
|
நூல் நிறை
தமிழில் வெண்பா இலக்கியங்கள் : ஆசிரியர் முனைவர் அ. ஆறுமுகம், வெளியீடு மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு சிதம்பரம், பக்கம் : 112, விலை உரு : 35/-
இது தமிழிலக்கியங்களில் காணப்படும் வெண்பாக்களையும், வெண்பா நூல்களையும் தொகுத்தளிக்கும் நூல். இதில் முதலில் வெண்பா வகைகளை விளக்கியுள்ளார். பின்பு குறட்பா நூல்கள், சிந்தியல் வெண்பா நூல்கள், இன்னிசை வெண்பாக்கள், பஃறொடை வெண்பாக்கள், தனிப்பஃறொடை வெண்பா நூல்கள் ஆகியவற்றையும் கலிவெண்பாவாலான 22 உலா, 35 தூது நூல்களையும், வெண்பாவந்தாதிகளையும் வரிசைப்படுத்தியுள்ளார். வெண்பாப் பெயர்கொண்ட நூல்களையும், பத்துப்பாட்டில், சிலம்பில் உள்ள வெண்பாக்களையும் முத்தொள்ளாயிரம் முதல் மணிமேகலை வெண்பாவரை உள்ள நூல்களையும், நூலாசிரியர் அ. ஆறுமுகம், பேரா. ம. இலெ. தங்கப்பா, பாவலர் வைரமுத்து முதலானோர் வெண்பாக்களையும் வெளிப்படுத்தியுள்ளார். வெண்பாவை வளர்க்கும் இதழ்களையும் தெளிதமிழ், நற்றமிழ் இதழ்கள் விருத்தப்பா, சந்தப்பாக்களை வளர்ப்பதையும் உணர்த்தியுள்ளார். வெண்பா இலக்கியங்களை அறிய விரும்புவார்க்கும் ஆய்வாளர்க்கும் உதவும் கையேடு இந்நூல் என்பதில் ஐயமில்லை.
தமிழக ஆறுகளில் மணல்கொள்ளை : முனைவர் பழ. கோமதிநாயகம், தமிழ்க்குலம் 33, நரசிம்மபுரம், மயிலை, சென்னை - 600 004. பக்கங்கள்- 80, விலை உருபா 45/-
தமிழ்நாட்டின் ஆறுகளில் மணல் வளத்தைப் பாதுகாக்கப் போடப்பட்ட சட்டங்கள் பற்றியும், அச்சட்டங்கள் வளைக்கப்பட்டு, மணற்கொள்ளை விறுவிறுப்பாக நடைபெறுவது பற்றியும் அதன் விளைவுகளையும், தீர்வுகளையும் தெளிவாகவும், எளிமையாகவும் விளக்கிக்கூறும் அரிய நூல். தமிழகத்தின் மிகச் சிறந்த நீரியல் அறிஞரும், நீரியல் தொடர்பான துறைகளின் பொறுப்புகளி லிருந்து பட்டறிவு பெற்றுப் பல நூல்களையும், கட்டுரைகளையும் தந்திருப்பவருமான முனைவர் பழ. கோமதிநாயகம் அவர்கள் எழுதியுள்ள நூல் இது. மணல் அள்ளக் கேரள அரசு தடை செய்துள்ளதால், தமிழக மணலை அங்குக் கொண்டு சென்று அதிக விலைக்கு விற்றுக் கட்சிகளும் அதிகாரிகளும் குண்டர்களின் துணையுடன் நடத்துகின்ற மணற்கொள்ளை பற்றி இந்நூல் விவரிக்கின்றது. எதிர்ப்புத் தெரிவிப்போரைக் கொலை செய்யவும் அஞ்சாத இக்கூட்டம் வரன்முறையின்றி மணலை அள்ளுவதால், சுற்றுச்சூழல் சீர்கேடு, விளை நிலங்கள் களர்நிலங்களாவது வேளாண் தொழிலழிந்து மக்களின் வாழ்வுரிமை பறிபோவது பாசனக் கட்டுமானங்களும், பாலங்களும் உடைவது, நிலத்தடி நீர் குறைவது, கிடைக்கின்ற குடிநீரும் மாசுபட்டிருப்பது போன்ற பல்வேறு கேடுகள் விளைகின்றன. ஆங்கில அரசு செய்திருந்த சட்டப் பாதுகாப்பு, வழக்குமன்றத் தீர்ப்புகள், பொது உசாவல் முடிவுகள், பல்வேறு குழுக்களின் கருத்துரைகள் போன்ற மூலச்சான்றுகள் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன. மணற்கொள்ளைக்காரர்களுக்கு ஆதரவான நிலையைத் தமிழக அரசே மேற்கொண்டிருக்கும் தவறான நிலைப்பாட்டை எடுத்துக் கூறி எச்சரிக்கும் இந்நூல் எல்லோர் கையிலும் இருக்க வேண்டிய கருவியாகும்.
|