அறிவியற் சொல் ஒலி வடிவங்கள்
இரா. செம்பியன் (தொடர்ச்சி)

அது வரிவடிவத்திலும் விரவித் தமிழ்மொழியின் தனித்தன்மையை மேய்ந்து வருகின்றது என்பது அனைவரும் அறிந்த செய்தியே. மேலே நாம் கூறியது போல் அவ்வயல்மொழிச் சொல்லொலிக் குப்பைகளை அகற்றும் பணியை விரைந்து செய்தாக வேண்டும். இல்லை எனில் தமிழென்ற ஓர் இனிமையான மொழி இருந்ததாகவோ, அதைத் தமிழர்கள் என்ற இனமக்கள் பேசிவந்த தாகவோ, தமிழகம் என்ழைக்கப்படும் இப்படியொரு நிலப்பகுதி இருந்த தாகவோ, வருங்கால வரலாற்றில்கூட இடம் பெறாமலே போகலாம் என்ற ஓர் இழிநிலையை எண்ணி வருந்தாத தமிழறிஞர்களே இருக்கமுடியாது. இதற்குப் பின்னுமோர் எடுத்துக்காட்டு, சொல்லாய்வுச்சுடரான மொழி ஞாயிறு பாவாணரின் கருத்தை நம் இலக்கணச்சுடர் முனைவர் இரா. திருமுருகன் அவர்கள் தமது கற்புவழிபாடு என்ற நூலில் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

‘பிறமொழிச் சொற்களையும் எழுத்துகளையும் தமிழிற்புகுத்தின் தமிழ் நாளடைவில் வேறொரு மொழியாக மாறிவிடும். அதன்பின் அதைத்தமிழ் என வழங்குவது அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிப்பது போன்றதே.’ பார்த்தீர்களா, மொழிப்புலத்தில் துறைமுற்றிய மூதறிஞர் சீர்கெட்டு வரும் வரிவடிவங்களின் நிலை குறித்துச் சிந்தித்துச் செப்பிய செய்திக் குறிப்பல்லவா மேற்போந்தவை? நமது தமிழ்மொழியின் பேச்சுவழக்கில் இரண்டறக் கலந்துவிட்ட ஆங்கில, சமற்கிருத ஒலி வடிவங்களை இனி என்ன செய்தாலும் பிரிக்கமுடியாது என்பது தமிழ்மொழியின் இன்றைய நிலையாகும். எனவே வரிவடிவத்திலும் இவற்றை நுழையவிடுவது வரலாற்று இழுக்காகும். எனவே இவ்வயல்மொழிச்சொல் மற்றும் எழுத்து வடிவங்களைத் தமிழின் வரிவடிவத்திற்குள் நுழையாமல் தடுக்கவேண்டியது நம்முன் இப்பொழு துள்ள தலையாய பணியாகும். இதைப் பல்வேறு காலக் கட்டங்களில் வாழ்ந்த அறிஞர்கள் பலரும் வலியுறுத்தி வந்திருக்கின்றார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் இவற்றைத் தமிழின் வரிவடிவத்திற்குள் நுழையா மல் தடுக்கவல்ல கருவியைக் கண்டுபிடித்தாக வேண்டும் என்ற கட்டாய நிலையும் ஏற்படுகின்றது. இன்றைய வளர்ந்துவரும் அறிவியல் வரிவடிவங் களில் அயல்மொழிச் சொற்களும் எழுத்துக்களும் புகுந்து தமிழே காணாமல் போய்விடும் நிலை ஏற்படும் என்பதை எச்சரிப்பதற்காகவே அறிஞர் பரிதிமாற் கலைஞரவர்கள் பின் வருமாறு கூறுகின்றார்.

'அப்பொல்லாத வடசொற்கள் தமிழின்கண் வராதவாறு பாதுகாத்தல் வேண்டும்' (த.மொ.வ. பக்கம் 10)

பைந்தமிழ்மொழித்துறையில் பழம் தின்று கொட்டை போட்டவரான பன்மொழிப் புலவர் க. அப்பாத்துரையாரின் கருத்தும் இங்கு நோக்கத்தக்கது.

