ஒல்லுங்கொல் சொல்லுங்க ளுரிமைப் போரை
ஒடுக்கியவ ருண்டாஇவ் வுலகில் யாரும்
நில்லுங்கள் கொல்லாதீர் தமிழி னத்தை
நிறுத்துங்கள் சண்டையினை என்பா ரில்லை
வெல்லுங்கொல் அறவினையைப் பிறவி னைகள்
விளையுங்கொல் வன்னிலத்தில் செந்நெ லோங்கிச்
செல்லுங்கள் நல்வழியில் இலங்கைத் தீவே
சீரழிந்து போகவழி கோலா தீர்கள்
தினமங்கே தமிழினத்தைக் கொன்ற ழிக்கும்
சிறிலங்கா அரசினர்க்கோ ரெச்ச ரிக்கை
பிணக்குற்ற இருதரப்பார் தொடரும் போரால்
பிணக்குவிய லன்றிவேறங் கென்ன மிஞ்சும்?
இனவாத நிலைப்பாட்டைத் தொடரு முங்கள்
இழிசெயலால் வரும்பழியு மெதிரி யாகும்
குணக்கேடர் அரசுரிமை பெற்ற நாடே
கொலைவிலங்கு திரிகின்ற கொடுங்கா டாகும்
விடமாட்டோம் ஒருவரையும் உயிரோ டென்று
வேட்டையாடு கின்றார்க ளீழ நாட்டைப்
படமெடுத்தே ஆடுகின்ற கொடும்பாம் பிற்குப்
படைக்கலன்க யளன்கின்ற பால்வார்க் கின்றார்
அடடாஇக் கொடுமையினைத் தட்டிக் கேட்க
ஆளில்லை பாரிந்த உலகி லின்று!
கெடுப்பானைக் கேடோடிச் சூழு மென்று
கிளத்துகின்ற பழமொழியும் பொய்யே தானா?
உள்நாட்டுக் காப்பென்ற பேரி லூரை
உண்மையிலே ஏமாற்று கின்றா ரென்று
சொல்லத்தான் வேண்டுங்கொல் விளக்க மாக?
தெரியாதா? உலகத்தி லொருவ ருக்கும்
நல்லநெஞ்ச முள்ளோரே சிந்திப் பீரே
நம்மினத்தைக் கொல்கின்றா ரீழ நாட்டில்
நில்லுங்கள் தமிழரெலாம் திரண்டு வந்து
நிறுத்துங்கள் போரைஎனக் குரல்கொ டுப்போம்!
-இரா. செம்பியன்
தமிழ் விழிப்புணர்வுப் பாடல் வெளியீட்டுக் குழுமம்
மேட்டுப்பாளையம் சாலை, கொங்கம்பட்டு,
விழுப்புரம் மாவட்டம்-605105. பேசி 2699485