
|
எங்கிருக்கிறது மாந்தனின் மேம்பாடு? இலங்கையில் ஈழத்தமிழ்மக்கள் சொல்ல முடியாத அவலங்களில் அமிழ்ந்து கிடக்கின்றனர். இனவெறிச் சிங்கள அரசு கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாகவே தமிழ் மக்களையும் அவர்களின் நாகரிகத்தையும் அழித்தொழிக்கும் கொடுமைகளைச் செய்து வருகின்றது. ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் இனப்படுகொலைக்கு ஆளாகிக் கொண்டு வருகின்றனர். அப்பாவித் தமிழ்மக்கள், பெண்கள் குழந்தைகள்மீது துன்புறுத்தலும், கொள்ளையும் கொலையும் பாலியல் வன்முறையும் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. குழந்தைகள் குண்டு வீசிச் சாகடிப்படுகின்றனர். உணவின்றித் தமிழ்மக்கள் பட்டினிபோடப் படுகின்றனர். தமிழ்மக்களின் நலம் கருதும் உண்மைத் தமிழ்த் தலைவர்கள் ஒவ்வொருவராகச் சிங்கள வெறியரால் சுட்டுக்கொல்லப்படுகின்றனர், மொத்தத்தில் தமிழினம் தன் சொந்த மண்ணிலேயே சிங்கள இனத்தின் வெறித் தாக்குதல்களை எதிர்கொண்டு அல்லல்படுகின்றது. இது கொடுமை; வெளிப்படையான கொடுமை. இக்கொடுமைகளை அவிழ்த்துவிடச் சிங்கள அரசுக்கு எந்தவகையிலும் உரிமை கிடையாது. ஆயினும் இதுவரை எந்த உலக நாடும் இதைத் தட்டிக் கேட்கவில்லை, மாந்த உரிமை அமைப்புகளும் சரி, உலகநாடுகளின் பேரவையும் சரி அழுத்தமாக முயன்றால் சிங்கள அரசின் முறையற்ற செயலைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால் இன்று வரை இது செய்யப்படவில்லை. அவ்வப்பொழுது ஓரிரு தனியறிஞர்கள் வாய்திறந்து தங்கள் கடிதலைத் தெரிவிக்கின்றனர். அவ்வளவுதான். இன அழிவு தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. கொஞ்சம் ஆழ்ந்து எண்ணிப்பார்த்தால் இலங்கையில் மட்டுமன்று, உலகின் பல்வேறு பகுதிகளிலும் வரலாற்றுக் காலம் தொட்டு இத்தகையை கொடுமைகள் நடந்து கொண்டு வருகின்றன என்பதைக் காணலாம். எந்த நாட்டிலும் பெரும்பான்மைத் தேசிய இனம் அல்லது அதிகார வலிமைபெற்ற தேசிய இனம் சிறுபான்மைத் தேசிய இனத்தை அல்லது அரசியல் வலிமையற்ற தேசிய இனத்தை அழித்தொழிப்பதில் மும்முரமாக ஈடுபட்டே வந்திருக்கின்றது. உடைந்து போன சோவியத்துக் குடியரசு அமைப்பிலும் இதுதான் நிகழ்ந்துள்ளது. ஈராக்கிலும் இது நிகழ்ந்தது. இன்றைய இசரேலிலும் இது தான் நிகழ்கின்றது. திபெத்திய மக்களுக்கும் இதுவே நேர்ந்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால் வலியவன் மெலியவனை வருத்துகின்றான். நாடுகளிடையே மட்டுமன்று, பல்வேறு இனக்குழுக்கள், மதப்பிரிவுகள், மொழிப்பிரிவுகள் சாதி அமைப்புகள் எல்லாவற்றிலும் வலிமைபெற்ற குழு அல்லது பிரிவு வலிமையற்ற குழுவை அல்லது பிரிவை ஒடுக்குவதையே தொழிலாகக் கொண்டுள்ளது. தனி மாந்தர் வாழ்விலும் இதுதான் நடக்கின்றது. வலியவன் மெலியவனை வருத்துகின்றான். முரடன் அப்பாவியை அழித்தொழிக்க முனைகின்றான். மாந்த நாகரிகம், மாந்தனின் மேம்பாடு என்றெல்லாம் பேசுகின்றோமே இவை எவ்வeவு பெரிய பொய்கள்! மாந்தன் என்பவன் எப்பொழுதும், எங்கும் கொடுமைக்காரனாகவே இருந்து வந்துள்ளான். நாம் வானளாவப் புகழ்ந்து போற்றிப் பேசுகின்றோமே, மாந்த நேயம், மக்களாட்சி, மாந்தர் உரிமை, விடுதலை, மக்களிடையே ஏற்றத் தாழ்வின்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு இவையயல்லாம் எவ்வளவு பம்மாத்துகளாகவும் மாய்மாலங்களாகவும் இருக்கின்றன! பொய்களை மூடி மறைக்கும் மேற்பூச்சுகளாகவே இவை பயன்படுகின்றன. உயர்ந்த கொள்கைகள், கோட்பாடுகள் குறிக்கோள்கள் என்பவை அவரவர் தங்கள் தன்னலத்துக்காவும் வசதிகட்காகவும் தேவையான பொழுது கையிலெடுத்துக்கொள்ளும் கருவிகளாகவே இருக்கின்றன. எந்த