்ட இவ்வூரின் பெயர் பிரஞ்சுக்காரர் ஆட்சியில், பிரஞ்சு மொழியில் புதுச்சேரி என்றே எழுதப்பட்டுப் பின் (17ஆம் நூற்றாண்டு முதல்) 'பொந்திசேரி' என்று திரிக்கப்பட்டது, அது ஆங்கிலேயரால் 'பாண்டிச்சேரி' என்று படிக்கப்பட்டது, தஞ்சாவூர் 'டேஞ்சூர்' என்றும், தரங்கம்பாடி 'ட்ரங்க்பார்' என்றும், கொள்ளிடம் 'கொல்றோம்' என்றும் ஊராள வந்த அயலாரால் உளறிவைக்கப்பட்டதுபோல், புதுச்சேரியும் 'பாண்டிச்சேரி' என்று குதப்பப்பட்டது. இந்தப் பெயர் வடிவம், நாம் வெள்ளையர்களுக்கு அடிமைப்பட்டிருந்தோம் என்பதைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் அடிமை வரலாற்றின் அடையாளங்கள்! அப்போது வெள்ளையர்கள் நம் மேல் காறித் துப்பியதால் ஏற்பட்ட இத்தகைய கறைகளைக் கழுவித் தூய்மை செய்துகொள் வதை விட்டு, அவற்றைப் போற்றிப் பாதுகாத்துப் பெருமைப்படுவதே நாகரிகம் என்று சிலர் எண்ணுகிறார்கள். அகழ்வாய்வில் கிடைத்துள்ள மிகப்பழைய செப்பு நாணயம் ஒன்றில் 'புதுசெரி' என்று பொறிக்கப்பட்டுள்ளது. பிரஞ்சுக்காரர்கள் இந்த மண்ணின் மக்கள்மொழியை மதித்துத் தாங்கள் வெளியிட்ட பணத்தாள்களில் தமிழில் புதுச்சேரி என்றே எழுதினார்கள். தமிழ் எண்களையே க (1), ரு (5) என்று போட்டார்கள். இப்பகுதியில் ஏற்றம் இறைப்பவர்கள் 'பூ முடியேன் பொண்ணே! புச்சேரிக்கிப் போவோம்!' என்றுதான் பாடினார்கள். இன்றும் நாட்டுப்புறத்து முதியவர்கள் இவ்வூரைப் 'பிச்சேரி' என்றே குறிப்பிடுகிறார்கள். இப்போது நம்மை ஆளவந்த நாட்டுப்பற்று மிக்கவர்களுக்கு இவை யாவும் தெரியா. பாண்டிச்சேரி என்ற பெயரின் 'பெருமையைக் காக்க' மட்டுமே தெரியும்! வெள்ளையனை விரட்டி 60 ஆண்டுகள் ஆன பின்னும், அவனை விரட்ட நடந்த விடுதலைப் போரில் ஈடுபட்ட ஈக மறவர்கள் கூட இன்னும் 'சார்' என்று ஆங்கிலத்தில்தான் ஒருவரை ஒருவர் அழைத்துக்கொள்கிறார்கள்! ஆங்கிலத்தில் ஒப்பமிட்டுத்தான் உதவிப்பணம் பெறுகிறார்கள்! பாண்டிச்சேரிக் கறையைக் கழுவிக்கொள்ள 30 ஆண்டுக்கு மேலாகப் புதுவைத் தமிழன்பர்கள் போராடிவந்திருக்கிறார்கள். புதுவைச் சட்டமன்றம் இரண்டு முறை (1980, 1996ஆம் ஆண்டுகளில்) புதுச்சேரி என்றழைக்கக் கோரும் தீர்மானங்களை எடுத்து நடுவண் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. யாரும் அதில் அக்கறை காட்டாத நிலையில் புதுவை நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் மு. இராமதாசர், உரிய வரலாற்றுச் சான்றுகளுடன் நாடாளுமன்றத்தில் பேசி, அரும்பாடுபட்டு 2006 நவம்பரில் 'பாண்டிச்சேரி என்ற பெயரை எல்லாவிடங்களிலும் நீக்கிப் புதுச்சேரி என்ற பெயரை எழுத வேண்டும்' என்று நடுவணரசு (குடியரசு தலைவரின் ஒப்புதலுடன்) ஒரு சட்டம் பிறப்பிக்கச் செய்தார். இதன் விளைவாகப் புதுச்சேரி அரசு அலுவலகங்களில் புதுச்சேரி என்ற பெயர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பேருந்துகளிலும், அண்டை மாநிலப் பேருந்துகளிலும் புதுச்சேரி