
|
சிறந்தது பயிற்றல்
- சிறுகதை
பொறிஞர் அகன், மாத்தூர். ஞாயிறும் மலர்ந்தது. காலை உணவும் முடிந்தது “பகல் உணவுக்கு மீன் வாங்கி வருகிறேன். மக்கள், மருமக்கள், பெயரன், பெயர்த்தியர் விரும்பி உண்பார்கள்” என மாறனிடம் கூறிவிட்டு மீன் அங்காடி சென்றேன். மீன், இறால் என நிறையவே வாங்கி வந்தேன். “மாறன் நீங்கள் சமையல் அறைப்பக்கமே போகவேண்டாம். மகள், மருமக்கள் பார்த்துக்கொள்வார்கள்” “சரிங்க..... அவர்கள் வந்திடுவார்கள். நான் திருவரங்கம் சென்று நண்பர் ஒருவரைக் கண்டுவிட்டு மாலை வருகிறேன்”, என்று கூறிவிட்டுப் புறப்பட்டார். பண்பாடு மிக்கவர் என மனத்துள் போற்றினேன். பத்து மணிக்கு முன்பாகவே ஒரு மகிழுந்து வந்தது. மூத்த மகனும், மருமகளும் பெயரன், பெயர்த்தியும். உடன் மருமகளின் பெற்றோரும்! வியப்போடும், மகிழ்வோடும் வரவேற்றேன். அவர்கள் வீட்டுள் நுழைந்து அமர்ந்த சற்று நேரத்திலேயே மேலும் இரு மகிழுந்துகள் வந்தன. மகள், இளையமகன் குடும்பமும், மருமக்களின் பெற்றோரும்! ஒருங்கிணைந்து இவர்கள் வந்துள்ளதன் நோக்கம் எதுவோ? என் றெண்ணியவாறே அன்போடு வரவேற்றேன். தேநீர் போட்டு அருந்தினர். பின், பகலுணவு ஆக்கும் பணியில் மகளிர் முனைந்தனர். ஆடவரெல்லாம் கூடத்தில் அமர்ந்து பேசி மகிழ்ந்தோம். பகலுணவு முடிந்தது. மீனுணவை விரும்பி உண்டனர். பின், ஓய்வெடுக்கவோ, தொலைக்காட்சி பார்க்கவோ செய்யாமல், என்னைச் சூழ்ந்து அமர்ந்து கொண்டனர் அனைவரும். வீடே மங்கலமாகத் தோன்றிற்று. என் விண்ணரசி இருந்து இதனைப் பார்த்திருந்தால், மிகவும் பூரித்திருப்பாள்! அன்பின் ஊற்றம் அவள்! “அப்பா, எப்படி பொழுதைப் போக்குறீங்க'' என்றான் என் மூத்தமகன். “பொழுதைப் போக்குகிறதா...? பொழுதே போத வில்லையே...! எழுத்துப்பணி, படிக்கும் பணி, தமிழர் மன்றக் கூட்டப்பணி, மூத்த குடிமக்கள் நலப்பணி , சூழல் காப்புப் பணி.... எனப் பல பணிகள்! மனத்திற்கு மகிழ்வாகவும், நிறைவாகவும் நாள்கள் செல்கின்றன.” “தமிழர் மன்றக் கூட்டத்திலும், பிற நிகழ்ச்சிகளிலும் தமிழ், இலக்கியங்கள் பற்றிப் பேசுங்கப்பா....சாதி மதங்கçeக் குறித்துத் தேவையில்லாமல் ஏன் பேசுறீங்க? நம்ம வெள்ளாளர் சங்கமும், பங்குச் சாமியாரும் மிகவும் கோபமாக இருக்கிறார்கள். எதற்கு வீண்வம்பு?” “எங்கே, எதைக்குறித்து, எவ்வாறு பேசவேண்டும் என நீ எனக்குப் பாடம் நடத்தத் தேவையில்லை.” என்றேன் சிரித்தவாறே “ நீங்க பேசுவதாலே என்ன ஆகப்போகுது? எவன் உங்கள் பேச்சைக் கேட்டு நடக்கிறான்? வீணாகப் பொழுதைக் கழிக்கிறீங்க! எந்தக் கூட்டத்திலும் பேச வேண்டாம். வீட்டிலேயே எதையாவது எழுதிக்கிழிங்க....!! என்றான் இளையமகன் விறைப்பாக! “பொதுச் சிக்கல்களில் தலையிடாமல் உங்கள் வேலையைமட்டும் பார்க்க வேண்டியதுதானே? சாதி, மதம் எல்லாம் இல்லாமலா