
|
வினாதலும் விடுத்தலும்
1.) சிவகாசியிலிருந்து வெளிவரும் எசு. பி. பி. போசுட் எனும் சிற்றிதழ், ஞானவெட்டி நவரத்தின சிந்தாமணி, பஞ்சரத்தினத் திருப்புகழ், உப்புசாத்திரம் ஆகிய நூல்களையும் திருவள்ளுவர் எழுதியிருக்கிறார் என்று கூறி யுள்ளதே. அது சரியா?
இந்நூல்கள் பற்றி எதுவும் தெரியவில்லை. இவற்றின் பெயர்கள் திருவள்ளுவர் காலத்துப் பெயர்களாக இல்லை. சித்தர் பாடல்களில் திருவள்ளுவர் ஞானம் என்ற நூல் உண்டு. ஞானாமிர்தம் என்ற நூல் பற்றி அபிதான சிந்தாமணி கூறுகிறது. திருக்குறளைத் தவிர திருவள்ளுவர் பெயரால் வழங்கும் நூல்கள், கதைகள் அனைத்தும் அடிப்படையற்றவை. சிலர் தம் நூல் நிலைத்து வாழ வேண்டும் என்று, அகத்தியர், திருவள்ளுவர், கபிலர், ஒளவையார், கம்பர் முதலிய புகழ்பெற்ற புலவர்கள் பெயரால் இயற்றியதாகக் குறிப்பிட்டு விடு கிறார்கள். இவை அத்தைகைய நூல்களாகவும் இருக்கலாம். - இரா. தி. 2.)கருப்பு - வற்கடம், பஞ்சம், இது ஒரு தெளிவற்ற நிலையே. கரி - அடுப்புக்கரி. கரிந்தது - எரிந்து கருமையானது (அக.75) கரி - யானை (கருமையால் பெற்ற பெயர்) கரியன் - கருமையானவன், கருங்குழல், கரும்பாம்பு, கருங்குரங்கு போன்ற வழக்குகள் சங்ககாலமுதலே இருந்து வந்தாலும், கரு என்பதனடியாகப் பிறந்த கார் என்பது தவிரப் பிற சொற்களைத் தொல்காப்பியத்தில் காணமுடியவில்லை. தொல்காப்பியர் வெகுளிக்குரிய கறுப்பு என்ற சொல்லே நிறத்தையும் உணர்த்துவண்டு என்கிறார் (உரி. 76) கறுப்பு - கருமை என்கிறது பிங்கலந்தை. சான்றோர் வழக்கில் இருவகையாக இருந்து வரும் சுறுசுறுப்பு-சுருசுருப்பு, முரிதல்-முறிதல், முதலிய சொற்கள் போலக் கறு - கரு என்ற இரு வடிவச் சொற்களிலிருந்தும் பிறந்த சொற்களும் சான்றோர் ஆட்சியில் மயங்கி மரபு நிலையைப் பெற்று நூல்களில் இடம் பெற்றிருக்கலாம் என்று கருதுகிறேன். எனினும் இக்காலத்தில் கறுப்பு என்பது வெகுளிப்பொருளில் ஆளப்படுவதில்லை. கருமை என்ற நிறப் பொருளில் ஆளப்படுகிறது. - இரா. தி. 3.) 1. முனைவர் பட்டம், முனைவர்ப்பட்டம் - இவற்றுள் எது சரி? எவ்வாறு? என்னும் நூற்பாவின் அடிப்படையில் "ஏகாரக்குறுக்கம்' என்ற ஒன்றைக் கருதலாமா? விளக்க வேண்டுகிறேன்.