என்று எழுதப்பட்டது. ஏற்கனவே தமிழன்பர்கள் கேட்டுக்கொண்டதால் புதுச்சேரி என்று பெயர் மாற்றம் செய்த பேருந்துகள் போக எஞ்சிய பேருந்துகளும் புதுச்சேரி என்று பெயரை மாற்றிக்கொண்டன. எல்லா இடங்களிலும் பாண்டிச்சேரித் தீநாற்றம் நீங்கிப் புதுச்சேரி நறு மணம் கமழ்ந்து வரும் நேரத்தில், ஆங்கிலேயனின் 'பவ்வீ' யையும் சந்தன மாகக்கொள்ளும் சில பன்றிகளுக்கு இந்தப் புதிய நறுமணம் பிடிக்க வில்லை. அவை புதுச்சேரிச் சட்டம் வந்து ஓராண்டுகூட ஆகாத நிலையில் அதை மீண்டும் பாண்டிச்சேரி ஆக்கி மகிழ்ந்திருக்கின்றன! இது பற்றி 25. 9. 07 தினத்தந்தியில் வந்த செய்தி: 'பாண்டிச்சேரி மாநிலத்தின் பெயர், கடந்த அக்டோபர் முதல் தேதி முதல் புதுச்சேரி என்று மாற்றம் செய்யப்பட்டது. இந்த மாநிலத்தின் பெருமை காக்கும் வண்ணம், புதுவைப் பிராந்தியப்பகுதிக்குப் பாண்டிச்சேரி என்ற பெயர் குறிப்பிடப்படவேண்டும் என்று எம்.எல்.ஏ. க்கள் வலியுறுத்திவந்தனர். இதைத் தொடர்ந்து புதுவை நகரப்பகுதி பாண்டிச்சேரி நகரம் என்று அழைக்கப்படும் என்று சட்டத்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்த மற்ற விவரங்கள் அரசாணையில் குறிப்பிடப் பட்டுள்ளன. இதற்கான உத்தரவினைச் சட்டத்துறைச் செயலாளர் சான் குளோது பொம்பி மரியதாசு பிறப்பித்துள்ளார்'. குயவர்கள் பலர் கூடி 30 ஆண்டுக்கும் மேலாக அழகிய பானை ஒன்றை வனைந்தார்கள். அதை ஒருவன் தடியால் ஒரு நொடியில் சுக்கு நூறாக உடைத்து நொறுக்கிவிட்டான்! அப்படியே நடுவணரசின் சட்டம் மாநிலத்துக்குத்தான் பொருந்தும், நகரத்திற்குப் பொருந்தாது என்று அரசு நினைத்தாலும், முன் இருந்தபடியே பாண்டிச்சேரி என்று அழைப்பதற்கு ஓர் ஆணை தேவையில்லையே! உண்மையிலேயே இந்த அரசு புதுச்சேரி என்ற பெயரை விரும்புவதாய் இருந்தால், அந்தச் சட்டம் நகரத்துக்கும் பொருந்தும்படி அதில் ஒரு திருத்தம் செய்யுங்கள் என்று நடுவணரசைக் கேட்டுக்கொள்ளலாமே? அல்லது நகரப் பெயரைப் பதுச்சேரி என்று மாற்றி ஆணை பிறப்பிக்கலாமே? அதை விட்டு. குப்பையில் வீசப்பட்ட பாண்டிச்சேரியைக் கொண்டுவந்து நடு வீட்டில் வைத்து வழிபடுவதற்குத் தமிழராகப் பிறந்தவர்கள் இடந்தருவார்களா? உண்மையிலேயே இந்த அரசு புதுச்சேரி என்ற பெயரை விரும்புவதாய் இருந்தால், அந்தச் சட்டம் நகரத்துக்கும் பொருந்தும்படி அதில் ஒரு திருத்தம் செய்யுங்கள் என்று நடுவணரசைக் கேட்டுக்கொள்ளலாமே? அல்லது நகரப் பெயரைப் பதுச்சேரி என்று மாற்றி ஆணை பிறப்பிக்கலாமே? அதை விட்டு. குப்பையில் வீசப்பட்ட பாண்டிச்சேரியைக் கொண்டுவந்து நடு வீட்டில் வைத்து வழிபடுவதற்குத் தமிழராகப் பிறந்தவர்கள் இடந்தருவார்களா? தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மகாராட்டிரம் என்பன மாநிலத்தின் பெயர்கள். அவற்றின் தலைநகர்களின் பெயர்கள் முறையே சென்னை, கொல்கத்தா, மும்பை என்று வேறாகத்தானே உள்ளன? அதுபோல் மாநிலத்தின் பெயர் புதுச்சேரி. தலைநகரின் பெயர் பாண்டிச்சேரி