உரூபா 500 பரிசு பெறும் பாடல் :
1.உண்ணும் உணவும் உடுப்பனவும் உறைதற் கான சிறுமனையும்
விண்ணைத் தொட்டு மேலெழும்பும் விலையேற் றத்தைக் கண்டனவே
மண்ணில் வெப்பம் மிகுந்ததுவே வாழும் நாள்கள் குறைந்தனவே
எண்ணிப் பார்த்தே விழித்தெழுதல் இன்றெல் லார்க்கும் முதல்கடனே!
- இள. தமிழொளி, பொறையாறு.
வெளியீட்டுக்குத் தேர்வு பெற்ற பாடல்கள் (வரிசைப்படி) :
1.காற்றைக் கையால் தடுப்பதுபோல் கருநா டகத்தான் நம்பொன்னி
ஆற்றைக் குறுக்கே அடைக்கின்றான் ஆன்ற தமிழர் ஈழமதில்
கூற்றை நிகர்த்த சிங்களரால் கொன்று குவிக்கப் படுகின்றார்!
சோற்றைத் தின்று சொரணையின்றித் தூங்கு கின்றோம் பயனென்ன?
- வேங்கடேசபாரதி
3.ஒளிசெய் தெழுவான் கதிர்கண்டே ஒண்தா மரைமா மலர்பூக்கும்!
அளிவந் தமர்ந்து நறவுண்ணும்! அணிநீ ரலையில் மீன்துள்ளும்!
களிதந் துலவும் இளந்தென்றல்! கலைதேர் அறிவர் உள்ளத்தில்
தெளிதேன் சுவையாய்த் தித்திக்கும் தீம்பா மலர்ந்து மகிழ்வூட்டும்!
- புலவர் மா.சு. மணி, திருக்கழுக்குன்றம்.
4.எட்ட முடியா விலையேற்றம் ஏழை யர்க்கு நஞ்சாகும்!
கட்டுப் படுத்த முடியாமல் கலக்கம் மட்டும் தருகின்ற
திட்ட மில்லா அரசுகளால் தீர்வொன் றுண்டோ? சிந்திப்பீர் !
குட்டுப் பட்டே வாழாமல் குறைகள் தீர்க்க ஆர்த்தெழுக !
- பாவலர் மா. வரதராசன், சென்னை -83.
5.புதுவை பாண்டி ஆகிடுமோ? பொய்தான் மெய்யை வென்றிடுமோ?
மது உண் டவர்போல் வாய்குளறி மயங்கி உரைக்கும் புதுச்சேரி
முதல்வர் போலிவ் வுலகினிலே முன்பின் ஒருவர்க் கண்டிலமே
எதுமெய் என்ப(து) உலகறிய எடுத்து ரைப்போம் வாரீரே!
- சி. கிள்ளிவளவன், பூரணாங்குப்பம்.
6.கருநா டகத்தார் கேரளத்தார் கரவாந் திரத்தார் தாம்கூடி
வரும்பேர் ஆற்றின் நீர்தடுத்தே வாழா(து) அழிப்பார் தமிழ்நாட்டை.
பெருகும் ஆற்று நீர்,நாட்டின் பிரிவுக் கெல்லை வகுப்பதுவோ?
ஒருமைப் பாட்டைப் பேசிடுவோர் உணரும் நேரம் வந்ததுகாண்!
- கலைமாமணி கோவி. கலியபெருமாள், அரியாங்குப்பம்.
7.அழகு சென்னை மாநகரில் அன்பு நடிகர் கள்இணைந்து
பழகும் தமிழின் பற்றதனைப் பாரோர் அறியச் செய்தார்காண்!
உழவு செய்யும் புலவரெல்லாம் ஒன்றாய்க் கூட உணர்வின்றி
இழவு கண்ட வீட்டார்போல் இருக்கும் நிலையை என்சொல்ல!
- சினி. சேதுராமன், திருபுவனைப் பாளையம்.
8.நடுவ ணரசு நாட்டினிலே நாளும் நேர்மை காக்கிறதா?
மடுவாய் மலையாய் மாநிலங்கள் வளர்ச்சி நிலையில் முரண்பாடேன்?
நெடிய துன்பம் ஏழையர்க்கோ? நிலைத்த இன்பம் செல்வர்க்கோ?
அடியோ டிச்சூழ் நிலைமாற அணிசேர்ந் தெழுந்தே போரிடுவோம்!
- தரும. இரத்தினவேலு, புதுச்சேரி.
