சொல்வாய் நீ தமிழன் என்றே உன்னை
இரா. செம்பியன்

சொல்லாதே தமிழன் என்றே உன்னை - இங்கு
வல்லாண்மை செலுத்தும் வடவருக்கே
வால்பிடிக்கும் நிலையில் நீ இருக்கும் வரையில்
(சொல்லாதே)

பொல்லாத இனப்பகை பின்னாலே நீ
போகாதே நமக்கது ஆகாதே
தள்ளாதே உனது தாய்மொழியைத்
தமிழன் என்பதுன் முகவரியே
நல்லாட்சி என்று நல்லோர்கள் போற்ற
இல்லாத நிலைமை இங்கிருக்கும் வரைநீ. (சொல்லாதே)

பூட்டையுடைத்து உள்ளே நுழைந்த
பூரிய ரைப்போலே இந்த
நாட்டை யொருகா லாண்டி ருந்தாலும்
நம்மவர் அவராமோ அந்த
வேற்றினத் தவரின் பெயர்களைச் சூட்ட
வேண்டா மினிமேலும் இந்த
நாட்டின் நகரின் பெயர்களை எல்லாம்
சூட்டும் நாள்வரை நம்மொழியில். (சொல்லாதே)

பம்பாயி மும்பை யானதால்-அதன்
பழம்பெருமை குன்றிப் போனதா ?
மதராசு சென்னை யானதால்-அதன்
மரியாதை குறைந்து போனதா ?
பாண்டி புதுச்சேரி யானதால்-அதன்
பண்பாட்டுப் பெருமைப் போனதா ? - இங்கே
இதுபோல் எண்ணற்ற மேற்கோள்கள் - இன்னும்
எடுத்துச் சொல்லவா? போதுமா ? (சொல்லாதே)

வரலாற்றில் நின்று வழிகாட்டும் பேரை
மறக்காமல் சூட்டி மரியாதைக் காட்டிச்
சொல்வாய்நீ தமிழன் என்றே உன்னை (சொல்லாதே)