‘உரோமன் முறையில் இல்லாத ஒலிகளுக்குக் குறியீடுகள் சேர்த்துப் புதுஒலிகளைக் குறிக்கக் கூடுமாயின், தமிழ் அரிச்சுவடியிலில்லாத புது ஒலிகளுக்கு அங்ஙனம் செய்ய முடியும் என்பது தெளிவே.’ (வளரும் தமிழ், பிறமொழி ஒலிகள், பக்கம் 71 )

சிந்துவெளி ஆய்வறிஞர் பேராசிரியர் இரா. மதிவாணன் அவர்களின் கருத்து (எழுபானாண்டு மலர், ஊடகங்கள் பகுதியிலிருந்து)

‘ஒருமொழி சொற்களைக் கடன் வாங்கிக் கொள்ளலாம், ஆனால் எழுத்துக் களைக் கடன்வாங்கக் கூடாது’ (தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் அவர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி)

இப்படியாகத்தானே தமிழறிஞர்கள் எல்லோரும் ஒரே குரலில் பிறமொழி எழுத்துக்கள் தமிழ் மொழியின் வரி வடிவத்திற்குள் நுழையவிடக்கூடாது என்றே அன்று முதல் இன்று வரை எதிர்த்து வந்துகொண்டிருக்கின்றார்கள், இதுகுறித்து இவர்களுக்குள் மாறுபட்ட கருத்தே கிடையாது என்பதைக் காலந்தோறும் தெளிவுபடுத்தி வந்திருக்கின்றார்கள் என்பதையும் மேலே கண்டோம். ஒருமொழி தனித்தியங்கும் தன்மையது என்றால் அது பிற மொழி எழுத்துக்களைக் கடன் பெற்றுத்தான் எழுத வேண்டும் என்ற நிலை இருக்கக் கூடாது. இதுதான் நம் மொழியறிஞர்களின் மொழிக்கொள்கை என்பதைத் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்திவிட்டார்கள். இதற்கு என்ன செய்யலாம்? என்பதைப் பின்வரும் நூற்பாவை முன்வைத்துச் சிந்திப்போம்.

பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே

மாந்த இனத்திற்கு நன்மை பயக்கக் கூடிய கண்டுபிடிப்புகள் உலகின் எந்த மூலையில் எந்த மொழி மக்களால் நிகழ்த்தப்பட்டாலும் அதனால் ஏற்படக்கூடிய பயன்கள் அங்கேயே முடங்கி விடாமல் அவையனைத்துலக மக்களையும் சென்றடைய மொழி ஒரு சிறந்த கருவியாகப் பயன்படுகின்றது. அதைச் சரியாகப் பயன்படுத்துவோமானால் அறிவியல் செய்திப் பரவலிலுள்ள தேக்கநிலை நீங்கிச் செய்திகள் மக்களை உடனுக்குடன் சென்றடைந்து விடும். எந்த மொழியில் எந்தத் துறை சார்ந்த அறிவியல் சொல்லாக இருந் தாலும் அதன் ஒலிவண்ணம் சிதையாமல் உலக மொழிகளைச் சென்றடைய வேண்டும். அப்பொழுதுதான் கண்டுபிடித்த மக்களைச் சிறப்பித்ததாகப் பொருள்படும். கண்டு பிடிப்பாளர்களுக்கு ஊக்கமும் ஏற்படும். அதை விடுத்துத் தாய்மொழி மீது தங்களுக்குள்ள இயம்பிடற்கரிய பற்றின் காரண மாகச் சிலர் இரும்புப்பிடியாகப் பிடித்துக்கொண்டு என் மொழியில் என்னால் எழுதமுடியும் என்று தமது மொழியில் இல்லாத ஒரு ஒலியை நிரப்ப முனைவதால் அச்சொல் வேறு பொருளைக் குறிக்கும் சொல்லாக மாறிவிடு கின்றது. அது, அறிவியலில் குழப்பத்தை விளைவித்து விடுமாகை யால் அதை யாரும் விரும்பமாட்டார்கள். ஏனென்றால், ஒவ்வோர் அறிவியல் சொல்லுக்கும் பின்னால் ஒரு வரலாறு உண்டு. காட்டாக, RAMAN EFFECT என்ற சொல்லை ROMAN EFFECT என்றிப்படித்தான் என் மொழியில் நான் எழுதுவேன் என்றொரு மொழிக்காரர் எழுதுவாராயின் அச்சொல்லின் பொருளும் வரலாறும் திரிந்துபோகின்றன அல்லவா? இந்தச் செய்தியில் கண்டுபிடிப்போடு கண்டுபிடிப்பாளரும் காணாமல் போகின்றார்.

(தொடரும்)