நாடும் தன் பொய்களைப் பற்றியோ? முரண்பாடுகளைப் பற்றியோ கவலைப்பட்டுக் கொண்டிருப்பதில்லை. குறிப்பிட்ட ஒரு நேரத்தில் தன்னை நிலை நாட்டிக்கொள்ள எந்த ஒரு கோட்பாடு துணையாகின்றதோ அந்த நேரத்தில் அதைப் பறைசாற்றிக் கொள்கிறது. மற்றொரு நேரத்தில் இதற்கு முரணான ஒரு கொள்கை தேவை என்றால் முன்னதைவிட்டுப் பின்னதைப் பின்பற்றிக் கொள்கின்றது. இந்த முரண்பாடுகளுக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு இந்திய அரசு. அவ்வப்பொழுது வேறு நாடுகளில் நிகழும் மக்கள் உரிமைப்போராட்டங்கள் பலவற்றுக்கு ஆதரவுக் குரல் எழுப்புகின்றது. தென்னாப்பிரிக்க மண்ணின் மக்களுக்கும், பாலத்தீனியர்களுக்கும் இந்தியா தன்னை ஒரு விடுதலையின் தூதுவனாகக் காட்டிக் கொள்கின்றது. ஆனால் திபெத்தின் நிலையும் அதுதானே. அந்த மக்களுக்குக் குரல் கொடுக்கும் அறத்துணிச்சல் இந்தியாவுக்கு இல்லையே. மேலும் காசுமீரில் நடப்பதென்ன? அதுவும் மக்கள் உரிமைப் போர்தானே! அங்கே இந்திய தேசியம் என்னும் பொய்யை முன்வைத்து அந்த மண்ணின் மக்களை ஒடுக்கும் வேலையைத்தானே இந்தியா, செய்கின்றது! விடுதலை பெற்ற வங்கதேசத்தையும், விடுதலைக்காகப் போராடும் தமிழ் ஈழத்தையும் எடுத்துக்கொள்வோம். இரு மக்கள் நிலையிலும் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால் இந்தியா தானே உட்புகுந்து வங்க தேசத்தைப் பாகித்தானிடமிருந்து பிரித்தது. வங்கமக்கள் உரிமைக் காப்பு எனும் பேரால் இதனைச் செய்தது. ஆனால் ஈழத் தமிழர் என்ன கேடு செய்தனர்? அவர்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கச் சிங்கள அரசுக்குக் கோடி கோடியாகப் பணத்தையும் படைக் கருவிகளையும் படைத்தொழில் நுட்பத்தையும் வாரிவாரி வழங்குகின்றது. மக்கள் உரிமைக் கோட்பாட்டைக் காற்றில் பறக்கவிட்டு, இலங்கையின் இறையாண்மை என்ற கொள்கையைக் கையில் பிடித்துக்கொண்டுள்ளது. மாலத்தீவில் இந்திய மரபு வழியினர் கைஓங்க வேண்டும் என்று பதைத்த இந்திய அரசு, இலங்கையில் தங்கள் சொந்த மண்ணான ஈழத்தில் தமிழர் உரிமைபெறத் தடையாய் நிற்கின்றது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளின் கயமைத் தனத்தையும் அடாவடித் தனங்களையும் பிரித்தெழுதச் சொற்களே இல்லை. மக்களாட்சி, மாந்தஉரிமை பேசிக்கொண்டே உலகமுழுவதும் தன்னோடு ஒத்துவராத மக்களை அழித்தொழித்துத் தன் மேலாண்மையை நிலைநாட்டுவதே அதன் தொழிலாக உள்eது. ஈராக்கில் சதாம் உசேனை அழிக்கத் திட்டமிட்டுப் பொய்களை அவிழ்த்துவிட்டது அமெரிக்கா. அமெரிக்காவின் மேலாண்மையை எதிர்த்த சதாம் உள்நாட்டில் என்ன செய்தான்? சிறுபான்மை மக்கள் உரிமைகளை அழித்தான். இனப்படு கொலைகளும் நடத்தினான். வரலாற்றை என்ன, அன்றன்று செய்தித்தாள்களைப் புரட்டினாலேயே போதும். இனம், மொழி, சாதி, மதம் கொள்கை போன்றவற்றின் பெயரால் எத்தனைக் கொடுமைகள் நடக்கினறன என்று தெரிந்து கொள்eலாமே! நந்திக்கிராமம் ஒன்றுபோதுமே! மாந்தனின் முரண்பாடுகளையும் தன்னலக் கயமைகளையும் சூழ்ச்சிகளையும் சுட்டிக்காட்ட! முதலாளிகளுக்கெதிராக இருக்க வேண்டிய பொதுவுடைமையர், முதலாளிகளோடு கூட்டுச்சேர்ந்து ஏழை எளிய மக்களின் உரிமைகளை வெளிப்படையாக நசுக்குகின்றனர். எல்லாவற்றிலிருந்தும் நாம் தெரிந்துகொள்வது இதுதான். மாந்த நேயம் என்பது பொய்! வலியவன் மெலியவனை வருத்துகிறான் என்பதே மெய். அதுபோல இவர்கள் பேசும் எல்லா உயர்ந்த கொள்கைகள், கோட்பாடுகள் வெறும் மேற்பூச்சுகளும் முழுக்க முழுக்கத் தன்னலம் சார்ந்தே பேசப்படுகின்றன. மாந்தன் தனக்கு ஊதியம் கிடைக்குமென்றால் இவற்றைப் பேசுகின்றான். இல்லையேல் வாய்மூடிக் கொள்கின்றான். எங்கிருக்கின்றது மாந்தனின் மேம்பாடு? |