
|
அன்பு இலதனை... - சிறுகதை
பொறிஞர் அகன் ஐயர், மாத்தூர் "அப்பா... இந்த வீட்டை ஒத்திக்கு விட்டுவிட்டு அத்தொகையைக் கொண்டு தான் அமெரிக்கா செல்ல வேண்டும்... நீங்க இரண்டு பேர் தானே.. ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்துக்கிட்டாப் போதுமில்ல..." என்றான். நிலா என்னை நோக்கினாள் பரிதவிப்போடு..! நான் எழுந்து அறைக்குள் சென்றேன். என்னைத் தொடர்ந்து வந்த நிலா, அறைக் கதவைத் தாளிட்டு என்னருகே வந்து என் கைகளைப் பற்றிக்கொண்டு விம்மினாள்! "என்னம்மா... எதற்கம்மா அழுகை... அமைதியாக இரும்மா..." "மகன் இருவரையும் க. ப. மு. (MCA) படிக்கவைத்தது தவறா...? கடன் உடன் பட்டுப் படிக்கவைத்து, மணக்கொடை மறுத்துத் திருமணம் செய்வித்து. ஆளுக்கொரு வீடு கட்டிக் கொடுத்து... துன்பப்பட்டு முன்னேற்றினோமே... கூட்டை விட்டுப் பறக்கிற பறவைங்க மாதிரி, அவனவன் வீட்டை ஒத்திக்கு வைத்துவிட்டு அமெரிக்காவுக்குப் பறக்கிறானுங்களே...! பெத்தவங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்னும் நினைப்பே இல்லையே... வாடகைக்கு வீடெடுத்துப்போகச் சொல்கிறானே...! ஒரே மகள்னு, சீர்வரிசை எல்லாம் சிறப்பாகச் செஞ்சு, வீடும் கட்டிக்கொடுத்து வாழவைத்தோமே... அவளாவது அப்பா-அம்மான்னு அன்பா இருக்காளா...? அடுத்த தெருவிலே இருக்கிறா.. மாதம் பொறந்தா நீங்க சம்பளம் வாங்கிட்டு வருகிற நாளாப்பார்த்து அவளும் வருவா.. ஏதாச்சும் சொல்லிப் பணம் பிடுங்கிட்டுப் போவா... இதுகளைக் கரையேத்த என்னபாடு பட்டிருப்போம்... நமக்குப் பிறந்ததுகள் இப்படியா இருக்கணும்..." என்று தேம்பினாள்! "அமைதியா இரும்மா.. நான் இருக்கேனில்லையா... உனக்கு ஒருகுறையும் வராம நான் பார்த்துக்கொள்வேன்" "வாடகை வீட்டுக்குப் போகச் சொல்கிறானே... அது தாங்க என் மனத்தை வாட்டுது" "நிலா... உன் பெயருக்கு ஓர் இடம் வாங்கி, ஒரு வீட்டைக் கட்டி மூன்றே மாதங்களுக்குள் குடிபோகிறோம்.. சரியா.. அமைதியாத் தூங்கும்மா..." என்று அரவணைத்து ஆற்றினேன். சற்று நேரத்தில் கண்ணயர்ந்தாள் என் நிலா. நானோ கொட்டக்கொட்ட விழித்தபடி விட்டத்தைப் பார்த்தவாறே வீட்டுத் திட்டம் வகுத்தேன்! மறுநாள் அலுவலகம் சென்று வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டவுடன், விருப்போய்வுக்கான விண்ணப்பத்தை உரிய முறையில் மேலதிகாரிகளுக்கு அனுப்பினேன். மூன்று நாள்கள் விடுப்பெடுத்துக்கொண்டு வீடு திரும்பிய நான், ஒரு வீட்டு மனையை என் நிலா பெயரில் பதிவு செய்தேன். 