வினாதலும் விடுத்தலும்

1. மாநாடு என்பது தமிழ்ச் சொல்லா? இலக்கியத்தில் வழங்கப்பட்டுள்ளதா?

2. ஆசான் என்பதும் ஆசிரியன் என்பதும் ஒரு பொருளவாயின், ஆசான் என்பதற்குப் பலர்பாலாக ஆசார் எனலாமா? ஆசான்மார் என்பது பலர்பாலைக் குறிக்கிறது. அது உயர்வுப் பன்மையாகும்போது அதன் வடிவம்யாது?

3. பொருப்பு - இதற்கு நான் பொருப்பேற்கிறேன், இன்று பொருப்பேற்கிறேன் போன்ற இடங்களில் Custody / Charge என்ற பொருள்களில் வழங்குவதுதாகவும், பொறுத்தல் என்ற பொருளிலும் வழங்குவதாகவும் நினைக்கிறேன். பொருப்பு என்பது மலையைத் தவிர்த்து வேறு பொருளில் வழங்குவதாகவோ, பொறுப்பு என்பது Charge / Custody என்ற பொருளில் வழங்குவதாகவோ இலக்கியச்சான்று உண்டா?
- சிலம்பூர்க்கிழான்

1. பெரிய என்று பொருள் தரும் 'மகா' என்பது வடசொல் அது 'மா' எனவும் மருவி வழங்குகிறது. எனவே மகாநாடு, மாநாடு - என்பவற்றில் நாடு மட்டுமே தமிழ்ச்சொல். இதன் பொருள் : நாட்டு மக்களின் பெருங்கூட்டம். இதற்குப் பழைய இலக்கிய வழக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

2. ஆசான் என்பதற்குப் பலர்பாலாக ஆசான்மார் என்ற சொல் இருக்கும்போது, ஆசார் என்ற மற்றுமொரு சொல்லைப் பற்றிய கவலை ஏன்? பெண்பாலுக்காவது ஆசாள் என்ற வழக்கு உண்டு. பலர்பாலுக்கு ஆசார் என்ற ஆட்சி இருப்பதாகத் தெரியவில்லை. மார் விகுதி பலர்பாலுக்குரியது. அது உயர்வுப்பன்மையில் வாராது. தோழியர் என்றாலும், தோழிமார் என்றாலும் பலர்பாலே, எல்லாச் சொல்லுக்கும் ஆண்பால், பெண்பால், ஆண்பால் பன்மை, பெண்பால், பன்மை, இருபாற்பன்மை, உயர்வுப் பன்மை என்ற எல்லாவகையும் இருக்கும் என்று சொல்ல முடியாது. மகன் - ஆண்பால் ஒருமை, மகள் - பெண்பால் ஒருமை. மக்கள் - இருபாற்பன்மை. மகனார் ஆண்பால் உயர்வுப்பன்மை. மகளார்- பெண்பால் உயர்வுப் பன்மை. இவ்வளவு இருந்தும், ஆண்பாற் பன்மையைத் தெளிவாக உணர்த்தும் Sons என்ற சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் இல்லை. அதனால் 'மகன்கள்' என்ற சொல்லை உருவாக்க வேண்டியிருக்கிறது. அதனால் தான் தொல்காப்பியர் கடிசொல் இல்லைக் காலத்துப் படினே' (எச்ச. 56 என்று சொல்லிவைத்திருக்கிறார். அதனால் ஆசான் என்பதற்குப் பலர்பாலாக ஆசான்கள் என்று ஆண்டாலும் கடியப்படாது. ஆசானை உயர்வுப் பன்மையில் 'ஆசான் அவர்கள்' எனலாம்.

3. 'பொறுப்பு' என்பது பொறுத்தல் என்ற பொருளுடன் தன் கடனாக ஏற்றுக்கொள்ளுதல் (responsibility) என்ற பொருளையும் தரும். இதற்குப் பழைய இலக்கிய வழக்கு இருப்பதாகத் தெரியவில்லை. பொருப்பு என்பதற்கு இப்பொருள்கள் இல்லை. எனவே இதற்கு நான் பொருப்பேற்கிறேன் என்பது பிழை. பொருப்பு - மலை என்ற பொருளையே தரும்.- இரா.தி.

சென்ற இதழ் 'வினாதலும் விடுத்தலும்' பகுதியில் கிருட்டினமூர்த்தி, கிருட்டிணமூர்த்தி என்று இருவகையாகவும் எழுதலாம் என்று கூறியுள்ளீர்கள். க்ருஷ்ண - க்ருட்ண - கிருட்டிண என்றுதானே வரவேண்டும்? சமற்கிருதத்தில் "ன' கிடையாதே. நினைவு கூர்கிறோம் பகுதியில் பா.வே. மாணிக்கனார் மறைந்தநாள் குறிப்பில் ஆண்டு விடுபட்டுள்ளது. 25.04.1931 தான் அவரது மறைவுநாள்.
- முனைவர் தஞ்சை இறையரசன், சென்னை - 56.

நினைவு நாளைச் சரியாகத் தந்தமைக்கு நன்றி. சமற்கிருத ஒலிகளைத் தமிழில் அப்படியே வழங்க வேண்டுமென்பதில்லை. அதனால்தான் சிநேகம், அநுபவம் என்பவற்றைச் சினேகம், அனுபவம் என்று எழுதுகிறோம். க்ருஷ்ண என்பது தமிழில் கிருட்டிண, கிருட்டின என்ற இருவடிவிலும் வழங்குகின்றது. நான் இருசுழி னகரத்தையே பயன்படுத்துகிறேன். (கிருட்டின பக்கம் - அரும்பதஉரையாசிரியர், சிலம்பு 23-133) கிருட்டினாசினம்; நச்சினார்க்கினியர், திருமுருகாற்றுப்படை-128 என்பன இலக்கிய வழக்குகள்) எனினும் முச்சுழி ணகரவழக்கும் மிகுதியாகவே உள்ளது. - இரா.தி.