நீங்கள் வாழ்ந்து, பிள்ளைகளுக்கும் வாழ்க்கை அமைத்துக்கொடுத்து இந்த அகவை வரை வாழ்ந்திருக்கிறீங்க?” என்றார் மருமகளின் தந்தை வளன். அமைதி அமைதி என, என்னையே நான் அமைதிப்படுத்திக் கொண்டேன் மனத்துள்ளே!” நான் எவருக்கும் கேடு செய்யவில்லையே? தமிழ்மக்கள் அறிவோடு சிறப்பாக வாழவேண்டும் அதற்குச் சாதி மதங்கள் இடையூறாக இருக்கின்றன என்று என் மனத்தில் உள்ள கருத்தைப் பிறருக்கும் சொல்கிறேன். ஏற்போர் ஏற்கட்டும்; ஏற்காதோர் எக்கேடோ கெட்டுத் தொலையட்டும்.” “இந்தப் பேச்சுத்தான் வேண்டாதது! நீங்கள் எப்படியோ எண்ணி, எப்படியோ வாழ்ந்துகொள்ளுங்கள். ஆனால் நம்ம சாதி, நம்ம மதம் குறித்து எதையும் பேசக் கூடாது.”என்றான் மருமகன். “என் கருத்தை மலையின் உச்சியிலிருந்தும் உரக்கக் கூறத்தான் செய்வேன். ஏற்காதோர் மறுத்துரைக்கட்டும். கருத்து மோதல் நிகழட்டும். அப்போது தான் கருத்துத் தெளிவு பிறக்கும்”. ""பெரிய சாக்ரதீசு என்ற நினைப்போ? சொல்றதைக் கேளுங்க. வீம்பு பண்ணாதீங்க... இது நல்லதுக்கு இல்லை” என்றார் முதல் மருமகளின் தந்தை. “எனக்குக் கட்டளை இட நீ யாரப்பா? வேளா வேலைக்குத் தீனி தின்று தூங்கி எழுந்து, சாணிபோட்டு, மீண்டும் தீனி தின்று வாழும் விலங்கல்ல நான். உணர்வுள்ள தமிழன். இப்படிக்குக் கூப்பாடுபோட்டு என்னை அடக்கவா வந்தீர்கள்? சாதி மதக் கழிவைக் காறித் துப்பிவிட்டு மானமுள்ள தமிழனாக வாழ்வதுதான் என் ஒரே நோக்கம். வீணாக என்வழியில் எவரும் குறுக்கிடவேண்டாம். இதில் எந்த உடன்பாட்டுக்கும் நான் இடங்கொடுக்க மாட்டேன். என் வழியில் வாழ விடுங்கள். நீங்களும் திருந்துங்கள். இனி இதைக் குறித்து எதுவும் பேச வேண்டாம்'' என்றேன் சினமற்ற, உறுதியான குரலில். இளைய மருமகளின் தந்தையார் அலை பேசியை இயக்கி எவரையோ அழைத்தார். பின், “அவர் வருகிறார். அவரே பேசட்டும்”- என்றார். இவர் வெள்ளாளர் சங்கச் செயலாளராம்! எல்லோரும் கூடிக் கலந்து பேசித் திட்டமிட்டவாறு என்முன் செயல்படுகின்றனர்! சற்று நேரத்தில் மிதியுந்து ஒன்று வந்தது. எங்கள் பகுதியின் கிறித்துவப் பங்குச் சாமியார் இறங்கிவந்தார். எல்லோரும் எழுந்து நின்று வணங்கினார். என்னைவிட அகவையில் மிகவும் இளையவரான அவரை, ‘வாருங்கள்’ என்றேன். என்னருகே ஓர் இருக்கையில் அமர்ந்தார். “என்ன நீங்க கோயிலுக்கே வருவதில்லையே.... கூட்டங்களில் நம்ம மதத்தை இழிவாகப் பேசுறீங்களே.... ஞானஸ்நானம், உறுதிப்பூசை, நற்கருணை, எல்லாம் பெற்றுள்ள பெரியவரான நீங்களே இப்படி இருப்பது நல்லா இருக்கா? விசுவாசம் தானே நம்மதத்தின் மூச்சு? உங்கள் அண்ணன் பாதரா இருக்கார்... தங்கையும் சிஸ்டரா இருக்கார்.... நீங்களா இப்படி மதவிரோதியா இருப்பது? இனியாவது திருந்தி மனஸ்தாபப்பட்டு, பாவசங்கீர்த்தனம் செய்து, நல்ல கிறிஸ்துவரா மாறுங்க.'' என்றார். (தொடரும்) |