என்று தனியாக இருப்பது முறைதானே? என்று சிலர் கேட்கிறார்கள். அந்த மாநிலங்களின் பெயர்கள் அங்கே பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழி அடிப்படையில் அமைந்தவை. அதுபோல் இந்த ஒன்றியப்பகுதிக்கு எதன் அடிப்படையில் பெயர் வைக்கப்பட்டது? என்று கேட்டால், புதுச்சேரி என்ற ஊர்ப்பெயர் அடிப்படையில் என்ற விடை வந்தாலும், அதை வெளியே சொல்லமுடியாமல் விழிக்கிறார்கள்! புதுவை அரசே தமிழ் வழி வகுப்புகளை ஆங்கிலவழியாக மாற்றுவதற்கும், ஆங்கிலவழி மழலைப் பள்ளிகளைத் திறப்பதற்கும். தொடக்கப்பள்ளிகளை ஆங்கிலவழியாகத் தொடங்கிவருவதற்கும் காரணமாகக் கூறப்படும் இந்தச் ச. ம. உ. என்ற புண்ணியவான்களே, புதுச்சேரி மீண்டும் பாண்டிச்சேரி ஆனதற்கும் காரணம் என்கிறார்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் விரும்பியதால் இவ்வாணை செய்யப்பட்டது என்றுதானே நாளேடும் கூறுகிறது, அதை இதுவரையில் யாரும் மறுக்காததால் அதுதான் உண்மை என்றாகிறது. புதுச்சேரி அரசு 1997 இல், அரசு பணியாளர்கள், ஆட்சிமொழியாகிய தமிழில் ஒப்பமிடவேண்டும் என்று ஆணை பிறப்பித்தது. அதன்பின் ஓர் ஆசிரியர் தம் கையெழுத்தைத் தமிழில் போட்டுவந்தாராம். ஓர் ஆண்டுக்குப் பிறகு அவரே பழையபடி ஆங்கிலத்தில் ஒப்பமிடத் தொடங்கினாராம். ஏன்? என்று கேட்டதற்குத் "தமிழில் ஒப்பமிடுவது அசிங்கமாயிருக்கிறது" என்றாராம்! இத்தனைக்கும் அவர் ஒரு தமிழாசிரியராம்! இத்தகைய அறிவுக்குருடர்களாகவா இருப்பார்கள் புதுவைச் சட்டமன்ற உறுப்பினர்கள்? "வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்" என்று முழங்கிக் கட்டாயத் தமிழைக் கொண்டுவந்த கலைஞரின் தி.மு.க. வைச் சேர்ந்த உறுப்பினர்களா இதற்குக் காரணமாய் இருந்திருப்பார்கள்? தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ் இனத்தையும் காக்கும் பணியில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு உழைத்துவரும் மருத்துவர் அய்யாவின் பா.ம.க. வைச்சேர்ந்த-தில்லியில் அரும்பாடுபட்டுப் புதுச்சேரிப் பெயர்க்குச் சட்டம் செய்து கொண்டுவந்த பா.ம.க. வைச்சேர்ந்த-உறுப்பினர்களா இதற்குக் காரணமாய் இருந்திருப்பார்கள்? நம்பமுடியவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் பேரா. மு. இராமதாசர் இதுகுறித்து விடுத்த அறிக்கையில், "சட்டத்தில் பாண்டிச்சேரி என்ற பெயர் எங்கெங்கு வருகிறதோ அங்கெல்லாம் புதுச்சேரி என்று வரவேண்டும் என்று உள்ளது. இந்த நிலையில் நகரம் மட்டும் பாண்டிச்சேரி என்று அழைக்கப்படும் என்று ஆணை பிறப்பிப்பது சட்டத்தின் நோக்கத்தையே தோற்கடிப்பதுபோலவும், நாடாளுமன்றத்தின் செயலை மதிக்காததுபோலவும் உள்ளது. புதுவைச் சட்டமன்றத்தில் இரண்டு முறை தீர்மானம் செய்து, நாடாளுமன்றத்தில் சட்டம் செய்யப்பட்டது. அதில் மாற்றம் செய்யவேண்டும் என்றால் அதைப் புதுவைச் சட்டமன்றம்தான் செய்திருக்கவேண்டும். ஒரு