
|
கண்ணிற் பட்டதும் கருத்திற் பட்டதும்
1. ஐதராபாத் நகரில் நடைபெற்ற இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் 20ஆவது மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. போர்நிறுத்த உடன்பாட்டையும், அமைதிக்கான கலந்துரையாடலையும் இலங்கை அரசு தன் விருப்பப்படி முறித்துக்கொண்டது. தமிழர்கள் மீதான வன்முறைப் போர்த் தாக்குதல்களை உடனே நிறுத்துமாறு இலங்கை அரசை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும். அரசியல் முறையிலான கலந்துரையாடலை மீண்டும் தொடங்குமாறு இந்திய அரசு நெருக்குதல்களை அளிக்க வேண்டும். தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்குப் போர்க்கருவிகள் கொடுத்து உதவிகள் செய்வதை இந்திய அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்திய மீனவர்களின் உயிருக்கு ஊறு விளைவிக்கும் கடல் கண்ணி வெடிகளை அகற்றுமாறு இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும். தமிழக மீனவர்களுக்குக் கச்சத்தீவில் உள்ள எல்லா உரிமைகளையும் மீட்டெடுக்க இந்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் மனித உரிமை, அரசியல் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இந்தியப் பொதுவுடைமைக் கட்சி தன் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. - ( தென்ஆசியச்செய்தி, 2008 ஏப்ரல் 16-30 பக்கம். 5 ) இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் ஐதராபாத்துத் தீர்மானங்கள் தமிழ்நாட்டு அரசியல் வாணர்களுக்கும், தமிழ் நாட்டரசுக்கும் உணர்வூட்டும் வகையில் அமைந்துள்ளன. “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 2. "இலங்கையில் வன்முறை பெருகிவரும் நிலையில் அதற்குக் காரணமான இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்பின்றி அங்கு அமைதி திரும்புதற்கான வாய்ப்பில்லை" என்று தென்னாப்பிரிக்கத் தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் இராய்படையாச்சி கூறினார். புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் இலண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பன்னாட்டு அமைதி ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து பேசிய அவர் இலங்கை இனச் சிக்கலுக்குத் தீர்வுகாணும் போர்வையில் பல்வேறு நாடுகள் தங்களின் கருத்தைத் திணிக்க முயன்று வருவதாகச் சுட்டிக் காட்டி அதுபோன்ற திணிப்பு முயற்சியில் தென்ஆப்பிரிக்கா ஒருபோதும் ஈடுபடாது என்று கூறினார். இலங்கையில் வாழும் தமிழ்மக்களின் அதிகாரப்படியான பேராளர்களாக விடுதலைப் புலிகள் அமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார் என்று கூறிய அவர் இலங்கையில் அமைதி திரும்ப அந்நாட்டு மக்களின் முயற்சிக்குப் பன்னாட்டு அமைப்புகளும் துணைநிற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். வன்முறை இயக்கம் என்று விடுதலைப் புலிகள் அமைப்பு அறிவிக்கப் பட்டுள்ளது குறித்த வினாவுக்கு விடையளித்த அவர், நிறவெறியை எதிர்த்து ஆப்பிரிக்க தேசியப் பேராயக் கட்சி போராடியபோது அதுவும் வன்முறை அமைப்பாக அறிவிக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக் காட்டினார். - ( தென்ஆசியச் செய்தி, 2008 ஏப்ரல் 16-30-பக்கம்.6 ) தமிழீழ மக்கள் படுந்துன்பங்களைப் போக்குதற்குப் புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகள் ஒன்றிணைந்து எடுத்துவரும் முயற்சிகள் அனைத்தும் தமிழீழ மக்களின் இருண்ட