
|
தமிழ் வளர்க்கும் தாளாண்மைகள்
நாளிதழ் நடவடிக்கைகள்: சென்ற இதழில் குறித்தபடி அறக்கட்டளைக்கு வந்த நன்கொடைத் தொகை
இணையத் திங்களிதழ் 'தமிழ்க்காவல்' என்ற பெயரில் உருவாகிவருகிறது. ஒவ்வொரு தமிழ்த்திங்கள் முதல் நாளிலும் பார்க்கக் கூடியதாக வெளியாகும். வரும் ஆடவைத்திங்கள் முதல் நாள் 15-06-2008 அன்று முதல் இதழ் வெளியாகும். அதன் இணைய முகவரி : www.thamizhkkaaval.net என்பது. வழக்கப்படி நன்கொடைகளைத் 'தமிழ் வeர்ச்சி அறக்கட்டளை' என்ற பெயருக்குப் பணவிடையாகவோ கேட்புக் காசோலையாகவோ திரு தி.ப.சாந்தசீலன், பொருளர், 22, உடையார் தெரு, பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி - 605 008 என்ற முகவரிக்கு அனுப்புக. புதுச்சேரி இலக்கியப்பொழில் இலக்கிய மன்றத்தின் 25ஆம் நிகழ்வு : 25-04-2008 அன்று புதுச்சேரி, இலக்கியப் பொழில் இலக்கிய மன்றத்தின் சார்பில் நடந்த நூல் வெளியீட்டு விழா, சிவனடியார் ஆறுமுக சாமிக்குப் பாராட்டுவிழா ஆகியவற்றை முனைவர் இரா.திருமுருகனார் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடித் தொடக்கிவைத்தார். தொழில் முனைவர் பெ.பராங்குசம் வரவேற்புரையாற்ற, முனைவர் ஆ.சுசித்திரா எழுதிய புதுச்சேரி வரலாற்று நாயகர் சவராயலு எனும் நூலைத் திருச்சிற்றம்பலச் சிவனடியார் ஆறுமுகசாமி வெளியிட, புதுச்சேரி நகரமன்றத் துணைத்தலைவர் அ.சான்குமார் முதல் நூலைப் பெற்றுக்காண்டார். இமாகுலேட் தலைமைப் பொதுச்செயலர் முனைவர் அருட்சகோதரி பிலமின்மேரி வாழ்த்துரையும் கலைமாமணி புலவர் பூங்கொடி பராங்குசம் நூலாய்வுரையும், ஆ.சுசித்திரா ஏற்புரையும் ஆற்றினர். இதை யடுத்து, தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழில் பாடிப் புரட்சி செய்த சிவனடியார் ஆறுமுகசாமிக்குப் பாராட்டுவிழா, தீந்தமிழ்க் காவலர் முனைவர் இரா.திருமுருகனார் தலைமையில் நடைபெற்றது. சிவனடியார் பற்றிய அறிமுகவுரையைப் பேரா.முனைவர் இராச.குழந்தைவேலனாரும், தில்லையில் நடந்த போராட்டம் பற்றிய விளக்கவுரையை வழக்குரைஞர்கள் இராசும், தி.சி.திருமார்பனும் ஆற்றியபின் ஆறுமுகசாமி சிறப்புரையும், ஆசிரியை தேவகி ஆனந்து நன்றியுரையும், பாவலர் அரங்க.விசயரங்கம் தொகுப்புரையும் ஆற்றினர். விழாவில் சிவனடியார் ஆறுமுக சாமிக்குத் 'திருச்சிற்றம்பலத் திருத் தமிழ்த்தொண்டர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.
|
||||||||||||||||