மனம் திறந்த மடல்கள்
பொறிஞர் அகன், மாத்தூர்.

"எந்தமிழர் விடுதலையை எதிர்க்க ஏதுரிமை உனக்கு எருமைமாடே!" - என்று தங்கப்பா ஐயர் சூடுவைத்துள்ளது நன்று! ஆனால் எருமைகளுக்குச் சூடும் சுரணையும் ஏறுமா? "காகிதப் புலிகள்" என்றவர் 'காகிதத்' தமிழரன்றோ? இலக்கணச்சுடர் இரா.தி. அவர்கள் 28-03-2008இல் வெளியிட்டுள்ள 'தம் வாணாள் விருப்பங்கள்'-கண்டறிந்து மெய்சிலிர்ப்பு உற்றேன். நூறாண்டும் கடந்து வாழ்ந்து உம் விருப்பங்கள் அனைத்தையும் முழுமையாக அடைந்து மகிழ்வீர் ஐயா! தமிழிற் பிறமொழி எழுத்தொலிகளையோ, சொற்களையோ கலப்பது பழுதே! 'அறிவியற் சொல் ஒலிவடிவங்கள்' குறித்துத் தாங்கள் கூறியுள்ள முடிவுகள் சாலப் பொருத்தமே! தமிழண்ணல் ஐயர் அவர்கள், 'தமிழ்த்தவம்' குறித்து விரிவாக விளக்க வேண்டுமென வேண்டுகிறேன். தோள் கண்டார் கட்டுரையில், தெளிதமிழ்க்கு ஏற்பில்லாப் பல அயற்சொற்கள் வாக்கியம், கவனி, தத்துவம், வாசகர், ஊகம், விமர்சனம், விருத்தம், முக்கியத்துவம், கவிதை, கவனம், உச்சரிப்பு என வருவதோடு, அடைப்புக்குள் ஆங்கிலமும் உள்ளன. தமிழில் புரியாதோர்க்கு ஆங்கிலமா? அருள்கூர்ந்து இவ்வழுக்களைத் தவிர்த்திடுங்கள்!

ச.மு.விமலானந்தன், திருப்பத்தூர்.

உங்களுக்குப் புதுவையில் பாராட்டுவிழா நடந்ததாக அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன். எனக்குத் தெரிந்த அளவில் இசைத்தமிழ் இலக்கணத்தில் மிக்க புலமையுடையவர் நீங்களே! (மேலும் சிலர் இருப்பினும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒருசிலரே இருக்கக்கூடும்) உங்களைத் தமிழக, புதுவை அரசுகளும் மக்களும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், உங்கள் இசைத்தமிழ்ப்பணிக்குப் பாராட்டுகள்!

சங்கமித்ரா

தெளிதமிழ் வந்தது. அட்டையில் தங்கப்பாவின் - எருமைமாடே விளாசல் மிக அருமை! எம் இதழ்களில் மறுபதிப்பு வரும். திருமுருகனார் அன்பளிப்புத் தொகையைத் தமிழ்ப் பணிக்குத் திருப்பியது மிகப்பெரிய முன்னடி. மதிவாணன் 'வடுகு' ஆய்வு மிகச் சிறப்பாக இருக்கிறது. தெளிதமிழ் தமிழகத்தின் மிகப்பெரிய போர்வாளாக, மிகப்பெரிய அரணாக இருக்கிறது.

புலவர் வீ.வில்வநாதன், வெங்காலூர்.

1.ஒண்டமிழ் நாட்டின் ஒகனேக்கல் - பண்டு
புகையெழுங்கல் என்றார்; உகுநீர்க்கல் என்றார்;
புகைநற்கல் என்றார் புரிந்து.

2.எல்லையை மீறுமெடி யூரானைக் - கல்லாலே
தண்டமிழர் தாக்காமல் விட்டது கன்னடர்க்குக்
கொண்டாட்டம் ஆனதென்று கொள்.