33ஆண்டுப் பணிநிறைவும் வேறெந்த விதச் சிக்கல்களும் இல்லாதிருந்ததும். என் விருப் போய்வுக்கு ஒரே மாதத்தில் அனுமதி கிடைக்கச்செய்தன. பொதுச் சேமநலத் தொகை பணிக்கொடை, விருப்பூதியம் எனத் தொகைகள் வரவர, வீடுகட்டும் பணிகளும் வளர்ந்து, இரண்டே மாதஙங்களில் புதிய வீடு முடிந்தது! நானும் என் நிலாவும் பல்லாண்டுகளுக்குப்பின் மீண்டும் தனிக்குடித்தனம் தொடங்கினோம்! இளையவனும் பறந்துவிட்டான் குடும்பத்தோடு! ஓய்வூதியம் ஏழாயிரம் தாராளமாக இருந்தது எங்கள் இருவருக்கும்! மூன்றாண்டுகள் மகிழ்வாக மனநிறைவாகப் புத்துணர்வு பூக்கப் புதியவாழ்வில் தோய்ந்தோம்! அவ்வாண்டுக் கோடையில். ஒரு மணவிழாவிற்காகச் சென்னைக்குச் சென்று திரும்பினோம். ஓரிரு நாள்களில் காய்ச்சலும், வயிற்று வலியும் என இன்னலுற்றாள் என் நிலா. மருத்துவமனையில் சேர்த்தேன். சிறுநீர்பாதைத் தொற்றுநோய் என்றனர், பின் சிறுநீரக நோய் என்றனர், பின் சிறுநீரகச் செயலிழப்பு என்றனர். பின் கருவி வழியே குருதித் தூய்மை (Dialysis) செய்தனர்..! இப்படியே மூன்று மாதங்கள் கழிந்தபின், சிறுநீரக மாற்று அறுவைப் பண்டுவம் செய்யச் சென்னைக்கு அனுப்பினர்! மூன்று மாதங்களாக என் நிலா பட்டபாடு பெரும்பாடாம்! நினைத்தாலே நெஞ்சம் நடுங்கும் கொடுந்துன்பு! மகளோ, மகன்களோ, மருமக்களோ எவரும் வரவில்லை..! தொலைபேசி வழியே ஆறுதலும், தேறுதலும், பூச்சுற்றும் பேச்சுகளும்! என் நிலாவுக்கு எல்லாமுமாக நானே உடனிருந்தேன். மாற்றுச் சிறுநீரகம் பொருத்தியும் பயனின்றி ஒருநாள் நள்ளிரவில் என் நிலா மறைந்தாள். என் வாழ்விலும் இருள் சூழ்ந்தது! என் நிலா இல்லாத இம்மூன்று மாதங்கள் எப்படியோ ஓடிவிட்டனவே! என் வரலாறு என நான் எழுதத் தொடங்கிவிட்டதனாலா...? அன்றி, இரவு தோறும் நான் அருந்தத் தொடங்கியுள்ள சீமைக்கள்ளின் மயக்கினாலா? அமைதி தோன்றிவரும் நிலையில், சொல்லெறிந்து நெஞ்சத்தில் நினைவலைகளைத் தோற்றிச் சென்று விட்டாளே மகள்! குளிர்ந்த நீரில் நீண்ட நேரம் குளித்ததால் ஒரு தெளிவு தோன்றியது. உடைமாற்றிக்கொண்டு கிளம்பினேன். "எனக்குப் பின், என் மனைவி பெயரிலுள்ள வீடும், என் கணக்கில் வைப் பகத்திலுள்ள பொன்னகைகளும். பணமும், திருச்சிராப்பள்ளி அன்னை தெரசா ஏதிலியர் இல்லத்திற்குச் சேரவேண்டும். என் உடலை சாதிமதச் சடங்குகள் ஏது மின்றி முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதனார் மருத்துவக்கல்லூரிக்குக் கொடுத்துவிட வேண்டும்" என்று ஓர் உயிலை எழுதிப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்தேன். அதன் ஒரு படியை, மருத்துவக் கல்லூரி யில் சேர்ப்பித்தேன். உணவகத்தில் உண்டேன். நிறைந்த மனத்தோடு வீடு திரும்பினேன். கதிரோனின் வெங்கதிரை முகில் மறைத்ததால் நிழல் ஆடியது! மழை வருமோ என்றறிய வானை நோக்கினேன் கதிரோனுக்கு எதிர்த் திசையில், வளரும் நிலா மங்கலாகத் தோன்றினாள். என் நிலா என்னை வாழ்த்து கின்றாளா? ஆம், அப்படித்தான் இருக்க வேண்டும்! ( முற்றும் ) |