
|
பாவலர் இரா. செம்பியனாரின் அறிவியற்சொல் ஒலிவடிவங்கள் பற்றிய கருத்துரைகள்
வரலாற்றில் எழுத்துப் போராளிகள் (பேராசிரியர் இரா. மதிவாணன்) 3. களப்பிரர் காலத்து மூன்றாம் போராளிகள் களப்பிரர் காலத் தொடக்கத்தில் தென் பிராமி என்னும் தமிழகக் கோலெழுத்து முறையை மாற்றி வளைவாகத் திரித்து வட்டெழுத்தாக எழுதத் தொடங்கினர். அப்பொழுது மதம் பரப்ப வந்த சமண பவுத்த முனிவரும் வேள்வியைப் பரப்ப வந்த பார்ப்பனரும் மெய் எழுத்துகளுக்குப் புள்ளியிடாத முறையைத் தமிழில் புகுத்தித் தமிழ் இலக்கண மரபைச் சிதைக்கத் தொடங்கினர். இம்முயற்சி முதலில் சேர நாட்டில் தொடங்கியது. இதனை அறவே ஏற்றுக் கொள்ளாமல் பாண்டிய நாட்டுப் புலவர்கள் எதிர்த்தனர். பாண்டிய நாட்டு வட்டெழுத்தில் மெய் எழுத்துகளுக்குப் புள்ளியிடும் முறையைச் சிறிதும் தளர விடாமல் பின்பற்றினர். வட புலத்தாரின் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டது. அமைதிப் போராட்டத்தின் விளைவாகத் தமிழ்ப் புலவர்கள் தொடர்ந்து எதிர்த்து வந்ததால் சோழர் காலம் வரையிலும் தமிழ் இலக்கண மரபு காக்கப்பட்டது. சோழர் காலத்தில் வேறு எவராலும் கெடுக்க முடியாத வகையில் மெய்யெழுத்துக்குப் புள்ளியிடும் வழக்கம் நிலைபேறு எய்தியது. தமிழ்ப் புலவர்கள் இந்தப் போராட்டம் நடத்தியிருக்காவிட்டால் இந்தியைப் போன்று தமிழிலும் மெய்யெழுத்துப் புள்ளி பெறாமல் உருமாறிப் போயிருக்கும். இந்த வரலாற்றுப் பின்னணியைப் புரிந்து கொள்ளாத தொல்பொருளாராய்சியாளர்கள் அசோகனின் வடநாட்டுப் பிராமியிலிருந்துதான் தென்பிராமித் தமிழி எழுத்து வந்தது என்பது நகைப்புக்குரியது. களப்பிரர் காலத்தில் பாண்டிய நாட்டில் வட்டெழுத்து நிலவியபோது தமிழ் எழுத்துப் பாதுகாப்புப் போரில் வாகை சூடிய தமிழ்ப் புலவர்கள் வீரவணக்கத்துக்குரியவராகின்றனர். 4. இருபதாம் நூற்றாண்டில் ஐந்தாம் போராளிகள் கி.மு. 3000 முதலாகத் தமிழ் எழுத்துகளைத் தமிழ்ப் புலவர்கள் காத்து வருகின்றனர். தமிழ் எழுத்து மரபு என்றும் மாறாதது என்பதை நிலைநாட்டவே தொல்காப்பியர் எழுத்ததிகாரத்து முதல் இயலுக்கு நூன்மரபு என்று பெயரிட்டார். இலக்கணமரபு மாறினால் மொழி சிதைந்து அழியும் என்பதை. 'மரபு நிலை திரியின் பிறிதுபிறி தாகும்' எனத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். இருபதாம் நூற்றாண்டில் தமிழில் புகுந்த வடசொற்களையும் வடஎழுத்துகளையும் முற்றிலும் விரட்டத் தனித்தமிழ்ப் போராட்டம் தொடங்கியது. மறைமலையடிகள், பரிதிமாற் கலைஞர். தேவநேயப் பாவாணர் போன்ற புலவர் பெருமக்கள் வடமொழியின் பிடியிலிருந்து தனித்தமிழை முழுமையாக விடுவித்தனர். இவர்களுக்கும் முன்பே வீரமாமுனிவர், உமறுப்புலவர் போன்ற பெருமக்கள் தம் தமிழ்க் காப்பியங்களில் பிறமொழிகளுக்கு உரிய எழுத்துகளை முற்றிலும் தவிர்த்தனர் இருந்தும் என்ன பயன்? தமிழ் நாட்டுப் பாட நூல்களிலும் செய்தி ஊடகங்களிலும் பல்லவர் காலத்தில் நச்சு விதைகளாகத் தூவப்பட்ட வடமொழி எழுத்துகளில் ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ போன்றவை இன்னும் தம் நச்சுத் தன்மையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அண்மையில் பாவலர் செம்பியன், தமிழ்க் கலைச்சொற் படைப்பில் பிறமொழிச் சொல்லாட்சியை நீக்கினாலும் உலகமொழி எழுத்தொலிப்புகளைத் தமிழ் எழுத்திலும் காட்ட வேண்டிய சூழலில் பயன்படுத்தவதற்காகச் சில புதிய ஒலிப்புக் குறியீடுகளைத் தமிழ் எழுத்தில் சேர்த்துக்கொள்ள வழிவகை காட்டியிருக்கிறார். ஆங்கிலம் சில சிறப்புக் குறியீடுகளை (Diacritical Marks) சேர்த்துக் கொண்டு உலகின் எந்த மொழிக்குரிய எழுத்தொலிப்பையும் மிகத் தேவையான இடத்தில் பயன்படுத்த வழிவகை செய்திருக்கிறது. இந்த அணுகுமுறையைச் செம்பியன் கையாண்டிருக்கிறார். 6. ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ எழுத்துகளை விரட்டியடியுங்க உலக மொழி எழுத்தொலிப்புகளைச் சிறப்பாகச் சுட்டிகாட்ட வேண்டிய சூழல் நேர்ந்தால் தமிழ் எழுத்துகளில் சேர்க்கப்படவேண்டிய தனிக்குறியீடுகளைப் பின்வருமாறு அடையாளப் படுத்தியிருக்கிறார். இவற்றைத் தமிழறிஞர்கள் ஆராய்ந்து பார்த்தல் நலம்.
|