1. முனைவர் பட்டம் என்பதே சரி. 2. குறுக்கம் என்பது ஒரே சூழ்நிலையால் யாண்டும் குறுகியே ஒலிக்கும் ஒரே வகையான எழுத்து மேற்கண்ட நூற்பாவில் கூறிய ஏகாரம் ஓரளபாகக் குறுகுவதும் குறுகாமல் ஈரளபாக நிற்றலும் ஆகிய இரண்டியல்புகளையும் ஏற்கும் என்றாகிறது. மேலும் நச்சர் ஏ குறுகி ஒலிப்பதையே ஏற்கவில்லை. இந்நூற்பாவிற்கு இவ்வேகாரம் 2 மாத்திரையுடன் மேலும் ஒரு மாத்திரை சேர்ந்து 3 மாத்திரையாக ஒலிப்பதும் உண்டு என்கிறார், இருவரும் 2, 3, என இரண்டு வகையாக வரும் என்கின்றனர். யாரும் ஈற்றசை ஏகாரம் ஒரு மாத்திரையாகக் குறுகி மட்டுமே ஒலிக்கும் என்று கூறவில்லை. எனவே குறுக்கம் என்று இதைக் கருதுவதற்கே இடமில்லை. இது குறுக்கத்துக்கு நேர்மாறானது. மேலும் குறுக்கங்கள் நெடிலின் பெயரால் கூறப்படுவதில்லை. - இரா. தி. 4.) 'பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே' எனப் பாரதி பாட்டுரைத்திருக்க, பொறிஞர் அகன் தன் பெயருடன் 'ஐயர்' என இணைத்தெழுதுகிறாரே!... அதுபற்றி... ஐயர் என்றால் உயர்ந்தவர் அல்லது தலைவர் என்பது பொருள். இப்பொதுச் சொல் பிற்காலத்தே ஒரு சாதியைக் குறிக்கும் சொல்லாக அச்சாதியினரால் எடுத்தாளப்பட்டது. இதை நாம் சாதிச்சொல்லாக ஏற்க வேண்டுவதில்லை. ஏற்றுக்கொண்டால் அச்சாதியரை உயர்சாதியினர் என்று ஒப்புக்கொண்ட தாகிவிடும். ஆதலின், சாதித் தொடர்பின்றி, அறிவாலோ, கல்வியாலோ, பண்பாட்டாலோ உயர்வுக்குரியவர் தம் தகுதியைக் காட்ட அச்சொல்லை எடுத்தாள்வதில் பிழையில்லை. - ம. இலெ. தங்கப்பா. 5.) அ) 'தமிழ்க்காக, தமிழுக்காக' இரண்டில் எது சரி? இரண்டும் எழுதலாமா? விளக்க வேண்டுகிறேன். ஆ) 'தீர்ப்புக் கூறினார்' வன்றொடர்க் குற்றியலுகரம் என்பாதல் ஒற்று மிகுந்ததா? 'தீர்ப்பைக் கூறினார்' இரண்டாம் வேற்றுமை விரியில் ஒற்று மிகுந்தது. "தீர்ப்பு கூறினார்" என்று இரண்டாம் வேற்றுமைத் தொகையில் ஒற்றுமிகாமல் எழுதலாமா?
அ. இரண்டும் எழுதலாம். பலுக்குதற்கு எளிமை கருதித் தமிழுக்கு என்பதே பெருவழக்காயுள்ளது. ஆ. தீர்ப்புக் கூறினார். தீர்ப்பைக் கூறினார் இரண்டிலும் தாங்கள் கூறியவாறே ஒற்றுமிகுந்தது. தீர்ப்பு கூறினார் என ஒற்றுமிகாமல் எழுதுவது பிழை. 6.) வயணங்கள் - என்ன பொருள்? ஈகியர், ஈகம் ஆகியன புதிய சொல்லாக்கமாக உள்ளன. இவற்றைத் தமிழிலக்கியங்களில் எந்தச் சொற்களால் வழங்கினர்?