வரலாற்றுப்பெயரை, ஒரு பண்பாட்டுப்பெயரைப் பாதுகாக்கும் வகையில் புதுவை அரசு வெளியிட்டுள்ள ஆணையைத் திரும்பப் பெறவேண்டும் என்று முதலமைச்சரைக் கேட்டுக்கொள்ளுகிறேன்" என்கிறார். (தமிழ் ஓசை, 3.10.07). அப்படி அந்த ஆணையை அரசு திரும்பப்பெற மறுத்தால் என்ன ஆகும்? * இனிமேல். அரசு விழாக்களில் 'நீ நைந்தாய் எனில் நைந்துபோகும் என் வாழ்வு' என்று பாடி உருகுவது ஊரை ஏமாற்றுவதாகக் கருதப்படும். * நடுவணரசின் சட்டப்படிப் பேருந்துகளில் இடம்பிடித்திருந்த புதுச்சேரியைக் கீழே தள்ளிவிட்டு அந்த இடத்தில் இனிப் பாண்டிச்சேரி ஏறி அமர்ந்து கொண்டு பல்லைக் காட்டும்! * இனிமேல் வெளியூரிலிருந்து வந்து போவோர். "பாண்டிச்சேரியில் உள்ள புதுச்சேரி முதலமைச்சரைப் பார்த்துவருகிறேன்" என்பார்கள். * தமிழறிஞர்களின் போராட்டத்தால் பாண்டிச்சேரியைப் புதுச்சேரி என்று மாற்றிக்கொண்ட தினத்தந்தி, மாலைமலர், தினமலர் முதலிய நாளேடுகளில் இனிப் புதுச்சேரி புறக்கணிக்கப்படும். பாண்டிச்சேரி பாராட்டுப் பெறும்! * ஐயோ, பாண்டி, பாண்டிச்சேரி என்ற அழகான பெயர்கள் போய்விட்டனவே! என்று வருந்திய மொழிப்பற்று இல்லாத கழிசடைகள் இந்த மாற்றத்தைக் கேட்டு மகிழ்ச்சியால் உள்ளே கிளுகிளுக்கும்! * புதுச்சேரிக்கு வந்துபோன பேருந்துகள் அனைத்தும் இனிப் பாண்டிச் சேரிக்குப் பயணம் செய்யும்! * ஊர் எல்லைகளிலும், சாலைகளிலும் பொதுப்பணித்துறை வைத்துள்ள பெயர்ப்பலகைகளில். இனிமேல் புதுச்சேரி அழிக்கப்பட்டுப் பாண்டிச்சேரி என்று எழுதப்படும். * புதுவைத் தமிழ்வளர்ச்சி நடவடிக்கைக்குழு. புதுவைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ் அமைப்புகள்கூட, தம் பெயர்ப்பலகைகளில், பாண்டிச்சேரித் தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழு, பாண்டிச்சேரித் தமிழ்ச்சங்கம் என்று எழுதாவிட்டால், சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்கலாம். அல்லது. அவை சட்டத்தை மதிக்கவில்லை என்று யாராவது பொதுநலவழக்குப் போடலாம்! * இனித் தமிழன்பர்கள், பெயர்ப்பலகையில் பாண்டிச்சேரி என்று எழுதி வைத்திருக்கும் கடைக்காரர்களிடம் போய், இதைப் புதுச்சேரி என்று மாற்றுங்கள் என்று சொன்னால், அரசு ஆணையை மீறத் தூண்டுகிறார்கள் என்று கடைக்காரர்கள் அவர்களைக் காவல்துறையிடம் பிடித்துக் கொடுக்கக் கூடும்! * ஏற்கெனவே தமிழன்பர்கள் கேட்டுக்கொண்டதை மதித்துப் பெயர்ப் பலகைகளில் புதுச்சேரி என்று எழுதிவைத்துள்ள கடைக்காரர்களிடம் போய், "புதுச்சேரி என்ற பெயரை மாற்றி மீண்டும் பாண்டிச்சேரி என்று எழுதாதீர்கள்" என்று கேட்டுக்கொண்டால், அவர்கள், உங்களுக்கெல்லாம் வேறு வேலை கிடையாதா? "போய்யா வெளியே!" என்று சீறி, காலில் கிடப்பதைக் கையில் எடுத்துக் கொண்டு விரட்டக்கூடும்! முடியரசர் போனபின்பு மூடரெல்லாம் கூடிக் என்ற வேதநாயகனார் பாடலைத்தான் பாடத்தோன்றுகிறது! - இரா. திருமுருகன். |