
|
கருத்து மேடை
புலவர் ச.மு. விமலானந்தன், திருப்பத்தூர்.
1. ‘வாரும்', ‘வரவும்’ - இவற்றில் ‘ர்’ என்பதை எழுத்துப்பேறு எனக்கொள்ளலாம். விரித்தல் விகாரமன்று. விரித்தல் விகாரமாயின் அவ்வெழுத்தினை நீக்கினால் பொருள் தரவேண்டும். எ.டு: விளையும்மே- விளையுமே. 2. ‘இல்லைத்தானே’ என்பதில் ‘இல்’ வீடு என்ற பொருளைத் தரும். இன்மை என்ற பொருள் தராது. ‘இல்லை தானே’ என்றால் இன்மை என்ற பொருள் தரும். 3. வேலூர் தங்கக்கோயில் என இயல்பாக வருவதே சரி. எ.டு: ஆவூர் கிழார், கோவூர் கிழார். 4. நாட்டுப்பற்று குறித்து, தீர்ப்பு கூறினார் முதலியவை இரண்டாம் வேற்றுமைத் தொகையானதால் இடையில் ஒற்று மிகாது. 1. வாரும், வரவும் என்பவற்றில் வரும் ரு, ர ஆகியன விரித்தல் விகாரம் என்றே ஆறுமுக நாவலர் கூறுகின்றார். (நன்னூல், பகுபதமுடிபு, பக் :458) நீங்கள் விரித்தல் விகாரமன்று; எழுத்துப்பேறு என்கிறீர்கள். 2. கடிசொல் இல்லைக் காலத்துப் படினே (தொல் எச்ச 56) என்ற நூற்பாவை இளம்பூரணர், சேனாவரையர், தெய்வச்சிலையார், நச்சினார்க்கினியர் ஆகிய உரையாசிரியர்கள் இல்லை என்பதன் முன் மிகுத்தே எழுதுகின்றனர். ‘யாரும் இல்லைத் தானே கள்வன் (குறுந் 25) என்று பலபதிப்புகளிலும் மிகுத்தே அச்சிடப்பட்டுள்eது. இக்காலத்தில் பலர் இவற்றை இயல்பாகவும் எழுதுகின்றனர். தொல்காப்பியர், நன்னூலார் முதலியோர் இவ்விரண்டையும் சரி (உறழ்ச்சி முடிபு) என்கின்றனர். ஆனால் நீங்கள் மிகுத்து எழுதுவது பிழை என்கிறீர்கள். 3. வேலூர்த் தங்கக்கோயில் என்பதை ஒற்று மிகுத்து எழுதுவதே சரி என்று தொல்காப்பியர் (புள்ளி. 67) கூறுகிறார். நீங்கள் இயல்பாக எழுதுவதே சரி என்கிறீர்கள். 4. ‘நாட்டுப் பற்றுக் குறித்து', ‘தீர்ப்புக் கூறினார்’ என்பன ஒற்று மிகும் என்று தொல்காப்பியர் (குற். 21) கூறுகிறார், நீங்கள் மிகாது என்று கூறிவருகிறீர்கள். இங்ஙனம் இலக்கணம் வல்ல சான்றோர்களை மறுக்கக்கூடாது என்று நான் கூறவில்லை, 'இது மிகும்', 'இது மிகாது' 'இப்படிக் கொள்eலாம்' என்று சுருங்கக்கூறாமல், உங்கள் கருத்துகளைச் சான்றுகளுடன் ஒரு கட்டுரையாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறேன். அதைத் தெளிதமிழில் வெளியிட்டால், மற்றவர்களும் அதுபற்றிக் கருத்துக் கூறவும், சிலருக்கு இவற்றில் இருக்கும் மயக்கம் தெளியவும் வாய்ப்பாக இருக்கும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன். - இரா.தி. |