9.தமிழர் தலைவர் எனும்பட்டம் தனக்கே சூட்டி மகிழ்கின்றார்
தமிழர்க் கான கல்வியினைத் தமிழில் தராமல் ஏய்க்கின்றார்
தமிழர் உரிமை வென்றெடுக்கத் தளரா துழைப்போர் பழிக்கின்றார்
தமிழின் முன்மைச் சீர்மறைத்தார் தமிழீர் காண்பீர் இரண்டகரை!
- பொறிஞர் அகன், மாத்தூர்.
10.அயலா னாண்டா னெனக்கூறி அந்தோ நமது தாய்மொழியை
அயர்ந்த போது நுழைந்தமொழி அடிமை கொள்ளல் முறையாமோ?
கயவ ரென்றே வரலாறும் களங்க மிட்டுக் கணிப்பதற்குள்
துயரம் நீங்கத் தமிழரெலாம் தூய தமிழைக் காத்திடுவோம் !
- புலவர் பூங்கொடி பராங்குசம், புதுச்சேரி.
11.அமிழ்தத் தமிழர் ஒன்றிணைந்(து) ஓர் அரிய அணியாய்த் திரண்டிருப்பின்
உமியை நிகர்ப்பக் கருநாட்டில் ஒதுக்கப் பட்டு வாழ்வாரோ?
நிமிர்ந்து நடக்கக் கட்சிமத நினைப்பை அறவே களைந்துடனே
இமிழுங் கடல்போல் எழுந்திலையேல் இவணும் ஈழ நிலைவருமே!
- புலவர் வீ. வில்வநாதன், வெங்காலூர்.
12.மக்கள் பணத்தைச் சுரண்டுகிற மான மில்லாத் திருடரெலாம்
மக்க ளாட்சி யயனும்பெயரில் மக்கள் தலைவர் ஆகின்றார்
மக்கள் நலனுக் குழைக்காமல் மயங்கி ஊழல் புரிகின்றார்
மக்கள் கையில் தானுளது மக்கள் நலனே! யாரறிந்தார்?
- ப. பிரபாவதி, புதுச்சேரி.
13.தமிழ ருரிமை தடுப்பதற்குத் தருக்கி யவனுந் திரிவானாம்
திமிரை யடக்கத் திரளானாம் திருட்டுக் கிசைந்து சிதைவானாம்
நிமிர நினையா திருப்பானின் நிலையை மாற்றுந் திறனறிவோம்
உமியை ஊதிக் கொழித்தாலே ஊருக் குழைப்பா ரொளிர்வாரே!
- புலவர் தங்க. ஆறுமுகம், சென்னை -49.
14.இனிய தமிழில் புதுச்சேரி என்றே வழங்கும் நகர்ப்பெயரைப்
பிணியாய் வந்த ஆங்கிலத்தில் பிதற்ற முயலல் முறையாமோ?
நினைவில் என்றும் தமிழழிப்பே நிலையாய்க் கொண்ட முதலமைச்சர்
மனத்தில் மாற்றம் வாராதோ? வளமாய்த் தமிழும் மீளாதோ?
- புலவர் வி. திருவேங்கடம், செல்லான் நகர்.
15.தில்லைச் சிலையும் தீந்தமிழால் தீட்டுப் பட்டுப் போய்விடுமா?
எல்லை எனக்கும் ஏனென்றே என்றோ ஈசன் கேட்டிருந்தால்
சொல்லை ஒடுக்கும் சொறிநாய்கள் தொல்லை குன்றிப் போயிருக்கும்
கல்லை நம்பிப் பயனில்லை மல்லுக் கட்டி மாய்த்திடுவோம்!
- செல்வமணி, சத்தியமங்கலம்.
16.வறுமைப் பட்டு வாழ்விழந்து வற்றிக் காயும் காவிரியாய்ச்
சிறுமை யுற்றுச் சீரழிந்து திசைநா டெங்கும் ஏதிலியாய்
வெறுமை சூழத் தாயிழந்த விடலை போலத் தவித்துழன்று
மறுகிக் குமையும் தமிழினத்தின் மாண்பை உயர்த்த எவருள்ளார்?
- அகரமுதல்வி.
17.எடியூ றப்பா இடையூறாய் எமக்கி ருந்தால் தமிழரெல்லாம்
தடியூ றப்பா வென்றாவோம் தாங்க மாட்டீர் எதிர்நிற்க!
முடிய ரசெனும் எண்ணத்தில் முடியா தென்றே முழக்கமிட்டால்
குடிநீர் பெறவே ஒன்றாவோம் குடகு மலையை வென்றெடுப்போம்!
