
|
சிறந்ததோர் தமிழகராதி தேவை
தமிழ் செம்மொழி என்று நடுவண் அரசால் அறிவிக்கப்பட்டபின் அதனை நடுவாகக் கொண்டு தமிழ் மொழியின் மேம்பாட்டுக்கான ஆக்கப் பணிகள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழந்தமிழிலக்கியங் களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல், அவ்விலக்கியங்களை மக்கள் நடுவில் எடுத்துச் செல்லுதல், பல்வேறு அறிவியல் நூல்களைத் தமிழில் உருவாக்குதல் போன்றவை சில எடுத்துக்காட்டுகள். தமிழ்மொழியின் மேம்பாட்டுக்காக இன்னும் எத்தனையோ ஆக்கப்பணிகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். அவற்றுள் மிக இன்றியமையாததான ஓர் ஆக்கப்பணியின் மீது தமிழறிஞர்கள் கவனம் செலுத்துதல் வேண்டும் என்பது தமிழ்நலம் கருதுவோரின் நெடுநாளைய வேட்கையாயிருக்கின்றது. தமிழுக்கான சிறந்த அகராதி ஒன்றினை உருவாக்குதல் அதுவாகும். ஏற்கெனவே தமிழில் சில அகராதிகள் உள்ளனவே என்று நாம் அமைந்துவிடல் கூடாது. ஆங்கிலத்தில் மிகச் சிறந்த நூற்றுக்கணக்கான அகராதிகள் வெளிவந்துள்ளன. அப்படியிருந்தும் காலந்தோறும் அவை புதுப்பிக்கப்பட்டு ஈராண்டு மூவாண்டுகட்கு ஒருமுறை புதிய பதிப்புகளாக வெளியிடப்படுகின்றன. காலந்தோறும் மொழியில் ஏற்படும் மாற்றங்கள், வளர்ச்சிகள், ஏன் தொய்வுகளுங் கூட அகராதிகளில் இடம் பெறுகின்றன. சரியான வழக்குகள் எவை, பிழையான வழக்குகள் எவை என்பதையும் அகராதிகள் சுட்டிக்காட்டுகின்றன. பழமொழிகள் மரபுதொடர்கள், மக்கள் வழக்குகள் போன்றவை முறையாக வகுக்கவும் தொகுக்கவும் பெற்று உரிய இடங்களில் தரப்படுகின்றன. ஆங்கில அகராதிகள் சிலவற்றை ஒருவன் ஊன்றிப் படிப்பானானால் அவன் தன் ஆங்கில அறிவை நன்கு வளர்த்துக்கொள்ள முடியும். அவ்வளவு நுணுக்கமாகவும் திறம்படவும் ஆங்கில அகராதிகள் உருவாக்கப் படுகின்றன. இன்றுள்ள தமிழ் அகராதிகளின் நிலை என்ன என்று சொல்லத் தேவையில்லை. ஐம்பதாண்டு அறுபதாண்டுகட்கு முன் வெளிவந்த தமிழ் அகராதிகள் எந்த மாற்றத்துக்கும் திருத்தங்கட்கும் உட்படாமல், புதுப்பிக்கப்படாமல் அச்சுப்பிழைகள் கூடத் திருத்தப்படாமலேயே மீண்டும் அச்சிடப்படுகின்றன. இக் குறைகளைப் பற்றியயல்லாம் நாம் மிகுதியும் பேசத் தேவையில்லை, இருட்டைக் கடிந்து பேசிக் கொண்டிருப்பதைவிட விளக்கேற்றி வைத்தலே மேல் என்று கூறுவார்கள். பழைய அகராதிகள் திருத்தப்படுவது ஒரு புறம் இருக்கட்டும். தமிழுக்குச் சிறந்த புதிய அகராதிகள் மிக மிகத் தேவை. தமிழ் செம்மொழி என அறிவிக்கப்பட்ட பின்பு தமிழ்மொழி மேம்பாட்டுக்கான பல ஆக்கப் பணிகளை மேற்கொள்வதற்கென்று நடுவணரசு பெரும் பொருளை ஒதுக்கியிருப்பதாக அறிகின்றோம். தமிழ்நாட்டரசின் மேற்பார்வையோடு கூடியனவாகவே பல திட்டங்கள் தொடங்கப்பட்படுள்ளன என்றும் அறிகின்றோம். ஆக்கப் பணிகளுள் மிக மிக முதன்மையாக மேற்கொள்ள வேண்டிய பணி சிறந்த தமிழ் அகராதி ஒன்றை உருவாக்கும் பணியாகும் என்று தமிழ்நாட்டரசுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். ஓர் அகராதியை உருவாக்குவது எளிய மேம்போக்கான வேலை அன்று. அது மிக மிகப் பொறுப்புணர்வுடன் மேற்கொள்ள வேண்டிய ஆழ்ந்த அரிய பணி ஆகும். முதலில் தகுதிவாய்ந்த வல்லுநர் குழு ஒன்று அமர்த்தப்படல் வேண்டும். பொதுவாக அரசு சார்ந்த திட்டங்களில் தகுதி அளவுகோலாகக் கொள்ளப்படாமல் அரசின் விருப்பு வெறுப்புகட்கு ஏற்பவே வல்லுநர் என்போர் அமர்த்தப்படுவது அடிமுதல் முடிவரை நம் நாட்டின் அவலநிலையாக இருந்துவந்துள்ளது. இதனாலேயே நம் அரசுகள், பல்கலைக் கழகங்களால் மேற்கொள்ளப்படும் பல பணிகள் மிகமிக மேம்போக்கானவையாகவும், ஒப்புக்கு மேற்கொள்ளப் படுவனவாகவும் அமைந்து விடுகின்றன. உண்மையான, நல்லதோர் அகராதி தமிழுக்குத் தேவை என்பது உணரப்படுமாயின் வழக்கமான இம் மேலோட்ட நிலைகளினின்று விடுபட்டு உண்மைத் தமிழ் நலம் கருதிச் செயற்படுவது மிகமிக இன்றியமையாதது என்பதைப் பொறுப்பில் இருப்பவர்கள் உணர்தல் வேண்டும். செம்மொழியாகிய தமிழின் திறப்பாடுகளைத் தமிழராகிய நாம் மட்டுமல்லாமல் வெளிநாட்டினரும் உணர்ந்து போற்றும் வகையில் அவ்வகராதி அமைதல் வேண்டும். அதற்கான முன்முகப் பணிகள் விரைவில் தொடங்கப்படுதல் வேண்டும் என்பதைத் தமிழ்நாட்டரசுக்குச் சுட்டிக்காட்ட விழைகின்றோம். |