
|
சங்கத்தமிழ் காக்கச் சாட்டையை எடு! வணிகத்தின் மொழியாக ஆங்கிலம், தூதின் மொழியாகப் பிரெஞ்சு, தத்துவத்துக்குச் செருமனி, காதலுக்கு இத்தாலி, பக்தி மொழியாகத் தமிழ் என்பார்கள்-ஆனால் தில்லையில் தீட்சிதர்களால் தீட்டுப்பட்டுக்கிடக்கிறதே நம் தீந்தமிழ்! நயாகரா நீர்வீழ்ச்சியில் ‘நல்வரவு’ என்று முத்தான தமிழால் முகப்பில் எழுதப்பட்டள்ளதாம்! உயர்ந்த மொழி எனக்குறிக்க உயரமான இடத்தில் பதிக்கப்பட்டுள்ளதா? சப்பானியப் பல்கலை வாயிலில், புறநானூற்று “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வைரவரிகளின் மொழியாக்கம், வரையப்பட்டுள்ளதாம்! எருசலேமில் ஒலிவமலை; அதன் மேலே ஒரு கிறித்துவக் கோவில்; அதில் 68 மொழிகளில் விவிலியக் கருத்துக்கள்! அவற்றில் ஒரு மொழி நம் அன்னைத் தமிழாமே! புல்லரிக்கவில்லையா உங்கட்கு! போதிமரத்துப் புத்தன் தமிழ்படித்தானாமே! “இலலித வித்தாரம்” என்ற நூல் பேசுகிறது இப்படி! “குறள் படிக்கக் கொடுத்துவைக்கவில்லையே” எனக் காந்தி கூடக் கவலைப்பட்டாராமே! கேள்விப்பட்டீர்களா? எழுதுங்கள் என் கல்லறையில் “நான் ஒரு தமிழ் மாணக்கன்” என்று! எனப் போப் அவர்களையே புலம்ப வைத்த மொழியாமே நம் தமிழ்! பின்லேடன் புகழ் பெண்டகன்-6000 அறிவியலறிஞர்கள் அமர்ந்து பணியாற்றும் படைத் தலைமையகத்தின் நுழைவாயிலில் “கற்றது கைம்மண்ணளவு” - ஒளைவையார், தமிழ் நாடு, இந்தியா என ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாமே! தரங்கம் பாடியில் தமிழில் அச்சுக்கூடம் கண்டவர் சீகன்பால்கு -ஒரு செருமானியர். ஒப்பிலக்கணம் தந்த ஒப்பற்ற அறிஞர் கால்டுவெல் உள் நாட்டுக்காரரல்லர்; 'ஐரிசு' நாட்டுக்காரர். உரைநடைத்தமிழுக்கு வித்திட்ட வீரமாமுனிவர் “இத்தாலி” நாட்டுக்காரர்! தங்கத் தமிழ் நாட்டில் தமிழின் நிலை இன்று என்ன? ஊடகங்கள் மீது ஒர் அதிரடித் தாக்குதல் நடத்தாவிட்டால் ஆடை கட்டாதவர் நகரத்தில் கோவணம் கட்டிய குற்றத்துக்காகத் “தமிழோசையும், மக்கள் தொலைக்காட்சியும்” கூடத் தண்டிக்கப்படக்கூடும்! பொங்கி எழுந்து போரிடாவிட்டால் போலித் தமிழ் ஆட்சியாளர்களால் பொங்குதமிழ் அறக்கட்டளை கேலி செய்யப்படும் நிலை ஏற்படக்கூடும்! எனவே அய்யா காலத்திலிங்கு உணர்வு கொள்வோம்! ஒன்றுபடுவோம்! சங்கத் தமிழ்காக்க சாட்டையைச் சுழற்றட்டும் ஆட்சியாளர்கள்! |