வயணம் - விரிவு, விளக்கம். வளம் எனப்பொருள் கூறலாம். வயணமாகப் பேசினான், வயணமாக உண்டான் எனும் வழக்குகளைக் காண்க. ஈகியர், ஈகம் என்பன முறையே தியாகியர், தியாகம் என்ற வட சொற்களைக் குறிக்கும். இவை இக்கால உருவாக்கமே. தமிழிலக்கியங்களில் இவற்றுக்கு நேர்ச்சொற்கள் இருக்குமெனத் தெரியவில்லை. ஈகை என்ற சொல்லினடியாகப் பிறந்தது ஈகம். தன் மறுப்புடன் ஈதல் எனப் பொருள்படும். 7.) ஒவ்வொரு குலத்திலும் - இனத்திலும் நல்லவரும் உண்டு. தீயவரும் உண்டு. நடுவண் ஆட்சியரால் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. அழிந்து போகும். நிலையிலிருந்த பழந்தமிழ் இலக்கியங்களைப் பல பாடுபட்டு தேடியளித்த உ.வே. சா. பார்ப்பனரே; தமிழுக்குச் செம்மொழி என்ற தகுதியை அளிக்க வேண்டும் என்று முதன்முதலில் கூறிய பரிதிமாற்கலைஞரும் பார்ப்பனரே பல்லாண்டுகளாகச் செம்மொழிக்குரிய தகுதியோடிருந்த தமிழைச் செம்மொழியயன ஏற்றுக் செம்மொழித் தகுதியை அளித்து நடுவண் அரசே! எனவே ஒட்டுமொத்தமாக மேலட்டையில் தென்னாட்டுப் பார்ப்பனரும் தீயவட ஆட்சியரும் எந்நாளுமே தமிழர் ஏற்றமுறத்தாம பொறுக்கார். என்று எழுதுவது எவ்வாறு பொருந்தும்? தனிப்பட்ட பார்ப்பனர் சிலர் தமிழுக்கு ஆக்கம் புரிந்திருப்பது உண்மையே. அவர்கள் பாராட்டுக்குரியவர்கள். ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்ப்பன இனம் என்று பார்ப்பின் தமிழ்வழிக் கல்வி, தமிழ் ஆட்சிமொழி தமிழில் வழிபாடு கலப்பட மற்ற தமிழ், திருக்குறளை மனந்திறந்து ஏற்றுக் கொள்ளுதல், ஆரியச் சார்பற்ற தமிழ்ப் பண்பாட்டு மறுமலர்ச்சி போன்றவற்றுக்குப் பார்ப்பனர் எதிராகவே உள்ளனர். இந்து நாளிதழ் சிங்களரிடம் கைக் கூலிப் பெற்று ஈழத் தமிழர்க்கு எதிராகச் பொய்யும் பழியும் கூறித் தூற்றுகின்றது. பார்ப்பனர் நடத்தும் தமிழ் இதழ்கள் எவையேனும் உண்மைத் தமிழ்நலம் கருதிச் செயல்படுகின்றனவா? இந்தியக் குடிகளான அப்பாவித் தமிழ்மீனவர் சிங்களர்களால் கையால் முந்நூற்றுக்கும் மேல் சுட்டுக் கொல்லப்பட்டும், இந்திய அரசு வாய் திறவாதிருப்பது போன்ற கயமை உலகில் வேறெங்கும் உண்டா? இந்த ஆட்சியைத் தீய வட ஆட்சி என்னாமல் வேறென்ன சொல்வது? தமிழைச் செம்மொழியாக அறிவிப்பதற்கும் அவர்கள் படுத்தியபாடும் பண்ணிய சூழ்ச்சிகளும் வரலாற்று மெயம்மைகள். திருக்குறளைத் தேசிய நூலாக ஒப்புக் கொள்ளவும் தில்லி முன் வரவில்லை. ஈழத்தமிழரை அழிக்கத்தானே சிங்கள அரசுக்குக் கோடி கோடியாகக் கொடுத்தும் படைக்கருவி, வழங்கியும் தீயவட ஆட்சி தமிழர்க் கெதிராய்த் தலை விரித்தாடுகின்றது. மேலோட்டமாகப் பாராமல் ஆழ்ந்து பாருங்கள் உண்மை விளங்கும். - ம. இலெ. த. |