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
18.தண்ணீர் தாராத் தருக்கரவர் சார்ந்தே உண்மை நடவாதார்
எண்ணந் தன்னில் ஏற்றமிலார் எள்ளின் அளவும் இரக்கமிலார்
உண்ணும் உணவில் மண்ணிடுவார் உறவை வெட்டி எறிந்திடுவார்
கண்ணீர் கண்டும் கவலையிலார் கருநா டகத்தார் நிலையிதுவே.
- படைக்களப் பாவலர், ஆர்க்காடு.
19.கண்ணே என்றான் கனி என்றான் காத லுன்றன் மேலென்றான்
மண்ணில் நீதான் அழகென்றான் மனத்தி லுறைந்தாய் நீஎன்றான்
விண்ணின் மதியும் விண்மீனும் மண்ணில் உன்றன் முகமென்றான்
கண்கள் காணா விடத்திற்கே களித்த பின்னே யோடிவிட்டான்!
- ப. நிலா, புதுச்சேரி -13.
20.இலங்கைத் தமிழர் வேதனைகள் இனியிங் கில்லா நாள்களடா!
விலங்கை ஒடிப்போம்; தமிழ்த்தாயின் விழிநீர் துடைப்போம் ஆர்த்தெழடா!
நலங்கள் குவிப்போம் அவர்வாழ்வில் நாளை உரிமை விடியலடா!
கலங்கும் நிலையும் கடிதோடும்! கயவர் வாழ்வும் முடிவாகும்!
- செ. சுந்தரம், வெண்பாவூர்.
21.உலவும் காற்றை, ஆற்றினிலே ஓடும் வான மழைநீரை;
உலகில் எங்கும் யார்எவரும் உரிமை கொள்ளற் கியலாதே!
வலிய காற்றுத் தடம்மாறும் மழையும் பொழிய இடம்மாறும்
அலகில் திமிரர் கன்னடரோ ஆர்க்கின் றார்எம் முடைத்தென்றே
- மு. திருவாணன், திண்டுக்கல்.
22.சிறைப்பட் டுழன்றும் கனன்றெரியும் தீப்பட் டுயிரைப் பலர்மாய்த்தும்
முறையாய்த் தமிழைக் கொலுவேற்ற முயன்றும் முடியா நிலையயதனால்?
அறைக்குள் இருந்தே தமிழ்மரபின் அடிவேர் அறுப்பார் செவிகிழிய
அறைந்தா லன்றி உயர்வேதாம் அணிகொள் தமிழா கைகோத்தே
- ப. சக்திவேலன், கொட்டப்பட்டு.
முன்னரே பரிசு பெற்றறோரின் பாடல்கள் :
1.கற்க வேண்டும் பலவற்றைக் கற்றல் போலே வாய்மொழிகள்
உற்றுக் கேட்டு வரவேண்டும் உண்மை அறிவைப் பெறவேண்டும்
கற்ற வற்றைப் பிறருக்கும் களிப்பாய்க் கற்றுத் தரவேண்டும்
சுற்றும் முற்றும் நம்மைப்போல் சுடர்விட் டொளிர்ந்தே எழவேண்டும்
- வே. இரா. சிவஞானவள்ளல், வேலூர்-9.
2.குனியக் குனியக் குட்டுதற்குக் குனிந்து கொண்டே நாமிருந்தால்
இனியும் வையம் நம்முகத்தில் இகழ்ந்து காறி உமிழாதோ?
கனியும் நெருப்பாய் நாமிருப்போம் காலம் கனியும் காத்திருப்போம்
பனியும் வெயிலும் துணையாகும் பகைவர் படைகள் துகளாகும்.
- வே.ச. திருமாவளவன், புதுச்சேரி.
1. இவ்வகைப்பாவில் விளச்சீர்க்கு இடமில்லை. (காகி) தப்புலி, பொழிந்திட, பேரலை என்ற சீர்களைச் சிலர் பெய்து பிழைபட்டனர்.
2. 'அஞ்சாமல் நாம்' என்பதைப் புணர்த்தெழுதினால், 'அஞ்சா மனாம்' என்றாகிச் சீர் இதையும்.
3. வாய்மைத்தவறா, கொள்கைப் பின்பற்றி - இவற்றில் வலிமிகுந்தது பிழை.
5. அயற்சொற்கள் : அனுமதி (இசைவு), வாக்கு (சொல், ஒப்போலை) சிரம் (தலை), குணம் - (பண்பு), மெதுவாய் (மென்மையாய்) கவி (பாவலன்)