
|
இயற்கைப் புணர்ச்சிக்கு முற்பட்ட
கைக்கிளைக் கூற்றுக்கள் நூற்கடல் தி. வே. கோபாலையர் 5. காமப் பகுதி கடவுளும் வரையார் என்ற நூற்பாவால் குறிப்பிடப்படும் தெய்வமகளிர் மக்களையும், மக்கள் தெய்வ மகளிரையும், மகளிர் தெய்வங்களையும், தெய்வங்கள் மானுட மகளிரையும் நயக்கும் ஒருதலைக் காமம், சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்படும் புறத் திணைக் கைக்கிளையாம். இது பெரும்பாலும் கற்பனையாகவே முடிதலின் சிறப்புடைய கைக்கிளையாம். மானிடரிடையும் இத்தகைய பாடாண்பகுதிக் கைக்கிளைக் காமம் என்றும் கைக்கிளையாகவே அமைந்துவிடுதலும் உண்டு. சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி முக்காவ நாட்டு ஆமூர் மல்லனை அட்டு நின்றானைச் சாத்தந்தையார் மகளார் நக்கண்ணையார் கண்டு ஒரு தலைக் காமமுற்றுப் பாடிய 'என்னைக்கு ஊர் இஃது' என்று தொடங்கும் புறப்பாடல் பெண்பால் கூற்றுக் கைக்கிளையாய்ப் புறத்தில் வருகிறது. 6. புறத்திணையியல் 35ஆம் நூற்பாவில் வாயுறைவாழ்த்து. செவியறிவுறூஉ, இது முற்கூறப்பட்ட ஐவகைக் கைக்கிளை போலாது எஞ்ஞான்றும் பெண்பாலார் கூறுதல் இன்றி இடைநின்ற சான்றோராயினும் பிறராயினும் கூறுதற்கு உரித்தாய் முற்காலத்து ஒத்த அன்பினராகி இடைக்காலத்து ஒருவன் ஒருத்தியைத் துறந்ததனால் துறக்கப்பட்ட அத்தலைவி அவனிடத்து உள்ள வேட்கை குறையாது தவிக்கும் ஒருதலைக் காமமாய் அமைந்த கைக் கிளை. தொடக்கத்தில் தலைவியோடு ஐந்திணை இன்பம் துய்த்து இடையே அவளைத் துறந்திருத்தலின், அவள் மாத்திரம் அவனை நினைத்து வதியும் ஒருதலைக் காமமாயிற்று. வையாவிக் கோப்பெரும் பேகனைக் கண்ணகி காரணமாகச் சான்றோர் அணுகிக் கூறிய செய்திகள் அமைந்தபாடல்கள் இக்கைக்கிளையை உட்கொள்வன. இனி, புறப்பொருள் வெண்பாமாலையில் இறுதியில் கைக்கிளைப் படலத்தில் பெண்பால் கூற்றுக் கைக்கிளை என்ற பகுதி உள்ளது. அதன்கண் சுட்டி ஒருவர் பெயர் கூறப்படவில்லை. அது புறத்திணைக் கைக்கிளை என்று கூறுதற்குக் கருவி எதுவும் இன்று. இனி, கைக்கிளையில் ஐயம் தலைவனுக்கு மட்டும் ஏற்படுவது. காட்சி இருவருக்கும் பொதுவாதல்போல ஐயமும் தெளிதலும் குறிப்பறிதலும் இருவருக்கும் பொதுவாக ஏற்படுமா என்பன குறித்து நோக்குவோம். ஐயுறுவா ருக்கே தெளிவு தேவை. ஐயம் அறுத்தற்குரிய ஆற்றலுடையாருக்கே ஐயம் அகன்று தெளிவு ஏற்படும். அகப்பொருள் கிளவித்தலைவிக்குக் கல்வி அறிவு மிகவும் குறைவு. அனுபவத்தால் தோழிக்கு உண்டான அறிவு கூடத்தலைவிக்கு இல்லை. ஆதலின் உள்ளுறை உவமம் கூறும்போது. கிழவி சொல்லின் அவள்அறி கிளவி, எனத் தலைவி தான் கண்டு பழகிய அருகிலுள்ள பொருள்களைக் கொண்டே உள்ளுறை உவமம் கூறவேண்டும் எனவும், தோழி அந்நிலத்துள்ள பொருள்கள் எல்லாவற்றையும் அறிந்தவளாதலின் அந்நிலத்துள்ள கருப் பொருள் எதனையும் உள்ளுறை உவமத்துக்குக் கொள்ளலாம் எனப்பட்டது. தலைவன் தலைவி இவர்களிடை அமையவேண்டிய பத்துவகை ஒப்புக்களுள்ளும் கல்வி ஒன்றாகக் கொள்ளப்படவில்லை. ஆதலின் தலைவிக்குத் தலைவனைப்பற்றி ஐயம் ஏற்படின் அதனைப் போக்கிக்கொள்ளும் ஆற்றல் இன்மையால் காமக் குறிப்புக்கு மறுதலையாக அவளுக்கு அச்சக்குறிப்பே தோன்றும் என்ப. உயர் மொழிக்கு உரிய உறமுங் கிளவி
ஐயம் ஆண் மகனுக்கே உரியது. அகநானூறு 48 ஆம் பாடலில் (அன்னாய் வாழிவேண்டன்னை) பகல்மாய் அந்திப் படுசுடர் அமையத்து அவன் மறை தேஎம் நோக்கி மற்றிவன் மகனே தோழி என்றனள் - என்ற தொடர்களில் தலைவி ஐயுற்றுத் துணிந்தாள் என்று கூறுதல் தவறு என்பதனைப் பேராசிரியரே விளக்கிக் கூறியதாக நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார். இனி இலக்கியத்தில் காந்தருவதத்தை, பரவைநாச்சியார் முதலியவர் களுக்கும் சீதாப்பிராட்டியாருக்கும் ஐயம் ஏற்பட அவர்கள் ஐயம் தெளிந்தனர் என்று கூறுவது புலனெறி வழக்கத்தின் வேறுபட்ட உலகியல் செய்தியாதலின் தம் அறிவினால் ஐயம் அறுத்துக்கொள்ளத்தக்க ஆற்றலாராகியவர் அவர் என்று உலகியல் நிகழ்ச்சி கூறுதற்கண் தடையில்லை. ஆனால் புனைந்துரை வகையான் அமைந்த அகனைந்திணைக்குரிய கைக்கிளைப் பகுதியில் தலைவிக்கு ஐயம் ஏற்படுதலோ அவள் தெளிதலோ இல்லை. தலைவன் குறிப்பைத் தலைவி அறிதல் என்பது புலனெறி வழக்கிற்கு ஏற்றதன்று இனி, இயற்கைப்புணர்ச்சி முன் தலைவியால் மெய்ப்பாடுகள் நிகழுமே யன்றிக் கூற்றுக்கள் நிகழா. இதனை, காட்சி வேட்கை உள்ளுதல் மெலிதல் ஆக்கஞ் செப்பல் நாணுவரை இறத்தல் மறத்தல் மயக்கம் சாக்காடு என்ற ஐயீர் அவத்தையும் பெய்கழல் காளையும். புகுமுகம் புரிதல் முதலவாகிக் காட்சி முதன் மூன்றையும் கருதி நந்நான்காய் ஆட்சியின் அமைந்த ஈராறு மெய்ப்பாடும் முருந்துஇள முறுவலும் பொருந்துதல் உறினே, என்பதனானும் அறியலாம். (முற்றும்) |