வாழ்வில் ஒளியுண்டாக்குவனவாகும். “பொங்கும் தமிழர்க் கின்னல் விளைத்தால், சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு!” என்னும் பாவேந்தர் பாட்டின் ஈட்டி வரிகளுக்கு வலிமை சேர்க்கும் வகையில் "இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல்" வேண்டும். - 3. முதல் அமைச்சர் அரங்கசாமி : நமது ஆட்சிப்பரப்பு முழுவதும் புதுச்சேரி என்று அழைக்கப்படுகிறது. பாண்டிச்சேரி என்பது உலக அளவில் தெரிகிறது. அன்பழகன் : புதுச்சேரி மாநிலத்தின் தலைநகர் பாண்டிச்சேரியா? முதல் அமைச்சர் அரங்கசாமி : ஆம். அனந்தராமன் : கடந்த ஆண்டு பாரதி விழாவில் பேசிய முதல் அமைச்சர் பாண்டிச்சேரியைப் புதுச்சேரி என்று மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசியிருக்கிறார். புதுச்சேரி என்பது பல ஆய்வுக்குப் பின் தேர்வு செய்யப்பட்டது. சபாநாயகர் : நகரப்பகுதி முழுவதும் பாண்டிச்சேரி. மாநிலம் முழுவதும் புதுச்சேரி. அமைச்சர் வைத்திலிங்கம் : பாண்டிச்சேரி என்பது ஒன்றும் ஆங்கிலம் கிடையாது. பாண்டி நாட்டான் என்பது தமிழ்தான். மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி புதுச்சேரி மாநிலம் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றார். இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், பன்னீர்செல்வம் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். -( 'தினத்தந்தி' 29.04.2008, பக்கம்7 ) 'புதுச்சேரி' என்பது பழந்தமிழ் வரலாற்றுப் பெயர். 'பாண்டிச்சேரி' என்பது படித்தறியும் திறமையில்லாத அயலான் தவறாய் அழைத்த பெயர். பாண்டி நாட்டான் எனும் பெயர் தமிழ்தான்; மறுக்கவில்லை. புதுச்சேரியான் - பாண்டிய நாட்டான் ஆக முடியுமா? நம் புதுச்சேரி மண்ணின் வரலாறு அறியாதவர்களும் புதுச்சேரியில் அமைச்சர்களாய் இருக்கின்றார்களே! "என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?" நடுவணரசின் சட்டப்படி, இந்திய ஒன்றியத்தின் ஆட்சிப் பரப்புக்கு உரிய 'புதுச்சேரி' எனும் பெயரையே நகரப்பகுதிக்கும் வழங்க வேண்டும். இதுதான் முறையான ஆட்சியின் செயலாகும். 4. வேலூர் பெண்கள் தனிச் சிறை அதிகாரியும் பொதுத் தகவல் அலுவலருமான பி.ராஜசௌந்தரி அனுப்பி உள்ள பதிலில், "ஆயுள் தண்டனை சிறைவாசி நளினியை மார்ச் 13 மற்றும் மார்ச் 19 ஆகிய நாட்ளில் எவரும் நேர்காணல் பார்க்கவில்லை" எனக் கூறியுள்ளார். நளினியை, வேலூர்ப் பெண்கள் சிறையில் மார்ச் 19-ம் தேதி சந்தித்ததாக பிரியங்கா உறுதி செய்துள்ளார். ஆனால் சிறை அதிகாரி தவறான தகவலைத் தெரிவித்துள்ளார். இதற்காக வேலூர் பெண்கள் சிறை அதிகாரி ராஜசௌந்தரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 18 (2) கீழ் நளினி ,பிரியங்கா சந்திப்புக் குறித்து கடிதம் மூலம் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட வேண்டும் என மனுவில் வழக்கறிஞர் ராஜ்குமார் கூறியுள்ளார். - ( தினமணி 3-5-2008 முதல்பக்கம் ) வேலூர்ப் பெண்கள் சிறையில் இருக்கும் நளினியைப் பிரியங்கா காந்தி சந்தித்தது பற்றிய செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்த பின்னர் மார்ச்சு 13, 19-ஆகிய இரு நாள்களில் நளினியைச் சிறையில் யாரும் சந்திக்க வில்லை என்று வேலூர்ப் பெண்கள் சிறை அதிகாரி தகவல் அறியும் உரிமைச் சட்டம் 18 (2) பிரிவின் படி தகவல் அளித்திருப்பது "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்பது போலவும்; முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போலவும் உள்ளன. - செ. இரா. |