
|
'தோள் கண்டார் தோளே கண்டார்'
(கட்டமைப்பு ஆய்வு) முனைவர். செ. வை. சண்முகம் பிணை : ஒரு நிலையில் அறு சீர் அடியை மூன்றாவது சீருக்குப்பின் ஒலி நிறுத்தம் அமைவதாகக் கொண்டு பிணை 3+3 என்ற முறையில் அமைவதாகக் கொள்ளலாம். இது எல்லா அடிக்கும் பொருந்துவதோடு, முதல் மூன்று அடிகளில் வருக்க மோனை நெடில், குறில் என்று (தோ/ தொ, தா/ த, வா/ வ) அமைவதாலும் கடைசி அடியில் அமைந்துள்ள இன மோனையும் (நெடில் /குறில் (ஊ, உ) உறுதிப்படுவதாகக் கொள்ளலாம். அப்படி இல்லாமல் முதல் அடியை 1+2+1+2 என்ற முறையில் நிறுத்திப் படித்தால் ஒவ்வொரு பிணைக்குள் மற்றொரு பிணை இருப்பதாக அமையும். ஆனால் இரண்டாவது 1+2+2+1 என்று கொஞ்சம் மாறுபட்ட முறையிலும், மூன்றாவது அடி 2+1+1+2 என்றும், நாலாவது அடி 1+2+2+1 என்றும் அமைந்து ஒவ்வோர் அடியும் மாறுபட்ட பிணைக்கட்டுப் பெறுவதாக அமையும். அப்போது பாட்டின் சந்தம் சிறிது மாறுபடும். பிணை பற்றி உள்ளுற உணர்ந்தே நாலடிப் பாடலை எட்டு வரியாக, அதாவது முதல் மூன்று சீரை ஒரு வரியாகவும், அடுத்த மூன்று சீரை உள்ளே தள்ளி மற்றொரு வரியாகவும் பதிப்பிக்கிறார்கள். இன்னும் சிலர் எட்டு அடிப்பாடல்போலவே 8 வரியாகவும் பதிப்பிப்பது உண்டு. இந்த முறை பக்திப்பாடல் மக்கள் பதிப்பில் காணப்படுகிறது. (உ.ம். திருவெம்பாவை, திருப்பாவை) அடி : ஆறு சீர் கொண்ட நாலு அடி என்ற முறையில் முதல் அடி ஒரு வாக்கியமும், ஒர் உவமைத் தொடரும் கொண்டுள்ளதால், அடி தன்னளவில் எதிர்பார்ப்பை உண்டாக்கும் நிலையில் பொருள் முற்றுப் பெற்றுள்ளதாகக் கருதலாம், இரண்டாவது இரண்டு வாக்கியம் என்ற முறையில் அமைந்து உம்மைத் தொடராக (கால், கை) இணைந்து செயல் உறுப்பு என்ற ஒரு பொதுப் பொருளை உணர்த்துவதாகக் கொள்ளலாம். மூன்றாவது அடி எழுவாயாக இருந்தாலும் பொதுநிலைத் திறனாய்வாகத் தனிவாக்கியமாகக் கருதும்படி அமைந்து பொருள் முற்றுப்பெறுகிறது. நாலாவது அடி ஒரு தனிவாக்கியம். அது திறனாய்வுக்குச் சமாதானம் கூறுவது என்ற முறையில் பொருள் அமையும். எனவே இந்தப் பாடல் அடியும் பொருளும் இணைந்து தொல்காப்பியர் குறிப்பிட்ட "யாப்பு' என்ற உறுப்புப்பெற்ற பாடலாக அமைகிறது. வண்ணம் : முதல் இரண்டு அடியிலும் இரண்டு மோனை அமைந்து நெட்டெழுத்தும் குற்றெழுத்தும் கலந்து சித்திர வண்ணம் பெற்றதாகக்கருதலாம். இரண்டாவது அடியின் இரண்டாவது பிணை முதல்சீர் வல்லிசை வண்ணம் (தடக்கை) பெற்றுக் கையின் ஆற்றலை ஒலிக்குறியீடாக அதன் வன்மையைப் புலப்படுத்துவதாகக் கருதாலாம். அப்படியே, மூன்றாவது அடியில் இரண்டாவது பிணையில் டகரம் நாமடி ஒலி (வடிவினை முடிய) அமைந்துள்eது. யாரும் இறைவன் திருவடியை முழுமையும் பார்க்கவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறியதாகக் கொள்ளலாம். ஏனைய அடிகளில் வல்லினமும் இடையினமும் மெல்லினமும் கலந்து வந்துள்ளதால் பாட்டு முழுவதும் மெல்லிய ஓசையே அமைகிறது. யாப்பும் பொருளும் : இராமனின் தோள், தாள், கை ஆகிய உறுப்புகளைக் கண்ட பெண்கள் அந்தந்த உறுப்புகளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் யாரும் அவனுடைய முழு வடிவத்தையும் பார்க்கவில்லை. அது இறைவனுடைய திருவுருவத்தைப் பார்த்தற்கு ஒப்பாகும். அதாவது இறைவனை யாரும் முழுமையாகப் பார்க்காததுபோல இராமனை யாரும் முழுமையாகப் பார்க்கவில்லை. இங்கு மூன்று உறுப்புகளின் வருணனையின் இடம் நிரப்புதல் வேறுபாடு கவனிக்கத் தகுந்தது. தோள், ஒர் அடிக்குள் மூன்று சீராலும், தாள் இரண்டடியில் அமைந்த ஆறு சீராலும் (இரண்டு பிணைகளாக) கை, ஒர் அடிக்குள் இருக்கும் மூன்று சீராலும் வருணிக்கப்பட்டுள்ள மாறுபாடு கவனம் பெறும். இராமன் கடவுள் போன்றவன் என்பதைப் பார்த்தவர்கள் மூலம் உவமையாக வெளிப்படுத்தியவர் உடல் உறுப்பு வருணனையிலும் கடவுளை ஒத்தவன் என்பதைப் புலப்படுத்தியுள்ளார். இறைவன் பெருமையைப் பேசுபவர்கள் இறைவன் திருவடியை மிகவும் சிறப்பித்துப் பேசுவார்கள். பெருந்தேவனார் முருகனின் திருவடியை முதலில் "தாமரை புரையும் காமர் சேவடி' என்ற குறுந்தொகைப் பாடலில் சேவடி தனிஅடியாக, 4 சீராகவும், மேனி, ஒளி ஆகியவை ஒரு அடிக்குள் குறைந்த சீராகவும் அமைந்துள்ளதும் திருவடியின் சிறப்பைக்காட்டும். அதுபோலவே, அப்பரின் 'குனித்த புருவமும்', என்ற பாட்டில், இனித்த முடைய எடுத்த பொற்பாதம் என்று திருவடியை நாலு சீராகவும், புருவம், சடை ஆகிய இரண்டையும் இரண்டு இரண்டு சீராகவும், வாய், மார்பு ஆகிய இரண்டையும் மூன்று மூன்று சீராகவும் அமைத்துள்ளதும் திருவடியின் தனிச்சிறப்பைப் புலப்படுத்தும் மேலும் மாணிக்கவாசகர் திருவெம்பாவையின் கடைசிப்பாட்டில் 7 அடிகளில் திருவடியைப் பாராட்டிப் புகழ்ந்துள்ளார். அந்த முறையில் பார்க்கும்போது இராமன் திருவடியை அதிகச் சீரால் பாடி அவன் கடவுளின் திருவுருவம் என்பதை மறைமுகமாகப் புலப்படுத்தியுள்ளார் என்று கொள்ளலாம். முடிவுரை : இந்தப் பாடல் தொடைநயமும் வண்ணநயமும், மொழிநயமும், பொருள்நயமும் பொருந்தி, கருத்துரைக்கும் பாங்கால் கருத்து வளர்ச்சி அடைந்து கடைசியில் ஓர் உவமை மூலம் பொருளின் சிறப்பு உயர்த்தப்பட்டுள்eது. இது பலராலும் பலமுறை எடுத்துப் பேசப்படும் சிறந்த பாடலாக அமைகிறது. (முற்றும்) |