
|
தொல்காப்பியத்துட் கண்ட தலைவன் - தலைவியர்
புலவர் தி. சா. கங்காதரன், புதுச்சேரி(தொடர்ச்சி) 'காமக் கடப்பினுள் பணிந்த கிளவி ஊடல் தீரும்போது, தான் தலைவனை விரும்பாவிடினும் தன் நெஞ்சு அவனிடமே சென்றுவிடுவதாகக் கூறி ஊடலுணர்வாள் (161),- (தொடரும்). 'அருள்முந் துறுத்த அன்புபொதி கிளவி தலைவன் வரைந்த பின்முறை வதுவைப் பெரும்பொருள் கிழத்தியையும் இன்முகத்தோடு வரவேற்பாள், தன் புதல்வனைக் கோலம் செய்து அவள்பால் சீராட்டுதற்கு விடுப்பாள் (172), தலைவன் தன் பரத்தைமைக்கு வருந்திக் கலங்கியவிடத்தே, தன் ஊடலை நீக்கி அவனுக்கு நன்மை பயப்பனவற்றை எடுத்துக்கூறும் தாய்போல அறிவுரை கூறி, அவனைத் துயர் தீரத் தழுவிக்கொள்வாள் (173). 'தாய்போல் கழறித் தழீஇக் கோடல் (1) புதல்வற்பேறு வாய்க்கப்பெற்றிலாத் தலைவி, அப்பேற்றின் சிறப்புடைய பின்முறைவதுவைக் கிழத்தியையும் தன்னை ஒப்ப மதித்துத் தலைவனுக்கு எவ்வாற்றாலும் மனக்கவலை நேராதவாறு அவளோடு ஒற்றுமையுற மனையறம் பேணுவாள் (174). 'அவன்சோர்பு காத்தல் கடனெனப் படுதலின் தலைவனது பரத்தைமை பற்றி ஊடல் கொண்டவழியும். வழிமுறை மனைவியோடு தான் சிறப்பாக ஒற்றுமைமனம் கொண்டு இல்லறம் செய்தலைக் கூறும் வழியுமன்றிப் பிறவிடங்களிலெல்லாம் தலைவன் முன்னிலையில் அவள் தன்னைப் பற்றிப் பெருமையுறப் பேசிக்கொள்ளாத இயல்பினள் (180). 'தற்புகழ் கிளவி கிழவன்முன் கிளத்தல் கற்புக்காலத்தே ஊடல் நிகழுமிடத்துக் கோபத்தால் தலைவனைப் புகழ்ந்து கூறுதலுமுண்டு (228) 'நினழ்தகை மருங்கின். வேட்கை மிகுதியில். தலைவி தன்னைப் புகழ்வதோடமையாது பரத்தையைப் புகழ்ந்து கூறினும், அவள் ஊடலால் கூறும் கூற்று அவை எப்பதனைத் தலைவன் உணர்ந்து கொள்வான் (233). 'கற்புவழிப் பட்டவள் பரத்தை (யை) யேத்தினும் தலைவி வேறொரு தலைவியின் குணங்களை யெடுத்துக்கூறி, அவற்றைக் கேட்குமிடத்தே தலைவனது முகத்து நிகழும் வேறுபாடுகளைக் கொண்டு, அவன் குறிப்பினை நுனித்துணர்தலுமுண்டு (234). 'கிழவோள். பிறள்குண மிவையெனக் கூறிக் பரத்ததையர். தலைவனால் தமக்கு நிகழ்ந்துள்ள துயரங்களைத் தலைவிமாட்டு வந்து கூறவும்பெறுவர். அவர் கூறுவன கேட்டுத் தலைவி, சில போது, தலைவன் தன்னைப் போலவே பரத்தையரையும் துயருறச் செய்துள்ளமைக்கு மகிழ்தலும், சிலபோது தன் பிரிவிற்குப் பரத்தையர் உரிமை கொண்டாடி வருந்தும்வகை தலைவன் அவர்கள்தம் தொடர்பினைச் செறிவாகக் கொண்டுள்ளமைக்குச் சினத்தலும் உரியாள், பெரும்பான்மையும், பரத்தையர் உடனுள்வழித் தலைவன்பால் அன்னோரைப் பற்றிப் பேசாள். ஆயின் ஊடல் மிக்கவழி, "பரத்தையரை வருந்தவிட்டு இங்கு வந்து தங்குதல் வேண்டா, ஆண்டேயே சென்றுறைதல் தகும்" என்றற்றொடக்கத்தவாகத் தலைவனைக் கடிந்து கூறுதலும் ஒரோவழி உண்டு (235). 'தம்முறு விழுமம் பரத்தையர் கூறினும் தன் பரத்தையிற் பிரிவால் தலைவிக்கு ஊடல் நிகழ்ந்துழி, அதனைப் போக்க, தலைவன் தலைவியால் விடுக்கும் வாயிலோரிடம் அவள் அவன்பழிகளை வெளிப்படக் கூறுதற்குக் கூசுதலில்லை (241). 'வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்தல் தலைவன் தன்னை அழைத்துச் செல்லத் தலைவி தன் பதியிகந்து சென்று புறநகர்ப்பகுதியில் யாறு குளன்களில் நீராடியும் பொழிலில் விளையாடியும் மகிழ்ந்து மீடலுமுண்டு (191). தலைவன் பொருள் முதலிய குறித்துப் பிரிந்தவழி, முன்பு தலைவன் பிரிந்து சென்ற வழியிடை உடன்போக்கில் அவனுடன் சென்ற தலைவி அங்குள்ள மாவும் புள்ளும் துணையோடின்புற்றிருந்தமை கண்டனளாதலின், அவற்றைத் தலைவனும் கண்டு பிரிதல் துன்பத்தினை அஞ்சித் தான் மேற்கொண்ட வினையை முற்ற முடியாது தன் நினைவால் செயலை இடையில் விடுத்து மீண்டுவிடுவானோ என்றஞ்சி வருந்தலுமுண்டு (148). - (தொடரும்) |